Published:Updated:

நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

`தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை’ என நடிகர் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில், நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது கடந்த சனிக்கிழமை அன்று தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா கலைஞர்கள் வரை பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை அதிக கவனம் பெற்றது.

அவர் தனது அறிக்கையில் நீட் தேர்வினை கடுமையாக எதிர்த்திருந்தார். ``நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது” என்றவர், அரசாங்கம் மற்றும் நீதித் துறை குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

``அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள். நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சூர்யா
சூர்யா

மேலும், ``நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணை நிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.

நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை உலுக்கும் மரணங்கள்

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டும் காணிக்கையாகக் கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி, தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களைப் பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஒரே நாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி, நாளையும் நடக்கும்.

நாம் விழிப்புணர்வுடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.. ” என்றார். இவரது இந்த அறிக்கை நேற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த நிலையில் உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாகக் கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ``சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை! - கடிதத்தின் அடிப்படையில் விசாரணை
அடுத்த கட்டுரைக்கு