Published:Updated:

`ஹார்லி டேவிட்சன், புல்லட்’ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ள போப்டேவின் `பைக்’ காதல்!

எஸ்.ஏ.போப்டே மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.

அரவிந்த் போப்டே
அரவிந்த் போப்டே

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் மாதம் 17-ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் போப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ரஞ்சன் கோகாய் ஓய்வுக்குப் பின்னர் போப்டே தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். எஸ்.ஏ.போப்டே மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். போப்டேவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், போப்டே செய்தியாளர்கள் சந்திப்பின்போது பைக் மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்தியுள்ளார். ``நான் பைக் ஓட்டுவதை விரும்புவேன். நான் ஒரு புல்லட் வைத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் வெகு இயல்பாக பேசியவர், இந்தாண்டு தொடக்கத்தில் பைக் விபத்தில் சிக்கியது குறித்தும் கூறியுள்ளார். ஹார்லி டேவிட்சன் பைக்கின் சோதனை ஓட்டத்தின்போது பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சிறிது காலம் நீதிமன்றப் பணிகளில் இருந்து ஓய்வைக் கொடுத்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. நல்ல வேளையாக இந்த விபத்து பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். செய்தியாளர்கள், `மோட்டார் சைக்கிள் டைரீஸ்’ படம் குறித்து கேட்டதும் நீதிபதி ஆர்வமானார். அது சேகுவாரா படம் நான் சொன்னது சரிதானே என்றுள்ளார்.