கொரோனா காலத்திலும் ப.சிதம்பரத்தை பா.ஜ.க அரசு விடுவதாக இல்லை. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், ஜூன் 2-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தவிர்த்து மற்ற கீழமை நீதிமன்றங்கள் இயங்காத நிலையில் ‘இ-ஃபைலிங்’ மூலம் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே ஹேக்கிங் சர்ச்சைகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த மனுவையும் யாரும் ஹேக் செய்துவிடக் கூடாது என்பதில் சி.பி.ஐ மிக கவனமாக இருந்தது. அதனால், அவ்வளவு எளிதாக யாரும் கணிக்க மற்றும் கண்டுபிடிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்ட பாஸ்வேர்டுடன் இந்த இ-ஃபைலிங் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதனால் குற்றப்பத்திரிகையில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது குறித்த விவரங்கள் ரகசியமாகவே உள்ளன.
ஆனால், அதையும் தாண்டி மறுநாள் வந்த செய்தித்தாள்களில், ‘இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பணத்தில் இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட 12 நாடுகளில் சிதம்பரமும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரமும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்; 16 நாடுகளில் வங்கிக் கணக்குகளை சட்ட விரோதமாகத் தொடங்கியுள்ளனர்’ என்று செய்திகள் வலம்வரத் தொடங்கின.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் 305 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்காக நிதித்துறையின்கீழ் உள்ள வெளிநாட்டு முதலீட்டு முகமை சில தளர்வுகளையும் சலுகைகளையும் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வழங்கியது. அதற்காக கார்த்தி சிதம்பரம் பேரம் பேசினார். அதற்குக் கைம்மாறாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் சர்வீஸ் கட்டணமாக வழங்கப்பட்டிருக்கிறது’ என்பதுதான் சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு.
இதன் அடிப்படையில்தான் முதலில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்ட இழுபறிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது. 24 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு, டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர் களைச் சந்தித்த ப.சிதம்பரம் பின்னர் அவருடைய வீட்டுக்கு வந்தார். அவரைப் பின்தொடர்ந்த சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தையும் தொலைக் காட்சிகள் நேரலை செய்தன. சிதம்பரத்தைக் கைது செய்த சி.பி.ஐ அதிகாரி பார்த்தசாரதி ஒரு தமிழர். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
சி.பி.ஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிடும் என்ற நிலை வந்தபோது, அமலாக்கத்துறையும் களத்தில் குதித்து வழக்கு பதிவு செய்தது. ஐ.என்.எக்ஸ் மீடியாவின் அப்போதைய உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மொரீஷியஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்யச் சலுகை காட்டப்பட்டது. அதற்காக முறைகேடாகப் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இப்படி இரண்டாவது வழக்கு பதிவானதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டிசம்பர் மாதம் வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ப.சிதம்பரத்தின் உடல்நிலை மோசமான நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்துதான் 105 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு திகார் சிறையிலிருந்து விடுதலையானர் சிதம்பரம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கில் சி.பி.ஐ ஏற்கெனவே இரண்டு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. தற்போது அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், விரைவில் வழக்கு விசாரணையும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பணம் யாரிடமிருந்து, எப்படியெல்லாம் கைமாறியுள்ளது போன்ற விவரங்கள் விரிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். குற்றப்பத்திரிகை நகல் சிதம்பரம் தரப்புக்கு வழங்கப்பட்டால்தான் கூடுதல் விவரங்கள் வெளியே வரும்.
‘மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா பேக்கேஜ் சுத்த மோசடி அறிவிப்பு’ என்று ப.சிதம்பரம் தொடந்து ட்விட்டரில் தகவல்களைப் பதிவிட்டுவருவதும் மத்திய அரசை எரிச்சலடைய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் கையைக் கட்டிப் போடத்தான் கொரோனா காலத்திலும் அமலாக்கத்துறையை முடக்கிவிட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதுகிறார்கள்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கையும் ‘லைவ்’-ல் வைத்திருக்க முயற்சிகள் நடைபெறும் என்று கருதுகிறார்கள் வழக்கை உற்றுநோக்கும் மூத்த வழக்கறிஞர்கள்.
- டெல்லி பாலா