Published:Updated:

தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் அறிவிப்பு கண்துடைப்பே!

2013-ம் வருடம் மதுரை வக்கீல்கள் போராட்டக்களத்தில் இறங்கினார்கள். காரணம், ஒரு வக்கீல் தனது வாதத்தைத் தமிழில் எடுத்துவைத்தபோது விசாரித்த நீதிபதி அதற்குத் தடைவிதித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

‘தமிழுக்கே தடையா?’ என்று கேள்விஎழுப்பி சாகும்வரை உண்ணாவிரதத்தில் இறங்கினர் வக்கீல்கள். அதைக் கேள்விப்பட்ட தலைமை நீதிபதி, வக்கீல்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக ‘வக்கீல்கள் விருப்பப்படும் மொழியில் வாதாடலாம்’ என்று திறந்த நீதிமன்றத்தில் கூறினார். போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தமிழுக்குத் தடை விதித்த நீதிபதியின் உத்தரவும் திருத்தப்பட்டது. ஆனால், இதைப் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

கே.சந்துரு, 
மேனாள் நீதிபதி, சென்னை 
உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதே சமயத்தில் மொழிவாரி மாநிலங்களை அமைப்பதற்கு முற்பட்ட மத்திய அரசு, மாநிலங்களின் ஆட்சி மொழியை அங்குள்ள உயர் நீதிமன்றங்களில் கூடுதல் அலுவல் மொழியாக மாற்றுவதற்கென 348 (2) பிரிவை உருவாக்கினார்கள். அதன்படி மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அதற்கான அறிவிக்கையை வெளியிடலாம் என்று கூறப்பட்டது. இதையொட்டி ராஜஸ்தானத் திலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியே கூடுதல் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

2006-ல் தமிழ்நாடு அரசும் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டபோது சென்னை உயர் நீதிமன்றமும் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்திய அரசோ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உத்தரவிடாமல், அந்தப் பிரச்னையை உச்ச நீதிமன்றத்தின் கருத்து கேட்பதற்காக அனுப்பியது. உச்ச நீதிமன்றம் விசித்திரமாகத் தமிழைக் கூடுதல் ஆட்சி மொழியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவிப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது. அதற்குக் காரணமாக, ‘வெளி மாநிலங்களிலிருந்து மட்டுமே தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவதால், கூடுதல் அலுவல் மொழி அறிவிப்பு சட்டச் சிக்கலை உண்டாக்கும்’ என்று கூறிவிட்டனர். ஆனால், உண்மையில் ஆங்கிலத்தில் தீர்ப்பு அளித்தால், அதன் தமிழ் மொழியாக்கம் அளிக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தமிழில் தீர்ப்பளித்தால், அதன் ஆங்கில மொழியாக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டப் பிரிவின் ஆதாரமாகும்.

இன்று உச்ச நீதிமன்றத்தில், தனிநபர் சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் ஐந்து மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட்டு வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் என்று நீதிபதி கோகோய் அறிவித் துள்ளது நகைப்பை உண்டாக்குகிறது. மொழிபெயர்ப்புகள் கணினி வழி ‘ஆப்’ மூலம் செய்யப்படப் போவதால் எத்தகைய மொழியாக்கச் சிக்கல்களை அது சந்திக்கப் போகிறது என்பதை அந்த ஐந்து மொழி பண்டிதர்கள்தான் கூற வேண்டும். ஆனால், அதில் தமிழ் மொழியாக்கத்தைப் பற்றி கூறப்படாதது கண்டிக்கத்தக்கது. ஏனெனில், இன்றைக்குக் கணினி மாற்றத்துக்கு முற்றிலும் தயாரான மொழி தமிழ் மட்டுமே என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.

மொழிப் பண்டிதர்கள் உதவியின்றி கணினி மொழியாக்கம் பல கேலிக் கூத்துகளை உருவாக்கி வருவதை நாம் நேரில் பார்க்கிறோம். வங்கிக் கணக்குகளைப் பதிவு செய்வதற்காக வைத்துள்ள இயந்திரங்களில் நமது கணக்குப் புத்தகத்தை சொருகினால் அதில் தென்படும் தமிழ் மொழி அறிவிப்புகளெல்லாம் நமது மொழியைத் தினசரி கொலை செய்வதைப் பார்க்கிறோம். உதாரணத் துக்கு ‘பச் புத்தகத்தைத் திரும்ப இடவும்’ என்றொரு அறிவிப்பு கூறுகிறது. அதாவது, வங்கிக் கணக்குப் புத்தகத்தை அப்படியே சொல்லாமல் அல்லது ஆங்கிலத்தில் பாஸ் புக் என்றும் சொல்லாமல் அது ‘பச் புக்’ என்கிறது. இதை எல்லாம் நேரில் அனுபவிக்கிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த ஐந்து மொழியாக்கத் தீர்ப்புகளின் வலைத்தளப் பதிவு, எந்த வழக்காடிகளுக்கும் உதவப் போவதில்லை. ஏனெனில் வழக்கு கொடுக்க வருபவர்கள், தீர்ப்பின் முடிவைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்களே தவிர, ‘எப்படி சட்டரீதியாக அந்த முடிவுக்கு நீதிபதிகள் வந்தார்கள்’ என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். உச்ச நீதிமன்றம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி சட்டங்களை வியாக்கியானம் செய்வதுடன், அந்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கும் அதிகாரம் படைத்த அமைப்பு. சபரி மலைக்குப் பெண்கள் செல்லலாமா, ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாகக் கருதலாமா, ஆதார் அட்டை அதிகார வரம்பை மீறுகிறதா... என்றெல்லாம் விசாரித்து அளிக்கப்படும் தீர்ப்புகள் மொழியாக்கம் செய்யப்படமாட்டாது. தனிநபர் சம்பந்தப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் தீர்ப்புகள்தான் முதல்கட்டத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பதிவேற்றப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வேண்டாத வேலையைச் செய்வதற்குப் பதிலாக மாநிலங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத் தமிழை, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் ஆட்சி மொழியாகத் தலைமை நீதிபதி கோகோய் அறிவித்தால் அவருக்கு நன்றி செலுத்த லாம். ஒரு பக்கத்தில் மாநில உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகள் நுழைவதைத் தடுக்கும் உச்ச நீதிமன்றம், கணினி மூலம் மொழியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புகள் பதிவேற்றப்போவது கேலிக்கூத்தாகும்.

தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் அறிவிப்பு கண்துடைப்பே!

அரசமைப்புச் சட்டத்தில் கீழமை நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக அம்மாநிலங்களின் ஆட்சிமொழியே இருப்பது குறித்து தடை ஏதுமில்லை. 1969-ம் வருடம் தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு, 1976-ம் வருடம் நீதிமன்றங்களில் கட்டாய அலுவல் மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் அறியாத நீதிபதிகள் ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்படுவார்கள் என்பதால், தனிப்பட்ட நிகழ்வுகளாக அப்படிப்பட்ட ஒரு சில நீதிபதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் சட்டம் பயின்று தமிழில் வார்த்தைகளின்றி தடுமாறிய நீதிபதிகள் பலரும் தலைமை நீதிபதியிடம் விதி விலக்கு கோரி அனுப்பிய விண்ணப் பங்கள் அதிகரித்தன. இதைத் தவிர்க்கும் விதமாகத் தலைமை நீதிபதி சுவாமி 1994-ல் ஒரு பொது விதிவிலக்கை அறிவித்தார். அதன்படி கீழமை நீதிமன்ற நீதிபதிகள் எந்த மொழியில் தீர்ப்புகள் எழுதுகிறார் களோ - அவர்கள் விருப்பப்படி அந்த மொழியில் (ஆங்கிலமோ (அ) தமிழோ) எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். அன்றைக்கே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் கட்டாய ஆட்சி மொழியாக வலம் வருவது கொலை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டு சட்டத்தை தடம்புரள வைக்கும் அந்தச் சுற்றறிக்கையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை நீதிபதி ராமசுப்பிரமணியன் (தற்போதைய தலைமை நீதிபதி, இமாசலப் பிரதேசம்) தலைமையேற்ற அமர்வு ரத்துசெய்தது (2014). வக்கீல் சமூகமும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், மூன்று வருடங்கள் கழித்து தமிழ்நாடு வக்கீல்கள் மூன்றாம் தரப்பாகப் போட்ட மேல்முறையீட்டை - கால தாமதத்தை - மன்னித்து ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழுக்கு விதித்த தடை இன்றும் தொடர்கிறது.

இப்படி கீழமை நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்குத் தடை... உயர் நீதிமன்றத்தில் கூடுதல் ஆட்சி மொழியாகத் தமிழ் வலம் வருவதற்குத் தடை... எனத் தடைகளை விதித்த உச்ச நீதிமன்றம், இப்போது தமிழ் தவிர்த்த ஐந்து மொழிகளில் தனது தீர்ப்பை மொழியாக்கம் செய்து வலைத்தளத்தில் பதிவிடப் போகிறோம் என்று அறிவிப்பது ஓர் ஏமாற்று வேலையே. மாநில மொழிகள் தழைக்க வேண்டும் என்றால், அவையெல்லாம் அம்மாநில நீதிமன்றங்களில் வலம் வருவதற்கு உதவ வேண்டும். பூமிக்கடியில் அஸ்திவாரமிட்டு அதன் மேலே பல மாடி கட்டடங்கள் கட்டலாமேயொழிய மேற்கூரை போட்ட பிறகு அதன் கீழே கட்டடங்களை எழுப்ப முடியாது என்பதைத் தலைமை நீதிபதி கோகோய் உணர்ந்துகொள்வாரா, உச்ச நீதிமன்றத் தில் போடப்பட்ட இரண்டு தடைகளை யும் விலக்குவாரா... என்பதே நம் முன்னால் தொக்கி நிற்கும் கேள்வி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு