Published:Updated:

நிலம்... நீதி... அயோத்தி - 'நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ப்பு!'

அயோத்தி
அயோத்தி

'பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டார்கள். ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்' என்னும் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு, ஜூனியர் விகடன் இதழில் 'நீதித்துறைக்கும் தேவை மதச்சார்பின்மை!' எனும் தலைப்பில் எழுதிய சிறப்புக் கட்டுரையின் ஒரு பகுதி இது: விரிவான கட்டுரையை படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2pdcVFr

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தை 1950-ல் கொண்டுவந்து, இந்தத் தேசத்தை நடத்திச் செல்லப்போவது மதச்சார்பற்ற அரசு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதை உறுதிப்படுத்தும் விதமாக 1976-ல் நமது நாட்டின் அரசை மதச்சார்பற்ற குடியரசு என்று அறிவித்துள்ளோம். மற்ற நாடுகளின் அரசுகள் சமயம் சார்ந்தவையாக தங்களை அறிவித்துக்கொண்டுள்ள நிலையில், கடந்த 70 ஆண்டுகளாக நாம் மதச்சார்பற்ற குடியரசாகத்தான் செயல்பட்டு வருகிறோம். ஆனால், பெரும்பான்மை மதத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்த நாட்டின் பன்முகத்தன்மையைக் குலைக்கும்விதமாக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. அந்தக் குழுவின் சதியால் நாம் இந்தத் தேசத்தின் தந்தையை இழந்ததுடன், கடந்த காலத்தில் பல்வேறு சமயம் சார்ந்த பூசல்களையும் இனவேறுபாடுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

நிலம்... நீதி... அயோத்தி - 'நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ப்பு!'

அண்ணல் மகாத்மா காந்தியைக் கொன்றதற்கு காரணமானவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்குத் தடைவிதித்ததிலிருந்து, அவர்கள் மீண்டும் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதற்கு எடுத்த பல முயற்சிகளில் ஒன்றுதான் ராமர் பிறந்த பூமியை மீட்பதற்கான பிரசார உத்தியாகும். அதில் அவர்கள் முற்றிலும் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது.

இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளதிலிருந்தே ஒரு விஷயம் நமக்குப் புலப்படும். இனி ராமஜென்ம பூமி பிரசாரத்தை எதிர்த்து யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப முடியாது என்பதே அது. அந்த அளவுக்கு சங் பிரசாரகர்கள் பெரும்பான்மை மக்களின் மூளையைச் சலவை செய்துவிட்டனர். அதே நேரத்தில், 'இந்தியாதான் எங்கள் பூமி. அங்கே தொடர்ந்து வசிப்போம்' என்ற உறுதிமொழியுடன் இங்கே வசித்துவரும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது.

உச்சகட்டமாக பாபர் மசூதி இடிப்பு என்ற நிகழ்வு நம் நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளி. உலக நாடுகளின் பார்வையில் நமது அரசின் மதச்சார்பற்ற தன்மையைக் குலைக்கும் விதமாக அந்த சம்பவம் அமைந்தது. இதையெல்லாம்விட நீதித்துறையின்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு முற்றிலும் தகர்த்துள்ளது. 'பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டார்கள். ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்' என்னும் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு குடிமக்களின் உரிமைகளைச் சட்டப்படி தீர்த்துவைக்க வேண்டும். அதைவிடுத்து, அரசியல்வாதிகள்போல் பிரச்னையைத் தீர்ப்பதற்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்வது, இதுவரை உச்ச நீதிமன்றம் சொல்லி வந்ததற்கு மாற்றான கருத்து மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஊன்றிக் கவனித்தால் சில விஷயங்கள் புலப்படும். 'பாபர் மசூதி கட்டப்பட்டு ஐந்து நூற்றாண்டுகள் அயோத்தியில் செயல்பட்டு வந்தது; அதற்கு கீழேயுள்ள கட்டுமானத்தில் இந்து கோயில்கள் இருந்ததற்கான தடயம் இல்லை; பிரச்னைக்குரிய இடத்துக்கு முதலில் வழக்குத் தொடுத்த நிர்மோகி அகாராவுக்கு உரிமை ஏதுமில்லை; ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வழக்கைத் தொடுக்க முடியாது' என்றெல்லாம் கூறியது, சட்டத்துக்கு உட்பட்ட பொருண்மைகள். ஆனால், 'அந்த இடத்தில் மொகலாயர் வருவதற்கு முன்பே இந்துக்கள் வழிபட்டு வந்தார்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அதே சமயத்தில், அந்த இடம் என்றென்றும் தங்கள் கைவசத்தில் இருந்தது என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டார்கள்' என்பது தவறான தீர்ப்பாகும்.

நிலம்... நீதி... அயோத்தி - 'நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ப்பு!'

என்றைக்கு ஒருவர் ஓரிடத்தில் சொந்தம் கொண்டாடி அதில் கட்டுமானத்தை எழுப்பி வழிபாடு நடத்திவந்ததை நிரூபித்து விட்டார்களோ, அத்தருணத்தில் அந்தச் சொத்தில் அத்துமீறி நுழைந்து உரிமை கோருபவர்கள் மட்டுமே தங்களிடம் சொத்து என்றைக்கும் கைவசம் இருந்தது என்பதை நிரூபிக்க கடமைப்பட்டவர்கள். இதற்கு மாற்றாக நிரூபணம் செய்ய வேண்டிய கடமையை தவறான கட்சியினரிடம் உச்ச நீதிமன்றம் மடைமாற்றம் செய்துள்ளது. இது சொத்து பற்றிய வழக்குகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளிலிருந்து திசைதிருப்பும் செயலாகும்.

சமய நம்பிக்கையின்படி இந்துக்களிடம் நிலத்தை ஒப்படைத்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதன் மூலம் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைத்தது தவறு. உச்ச நீதிமன்றத்தின் செயல், இந்திய நீதிமன்றங்கள்மீதும் அரசமைப்பு சட்டத்தின்மீதும் சிறுபான்மையினர் வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்க்கும்விதமாக அமைந்துவிட்டது. மீண்டும் ஒருமுறை அரசின் தவறான செயல்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தனது முத்திரையைக் குத்தியுள்ளதன்மூலம், தனது நம்பகத்தன்மையையே கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. அரசின் கபட நாடகங்களைக் கண்டிப்பவர்கள், இந்நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையை நம்புபவர்கள் ஒன்றிணைந்து, இந்தத் தீர்ப்பின் அடிப்படையை மாற்றுவதற்கு முன்வர வேண்டும். மதச்சார்பற்ற குடியரசின் நீதித்துறையும் மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!

- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு, ஜூனியர் விகடன் இதழில் எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > 'நீதித்துறைக்கும் தேவை மதச்சார்பின்மை!'

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR

அடுத்த கட்டுரைக்கு