பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா? #DoubtofCommonMan

யாராக இருப்பினும் தனிமனித தாக்குதல் தவறானது. சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே தவிர, யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்குவது சட்டத்திற்குப் புறம்பானது.
விகடன் #DoubtofCommonMan பக்கத்தில் வாசகர் கதிரவன், "தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பெண் எம்.பி ஒருவரை ஒரு அரசியல்வாதி தகாத வார்த்தைகளில் பேசினார். பெண்களுக்கு எதிராக பொதுவெளியில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தனிச் சட்டம் ஏதும் உள்ளதா?" எனக் கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

இந்தக் கேள்வியை வழக்கறிஞர் ஜீவா முன் வைத்து விளக்கம் கேட்டோம்.
"அவமதிப்பு செய்தவர்களுக்கு 6 மாதம் முதல் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்."வழக்கறிஞர் ஜீவா

''சகமனிதனை கேலி செய்யாமல், உரிய மரியாதையுடன் நடத்துவதுதான் மனித மாண்பு. யாராக இருப்பினும் தனிமனித தாக்குதல் தவறானது. சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே தவிர, யாரையும் தனிப்பட்ட விதத்தில் தாக்குவது சட்டப்படி தவறானது. பெண்களுக்கு சமமான மரியாதை அளிக்கவேண்டியது கடமை.
பொது நிகழ்ச்சி அல்லது பொது இடங்களில் பெண்களைத் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவதோ, உருவம், உடலமைப்பைப் பற்றி கேலி செய்வதோ இந்திய தண்டனைச் சட்டம் 509 -ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கும் பட்சத்தில், அவமதிப்பு செய்தவர்களுக்கு 6 மாதம் முதல் 3 -வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்" என்றார் அவர்.
இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் பேசினோம்...
"பெண்கள் பொதுவெளியில் மட்டுமல்ல, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், சமூகத்திலும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் உடல்மொழியாலும் (சைகை), கண்ணசைவினாலும் பல நூற்றாண்டுகளாகவே அவமானப்படுத்தபட்டேவருகின்றனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல் எனப் பல்வேறு தளங்களில் நம் பெண்கள் உயர் பதவியிலிருந்தாலும், கோலோச்சினாலும் ஆணாதிக்கம் என்பது அனைத்து தளங்களிலும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், ஆணாதிக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவே தோன்றுகிறது.

சமீபத்தில், ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க -வை சேர்ந்த கரு. நாகராஜன் என்பவர், எம்.பி ஜோதிமணியை தரக்குறைவாகப் பேசினார். இது, பொதுவெளியில் ஒளிபரப்பானது. ஆனால், அது கடும் கண்டனத்துக்கு ஆளான பிறகுகூட, கரு.நாகராஜனோ அவர் சார்ந்த கட்சியோ, சிறு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே அறம். எதிர் தரப்பினரின் கருத்து மோசமாக இருக்கும்பட்சத்தில், அதை எதிர்க்கும் உரிமை மட்டுமே மற்றொரு தரப்பினருக்கு உண்டு. கருத்து தெரிவித்தவரை தனிப்பட்ட விதத்தில் தாக்குவது அறமன்று. தனி மனித தாக்குதல் என்பது மிகப் பெரிய வன்முறை. இவ்வாறான தாக்குதல்கள், சமூகத்தில் செயல்படும் பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் மீதும் கட்டவிழ்க்கப்படுகின்றன. பொதுவெளியில் தனிமனித தாக்குதலுக்கும், அவதூறுகளுக்கும் ஆளாகும் பெண்களுக்கு உறுதுணையாக, பாதிப்படையச் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒற்றுமையாக முன் வரவேண்டும்.
"விஞ்ஞானம், தொழில்நுட்பம், அரசியல் எனப் பல்வேறு தளங்களில் நம் பெண்கள் உயர் பதவியிலிருந்தாலும் ஆணாதிக்கம் என்பது அனைத்து தளங்களிலும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது."பாலபாரதி
மேலும், தற்போது பொதுவெளியில் பெண்களோ ஆண்களோ திருநங்கைகளோ... யாராகினும் அவர்களைத் தகாத வார்த்தைகள் கொண்டு தாக்குவது குற்றம். சட்ட நடவடிக்கையாக அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அப்புகாரின் அடிப்படையில் அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறான பிரச்னைகளுக்கு, தண்டனைகள் இன்னும் பலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களின் மீதான தகாத வார்த்தைப் பிரயோகம் என்ற வன்முறை நிறுத்தப்படும்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
