Published:Updated:

`இது எங்களுடைய வேலை..!’ - ஹேங்மேன் பவான் ஜல்லார்ட் #NirbhayaCase

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணி மூலம் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தன் மகள் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஹேங்மேன்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடப் போகும் ஹேங்மேன்
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடப் போகும் ஹேங்மேன்

நிர்பயா குற்றவாளிகளை ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் கேங்மேன் இல்லாத காரணத்தால் மீரட் சிறையிலிருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேன் குற்றவாளிகளைத் தூக்கிலிட அழைக்கப்பட்டுள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

தற்போது, உத்தரப்பிரதேச சிறைத்துறை பவான் ஜல்லார்டுக்கு மாதம் 5,000 சம்பளம் வழங்கி வருகிறது. இதில்தான், பவான் ஜல்லாரின் குடும்பம் ஓடுகிறது. அரசுத் தரப்பில் சிறு வீடும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பவான் ஜல்லார்டின் மகள் வளர்ந்து திருமண வயதை எட்டியுள்ளார். நான்கு குற்றவாளிகளையும், தூக்கிலிட்டு அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தன் மகள் திருமணத்தை நடத்த பவான் ஜல்லார்ட் திட்டமிட்டுள்ளார்.

பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

இது குறித்து பவான் ஜல்லார்ட் கூறுகையில், ''உயிர்களைப் பறிக்கும் தொழில்தான் எனக்கு சாப்பாடு போடுகிறது. திகார் சிறைக்குச் சென்று பல முறை ரிகர்சல் பார்க்க வேண்டியுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட்டால் ஒரு தொகை கிடைக்கும். அதைக் கொண்டு என் மகளின் திருமணத்தை நடத்துவேன். என் சொந்த வீடுகூட சிதிலமடைந்துதான் கிடக்கிறது. அதைக்கூடப் பராமரிக்க முடியாத சூழலில் உள்ளேன்.

எனக்கு வேறு வேலை எதுவும் தெரியாது. பணம் சம்பாதிக்கவும் தெரியாது. 1989-ம் ஆண்டு என் தாத்தா காலுராமுடன் சேர்ந்து நானும் ஆக்ரா சிறையில் தூக்கிலிடும் பணியைச் செய்துள்ளேன்.

தூக்கு
தூக்கு

அப்போது எங்களுக்கு ரூ.200 சம்பளமாகத் தரப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை குற்றவாளிகள் சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோரை என் தந்தை மம்மு ஜல்லார்ட் தூக்கிலிட்டார். பொதுவாக, தூக்கிவிடுவதற்கு முன் ஹேங்மேன்கள் மது அருந்துவார்கள் என்று கூறுகிறார்கள். அது தவறு. இது எங்களுடைய வேலை. மது அருந்தாமல் நிதானத்துடன் இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முடிக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.