ஹார்வி வெய்ன்ஸ்டீன், அமெரிக்க சினிமா உலகில் முடி சூடா மன்னன். அமெரிக்க அரசியல், சினிமா, வர்த்தக உலகங்களில் முக்கியப் புள்ளி. யாரும் பகைத்துக்கொள்ள முடியாத பெரும்பலம். விரலசைவில் பலரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வலிமை. திரையுலகின் மிக மரியாதைக்குரிய ஆஸ்கர் விருதுகளின்போது, 1966-லிருந்து 2016 வரை, கடவுளுக்கு நிகராக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 34 பேர் நன்றி சொல்லியிருக்கிறார்கள். ‘அதே காலகட்டங்களில்தான் ஹார்வி வெய்ன்ஸ்டீன் எங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்’ என 87 பேர் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர்.

2017-ம் ஆண்டு, நடிகைகள் ரோஸ் மேக்கோவன், ஆஷ்லே ஜட் உட்பட பல பெண்கள் ஹார்விமீது பாலியல் புகார் எழுப்ப, அது ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் விரிவாக வெளியானது. ஹார்வியின் இந்த ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்ததும், அவரை ஆதரித்த அதிகார வர்க்கம் அவரை ஒதுக்கத் தொடங்கியது. சேர்த்திருந்த பணம், பெற்றிருந்த பலம் எதுவும் கைகொடுக்கவில்லை. புகார் வெளியான மூன்றாவது நாளே அவரது சொந்த நிறுவனமான வெய்ன்ஸ்டீன் கம்பனியிலிருந்து அதன் பங்குதாரர்கள் அவரை நீக்கினர். அவரின் மனைவி அவரை விட்டு விலகினார். அவருக்குக் கொடுக்கப்பட்ட கௌரவங்கள், விருதுகள், பதவிகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டன. அமெரிக்கத் திரைப்படச் சங்கங்கள் அவருக்குத் தடை விதித்தன. அவரது தயாரிப்பில் நடிப்பதை நடிகர்கள் தவிர்த்தனர். இப்படி ஹார்வி எனும் ஹாலிவுட்டின் சர்வாதிகாரி சரியத் தொடங்கியதும், அது உலகெங்கிலும் உள்ள பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அநீதிகளை வெளிப்படையாய்ப் பேசும் தைரியத்தைக் கொடுத்தது. அமெரிக்காவில் ‘வெய்ன்ஸ்டீன் எஃபெக்ட்’ என்றும், உலக அளவில் #Metoo என்றும் பெண்களுக்கான பாலியல் குற்றங்களுக்கு எதிரான இயக்கமாக, சமகாலத்தின் சக்திவாய்ந்த ஒரு ஆயுதமாக அது உருவெடுத்தது.

#MeToo என்பது Name & Shame-ஆகத்தான் இருந்தது. அதாவது பெண்கள் தங்களைப் பாலியல் ரீதியாகத் தொல்லை செய்தவர்களின் பெயரைச் சொல்லி அவரை அவமானத்துக்குள்ளாக்குவது. ஆனால் வென்ய்ஸ்டீன் விவகாரத்திலோ அது நீதிமன்ற வழக்குவரை பாய்ந்தது. 2018-ம் ஆண்டு மிரியம் ஹேலி, ஜெசிகா மேன் ஆகிய இரு பெண்களின் புகார்களின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது ஆகிய குற்றங்களுக்காக அவர்மீது குற்றவியல் வழக்கு பதியப்பட்டது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் ஹார்வி.

முதற்கட்ட விசாரணைகள், சாட்சியங்கள், நடுவர் (Jury) தேர்வு என இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் உலகமே உற்றுநோக்க, பிப்ரவரி மாத இறுதியில் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 12 பேர் கொண்ட நடுவர் குழு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி ஹார்விக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் இருபது ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

தீர்ப்பு வெளியான அதிர்ச்சியில் ஹார்வி வெய்ஸ்ன்ஸ்டீனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உடல்நிலை தேறியதும் அவரைச் சிறைக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது காவல்துறை. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாசாரம், பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் உலகமே அமெரிக்காவைப் பார்த்துக் காப்பியடிக்கும் #Metoo ஓர் உலகளாவிய இயக்கமானது அப்படித்தான்.

இந்நிலையில், அதன் சக்திவாய்ந்த ஒரு மனிதனைச் சட்ட ரீதியாக அமெரிக்கா தண்டிக்குமேயானால், உலகம் முழுவதிலும் அநீதிகளுக்கு எதிராக எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும் ஒரு மன உறுதியையும் அது விதைக்கும்.

ஆனால், இந்தியாவில் இன்றைய சூழலில், இப்படியான அதிசயங்கள் நிகழ்வது சந்தேகம்தான். பாதிக்கப்பட்ட பெண்கள் எரித்துக் கொல்லப்படும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் இன்றைய சூழலில், #Metoo எனத் தீர்க்கமாக எழுந்த பலரின் குரல்கள், நீதிமன்றம் காணாது, குரல்வளையிலேயே நசுக்கப்பட்டுவிட்டன. #Metoo என்பது ஒரு சமூக வலைதள விவாதமாகி, மழைக்கால ஈசலைப்போல சில நாள்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி, பிறகு நீர்த்துப்போய்விட்டது.

சாதி, மதம், இனம், பணம், பாலினம், கட்சி எனப் பிரிவினைக் கருவிகள்கொண்டு பலமும் பலவீனமும் இங்கு பகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒருவன் அந்த பலத்தினைக் கொண்டே அதிகாரக் களமாடுகிறான். அந்த பலத்தினைக் கொண்டே அஞ்சாமல் குற்றமிழைக்கிறான். அந்த பலத்தினைக் கொண்டே தண்டனையின்றித் தப்பித்துக்கொள்கிறான். இந்தியாவில் #Metoo எனும் ஹேஷ்டேகில் பெண்கள் அளித்த பேட்டிகள், புகார்களில் பலவும், குற்றம்சாட்டப்பட்ட ஆண்கள் மானநஷ்ட வழக்காகத் தொடரப்பட்டு முடங்கிப்போகின்றன. இந்நிலையில் #Metoo இயக்கம் இந்தியாவில் வெறும் கிளர்ச்சியாக இல்லாமல், ஒரு தீர்வு நோக்கிப் பயணிக்க வேண்டுமெனில், தவறிழைத்த ஒருவராவது சட்டரீதியாகத் தண்டிக்கப்படுவதே தொடக்கப்புள்ளியாக இருக்க முடியும்.