Published:Updated:

`தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கிலும் இதே தான் நடந்தது!’- மேலவளவு படுகொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி

உச்சநீதிமன்றம் விதித்த தண்டனைக் காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்திருப்பது கண்டனத்துக்குரியது - நீதிபதிகள்

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து முருகேசன் உள்பட 6 பேரைக் கொன்ற கும்பல், மற்றோர் இடத்தில் ஒரு நபர் என மொத்தம் 7 பேரைப் படுகொலை செய்தது.

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தைக் காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, கடந்த 9-ம் தேதி மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொலையாளிகளின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனுவில், ” வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில் 13 பேரையும் விடுதலை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன்
ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன்

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, `உச்சநீதிமன்றம் விதித்த தண்டனைக் காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்திருப்பது கண்டனத்துக்குரியது' என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ` 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் அரசாணையைத் தாக்கல் செய்ய வேண்டும்; மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

இதேபோல், தர்மபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையும் குறிப்பிட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.