Published:Updated:

கொரோனா சம்பந்தமான நீதிமன்றங்களில் பதியப்பட்ட சில வழக்குகளும்... அதன் தீர்ப்புகளும்!

கொரோனா காலத்து இந்திய நீதிமன்றங்கள்
கொரோனா காலத்து இந்திய நீதிமன்றங்கள்

கொரோனா சம்பந்தமாக பல வழக்குகள் நிலுவையில் இருக்க, சில வழக்குகளில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், சில வழக்கு விசாரணைகளில் மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டிருக்கின்றன நீதிமன்றங்கள்.

இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண் நீதிமன்றங்கள். உலகம் மிக இக்கட்டான சூழலில் இருக்கிறது. கனவில் கூட நினைக்காத பல விஷயங்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. உயிர்க்கொல்லும் வைரஸிடம் இருந்து, மருந்துகளைவிட 144 தடை போன்ற வலுவான சட்டங்கள்தான் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. மனித உயிர்களைக் காப்பதற்காக நம்முடைய பல சுதந்திரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மக்களுடைய சகல இயக்கமும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது, அதுவும் மக்களின் முழு ஆதரவோடு. இருந்தபோதும் இந்தியா முழு சர்வாதிகாரமாக மாறிடாமல் இன்னும் ஜனநாயக நாடக திகழ்வதற்கு நம் நீதிமன்றங்கள் முக்கியக் காரணம்.

இத்தகைய சூழலில், கொரோனா சம்பந்தமாக பல வழக்குகள் நிலுவையில் இருக்க, சில வழக்குகளில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், சில வழக்கு விசாரணைகளில் மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டிருக்கின்றன நீதிமன்றங்கள். இந்திய நீதிமன்றங்கள் எத்தகைய வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன, என்னென்ன தீர்ப்புகள், உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. என்பதைப் பார்ப்போம்....

supreme court
supreme court

# கொரோனா நோய் ஒருவருக்குப் பரவியுள்ளதா என கண்டறிவதே நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த வழி என பல நாடுகளின் உதாரணங்கள் சொல்கின்றன. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஷஷாங்க் தியோ சுதி எனும் வழக்கறிஞர், கொரோனா நோய் கண்டறியும் சோதனைகளை இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கட்டணமின்றி இலவசமாக செய்ய வேண்டும் என அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தியா முழுவதும் அரசு பரிசோதனைக் கூடங்கள் (LAB) மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றில் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

# கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக உச்ச நீதிமன்றம் எடுத்த மிக முக்கியமான முடிவு, இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் நான்கரை லட்சம் சிறைக் கைதிகளைப் பற்றியது. சிறைகளுக்குள் நோய் பரவாமல் இருக்க, தகுதியுள்ள கைதிகளை எல்லாம், முன்கூட்டியே விடுவிக்கவோ அல்லது பரோலில் விடவோ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை அடுத்து, நிரம்பி வழியும் இந்தியச் சிறைகளில் சற்று கூட்டம் குறைத்து, இந்தக் கொரோனா சமயத்தில் கைதானவர்களுக்கு ஜாமீனும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

 ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவம்

# கொரோனா வைரஸ் பரவலுக்கு இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்பதுபோல பரப்பப்படும் தகவல்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொடர்ந்து பல வகைகளில் இஸ்லாமியர்கள்தான் இந்த வைரஸ் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பரவுவதற்குக் காரணம் என்பதுபோல பரவிய பல்வேறு ஆதாரமற்ற, போலியான செய்திகளைத் தடுக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ஆதாரமாக சுகாதாரத் துறைச் செயலாளர் தினம் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசுவது மற்றும் பல்வேறு செய்தித் துணுக்குகள் ஆகியவை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு மதச் சாயம் பூசுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், நீதிமன்றம் தலையிட்டு இதைத் தடுக்க வேண்டும் எனவும், ஊடகங்கள் இது தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இதுமட்டுமன்றி, இது தொடர்பாக பல இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சுமார் 200 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து முறையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தப்லீக் ஜமாஅத்
தப்லீக் ஜமாஅத்

மேலும், இதேபோல ஒரு வழக்கு ஜமிஅத் உலிமா-இ-ஹிந்த் எனும் அமைப்பினரால் உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. அந்த மனுவில், கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தொடர்புபடுத்தி வரும் ஊடகச் செய்திகளுக்கு தடை விதிக்குமாறு கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து ஒத்திவைத்துள்ளது தலைமை நீதிபதி அமர்வு. இந்த வழக்கில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை; ஆகையால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், மேலும், ஊடக சுதந்திரத்தைப் பறிக்க முடியாது எனக் கூறியுள்ளது.

கொரோனா நோய்ப் பரவுதல் குறித்த வழக்குகளைத் தாண்டி, கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் நாடு தழுவிய ஊரடங்கு, மக்களுக்கு சில இன்னல்களை உருவாக்கியிருக்கிறது. அதுகுறித்து சில வழக்குகளும் நீதிமன்றத்தில் பதிவாகியிருக்கிறது.

# கொரோனா ஊரடங்கினால், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்து வசதி இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் வேறு வழியின்றி பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து வசதி செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடகா மட்டுமன்றி இந்தியாவின் ஊரடங்கு காலகட்டத்தின் முக்கியப் பிரச்னையாக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்து, இந்தியா முழுவதும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

# அரசு முழு ஊரடங்கு அறிவித்திருக்கும் இந்த இக்கட்டான சூழலில் தனியார் பள்ளிக்கூடங்கள் இந்த ஆண்டு கட்டணம் வசூலிக்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோல, வெளிநாடு வாழும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துவர அரசு முயற்சியெடுக்க வேண்டும், ஊரடங்கு சமயத்தில் காவல்துறையினர் சட்டத்துக்கு உட்பட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் பதியப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில், சில விநோதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

* வழக்கறிஞர் ஒருவர் நீதிபதிக்கு கொரோனா வியாதி வர வேண்டும் என்று திட்டியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கிறார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், நீதிபதி தீபங்கர் தத்தா, வழக்கறிஞர் அதிகரி என்பவரின் வழக்கு அவசரமற்றது எனக் கூறி விசாரிக்க மறுத்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார். கோபமடைந்த வழக்கறிஞர் அதிகரி, உடனடியாக நீதிபதியைப் பார்த்துக் கத்தி, அவருக்கு கொரோனா தொற்று வரும் என்று பொருள்படும்படி திட்டியதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்துக்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.

* பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஓஜா, சீன அதிபர் ஜின்பிங் கொரோனா நோயை பரப்பியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கும் தற்போது விசரணையில் இருக்கிறது. வழக்கறிஞர் ஓஜா, ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்து நாடு முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் தினம் ஒரு புதிய வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.

வழக்கறிஞர் ஓஜா
வழக்கறிஞர் ஓஜா
theprint.in

* கொரோனா ஊரடங்கு காரணமாக, பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் work from home முறையைக் கடைப்பிடிக்கின்றன. இதற்குப் பெரும்பாலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைக்கு ஜூம் (Zoom) எனும் செயலி பயன்படுத்தப்பட்டது. ஜூம் ஆப், (Zoom) தனிநபர் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில்லை எனவும், அந்தச் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஜூம் (Zoom)
ஜூம் (Zoom)

மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், ஒரு வழக்கின் அவசரநிலை, முக்கியத்துவம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மற்ற வழக்குகள், நிலைமை சீரான பிறகே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஆட்கொணர்வு மனு போன்ற அவசர வழக்குகள் மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல், ஊரடங்கு, மருந்துகள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றங்கள் கையாளுகின்றன. புதிய வழக்குகள் ஆன்லைனில் பதியப்படுகின்றன, டிஜிட்டல் நோட்டீஸுகள் இந்தியா முழுவதும் பறக்கின்றன.

வைரஸ் நம்மை கட்டிப்போட்டிருக்கலாம், ஆனால் தொழில்நுட்பம் இந்தியாவில் நீதியை நிலைநாட்ட உதவி கொண்டிருக்கின்றது.

அடுத்த கட்டுரைக்கு