Published:Updated:

அயோத்தி உட்பட 5 முக்கியத் தீர்ப்புகள்... ஓய்வுக்குள் அறிவிப்பாரா ரஞ்சன் கோகாய்?

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். நவம்பர் 17 அன்று ஓய்வுபெற இருக்கும் அவரைப் பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட் இங்கே...

இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு ஒருவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்க முடியாது. நீதித்துறையில் புதிய சீர்திருத்தங்களால் பெரும் மாற்றங்கள் படைக்கப் போகிறார் என்ற நம்பிக்கையோடே அவரது பதவியேற்பு பார்க்கப்பட்டது. அப்படி, தலைமை நீதிபதி ஆவதற்கு முன்னரே நீதித்துறையில் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்து வரலாறு படைத்தவர் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

நீதிபதிகள் போராட்டம்
நீதிபதிகள் போராட்டம்

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மூத்த 4 நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகியோர் நீதித்துறை நிர்வாகத்தில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். மூத்த நீதிபதிகள் நால்வர் பொதுவெளிக்கு வந்தது இந்திய நீதித்துறையில் வரலாற்றுச் சம்பவமானது. இதனிடையே, இப்படி எதிர்ப்புத் தெரிவித்த பிறகும், ரஞ்சன் கோகாய் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவாரா என்கிற கேள்வியும் எழுந்தது. ஒருவேளை ரஞ்சன் கோகாய் தலைமை இடத்துக்கு நியமிக்கப்படவில்லை என்றால், எங்கள் புகார்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்றனர் அந்த நால்வர். ஆனால், எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ரஞ்சன் கோகாயை தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்துவிட்டு ஓய்வு பெற்றார் தீபக் மிஸ்ரா.

எந்த நிர்வாகத்தைச் சரியில்லை என்று குற்றம் சாட்டினாரோ, அதே நிர்வாக குதிரையின் லகானைக் கையில் ஏந்தி தலைமையிடத்தில் அமர்ந்தார் ரஞ்சன் கோகோய். சீறிப்பாயும் என்று எதிர்பார்த்திருக்க, சற்று மெதுவாகதான் பயணத்தை மேற்கொண்டது அந்தக் குதிரை.

Supreme Court
Supreme Court
``தேவைப்பட்டால் காஷ்மீர் செல்வேன்!” - தலைமை நீதிபதி கோகோய் அதிரடி

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரின் தந்தை கேசாப் சந்திர கோகாய் அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அஸ்ஸாமின் திப்ருகாரில் பிறந்த ரஞ்சன் கோகாய், வரலாறு பாடத்தில் முதுகலை முடித்து பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் 1978-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

2001-ம் ஆண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி, 2010-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணிமாற்றம், 2011-ம் ஆண்டு அதே உயர்நீதிமன்றத்துக்குத் தலைமை நீதிபதி, 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி என தன்னுடைய பணியில் அடுக்கடுக்காக உயரங்களைத் தொட்டவர் ரஞ்சன் கோகாய்.

நீதிபதி தீபக் மிஸ்ரா
நீதிபதி தீபக் மிஸ்ரா

தீபக் மிஸ்ரா தன்னுடைய பதவியின் இறுதிக் காலத்தில், ஆதார், சபரிமலை, திருமணம் தாண்டிய உறவு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் போன்ற அதிமுக்கிய தீர்ப்புகளை வழங்கினார். இந்தத் தீர்ப்புகளைச் சற்று ஆராய்ந்தால், இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் மிக முக்கிய அம்சங்களை இவை கொண்டிருந்ததை அறியமுடியும். அவரின் சாட்டையடித் தீர்ப்புகள் மதம், பாலினம், தனித்துவம், அடையாளம் என்று 130 கோடி இந்தியர்களின் வாழ்வை நேரடியாக தொடவல்லதாக அமைந்தது. அதேபோல, தற்போது ரஞ்சன் கோகாய் தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறார். சில முக்கியமான வழக்குகளின் தீர்ப்பை எதிர்நோக்கி நாடே காத்திருக்கிறது. அவற்றில் ஐந்து வழக்குகளின் விவரங்கள் பின்வருமாறு...

1. அயோத்தி

27 ஆண்டுகள் கடந்து, பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று கோருபவர்களுக்கா அல்லது பாபர் மசூதிக்குச் சொந்தமான இடம் என்று கோருபவர்களுக்கா என்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கான நேரம் வந்துவிட்டது. டிசம்பர் 10-ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது அயோத்தி. இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் அயோத்தி தீர்ப்பு இந்திய வரலாற்றில் அதிமுக்கியமான தீர்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

2. ரஃபேல் வழக்கு

ரஃபேல் வழக்கில், ரஃபேல் வாங்குவதில் முறைகேடு இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மத்திய அரசுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்ததை அடுத்து, அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு, முன்னாள் அமைச்சர்கள் யஸ்வந்த் சின்ஹா, அருண் சவுரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த மனு மீதான விசாரணை முடிந்து, அவ்வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ரஞ்சன் கோகாய் இறுதித் தீர்ப்புகள் வரிசையில் இந்த தீர்ப்புக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றது.

3. ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அமேதியில் பிரசாரம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, "ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் சௌக்கிதார் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என அறிவித்துவிட்டது” என்றார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விஷயத்தில் "உச்ச நீதிமன்றம் திருடன் என்று சொன்னதாக நான் சொன்னது தவறுதான்” என்று ராகுல் சொன்ன நிலையில் வழக்கு விசாரணை இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த வழக்கிலும் ரஞ்சன் கோகாய் அடங்கிய பென்ச் தீர்ப்பு சொல்லக் காத்திருக்கிறது.

4. சபரிமலை தீர்ப்பு மறுசீராய்வு மனு

கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த தீபக் மிஸ்ரா அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீதான மறுசீராய்வு மனு முடிவுக்கு வந்து தற்போது தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. பாலின சமத்துவத்துக்கு வித்திடும் தீர்ப்பென ஒரு சாராரும், மத நம்பிக்கைகளைக் குலைக்கும் தீர்ப்பென மறுசாராரும் கருத்துகளை முன்வைக்க, உச்சநீதிமன்றம் இந்த முறை எந்தப் பக்கம் சாயும் என நாம் சற்று பொறுத்திருந்தால் அறிந்துகொள்ளலாம்.

5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பும் இறுதித் தீர்ப்புகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவை மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் சில முக்கிய தீர்ப்புகள் மட்டுமே. இவற்றைக் கடந்தும் பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்து அவை தீர்ப்பிற்காகக் காத்திருக்கின்றன.

கடந்த 13 மாதங்களில் இவர் செய்தவை என்ன?

பதவி இறுதி நாள்கள் இருக்கட்டும். கடந்த 13 மாதங்களில் அவர் என்னவெல்லாம் செய்தார், என்னவெல்லாம் நடந்தது என்பதும் கூட மிக முக்கியமானது.

கேரள இளம்பெண் சவுமியா கொலை வழக்கில் தீர்ப்பு குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விமர்சிக்கும்போது, `தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும்' என்றார். கட்ஜு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி கட்ஜுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் கோகாய். அவர் மன்னிப்பு கேட்ட பின்னரே இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. குஜராத் அரசுக்கு எதிராக ரிலையன்ஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கு, ஆருஷி கொலை வழக்கு மற்றும் கன்னையா குமார் வழக்கு ஆகிய வழக்குகளை விசாரித்த அமர்வுகளில் முக்கிய பங்காற்றியவர் கோகாய். ஆனால், இவையெல்லாம் அவர் தலைமை நீதிபதியாவதற்கு முன்பு... அப்போதெல்லாம் சரவெடியாய் இருந்தவர், தற்போது வரையான பதவிக் காலத்தில் சத்தமின்றியே இருக்கிறார்.

Ranjan Gogoi
Ranjan Gogoi
Vikatan

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், ஒரே வாரத்தில், மூன்று இடங்களுக்குப் பணிமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணியிலிருந்து நீக்கியதாகவும் நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண் புகார் அளிக்க, மரபை மீறி தலைமை நீதிபதியே இந்தப் புகாரை விசாரித்தார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி மீது அவதூறு பரப்ப தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் பேரம் பேசினார் என்றார். வழக்கறிஞரின் இந்தப் புகார் தொடர்பான வழக்கு, அந்தப் பெண்ணின் புகார் மீது உட்குழு விசாரணை என்று இந்த விவகாரம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி பயணித்தது. இறுதியில் 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்ற விசாரணைக் கமிட்டி புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளிலிருந்தும் அவரை விடுவித்தது.

`முதல் முறை...’ மனிதர்! 

`முதல் முறை ' என்ற வார்த்தைக்கும் ரஞ்சன் கோகாய்க்கும் ரொம்ப நெருக்கம், முதல் முறை வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்தது, முதல் முறை நீதித்துறை நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தது, முதல் முறை ஒரு முன்னாள் நீதிபதி மீது அவமதிப்பு தொடர்ந்தது எனப் பல அதிரடிகளைச் செய்தவர். அதேபோல முதல் முறை ஒரு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் வந்த சங்கடமும் இவருக்குத்தான் நிகழ்ந்தது.

ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

இந்த விசாரணையில் ஏற்பட்ட குளறுபடிகள் ஏராளம். "ரகசியமாக நடத்தப்படும் விசாரணையில் என்னுடன் வழக்கறிஞர் இருப்பதையும் உதவி நபர் இருப்பதையும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தனியாக விசாரணையைச் சந்திக்க எனக்குப் பயமாக உள்ளது" என்று புகார் அளித்த பெண் விசாரணையிலிருந்து விலகினார். அவர் இன்றியே விசாரணை நடந்தது. பல கேள்விகளுக்கு விடை அளிக்காமலேயே, விஷயம் முடித்துவைக்கப்பட்டது. எஸ்.ஏ. போப்டே தலைமையிலான நீதிபதிகள் விசாரணைக் குழுவும், தலைமை நீதிபதியும் சில விஷயங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சைக்குள்ளான விசாரணை முறைகள், அதைச் சுற்றிய சதிக் குற்றச்சாட்டுக்கள், மேம்போக்கான விசாரணை, விசாரணை மீதான அவநம்பிக்கை எனப் பல விஷயங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் பதில் அளிக்க வேண்டியிருக்கும் என்றனர் விமர்சகர்கள்.

The Collegium system is one where the Chief Justice of India and a forum of four Senior- most Judges of the Supreme Court recommend appointments and transfer of judges.
Vikatan

பெரும் எதிர்பார்ப்புகளோடு பதவிக்கு வந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான நம்பிக்கை, பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது கூட குறையவில்லை. ஆனால், அதை அவர் கையாண்ட விதத்தில் அந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்பட்டது என்பதே உண்மை. அதைத் தலைமை நீதிபதிதான் பிற நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனும் `master of roster' முறையை அப்படியே மாற்றமின்றி தொடர்ந்தது, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பொறுப்பிலும் முதன்மை வகித்து அந்த முறையை மாற்றாமல் தொடர்ந்தது என அவர் எதையெல்லாம் 2018 ஜனவரி மாதம் எதிர்த்து, வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று குரல் கொடுத்தாரோ, அதிகாரம் வந்த பிறகு அதையே இவரும் தொடர்ந்தார். தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி பணிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மைக்கு அப்படியே எதிர்ப்பதத்தில் நின்று, ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் செயல்பட்டதும் நாம் அறிந்ததே.

சொல்லிக்கொள்ளும் வகையில் நிர்வாகத்தில் ரஞ்சன் கோகாய் கொண்டு வந்த மாற்றங்கள், தங்களுடைய வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்கக் கோரும் வழக்கறிஞர்களின் 'mentioning' எனும் முறைக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தது, நீதிபதிகள் எமர்ஜென்சி விஷயங்களுக்காக மட்டுமே விடுமுறை எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதித்தது போன்றவையே. இவை தவிர்த்து பதவியேற்றதும் உடனடியாக நீதிபதிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அதன் செயல்பாடுகளில் வீரியம் இல்லாமல் போனதே யதார்த்தம்.

கோகோயால் பரிந்துரைக்கப்பட்ட பாப்டே... அடுத்த தலைமை நீதிபதி எப்படிப்பட்டவர்?

"சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்கள் சேவை செய்வதற்கு நீதித்துறையில் மாற்றம் மட்டும் போதாது. புரட்சி வேண்டும்" - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் மிகப் பிரபலமான வாக்கியங்கள் இவை. அவர் நீதிபதியாகப் பதவி வகிக்கும் இன்னும் சில தினங்களில் வேலை நாள்கள் 8 தான். அந்த 8 வேலை நாள்களுக்கு மேற்சொன்ன வழக்குகளில், நெறி வழுவாது, நீதி மறையாது, சமரசங்களுக்கு ஆட்படாது அவர் அளிக்கப் போகும் புரட்சிகரமான தீர்ப்புகளில்தான் அவரது தலைமையின் வெற்றியோ தோல்வியோ அடங்கியிருக்கிறது. காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு