Published:Updated:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாதா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உச்ச நீதிமன்றமாக இருந்தால் அட்டர்னி ஜெனரல், உயர் நீதிமன்றங்களாக இருந்தால் மாநில அட்வகேட் ஜெனரல் ஆகியோரின் இசைவைப் பெற்றுத்தான் குற்றவியல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியும்

கேரளாவில், 1967-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தனர். முதலமைச்சர் ஈ.எம்.எஸ், பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் பேசும்போது, “நீதித்துறை ஓர் அடக்குமுறைக் கருவி. நீதிபதிகள் தங்களது வர்க்கத்தின் சார்பாக நீதியளிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். உடனடியாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாராயணன் நம்பூதிரி என்பவர் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக முதலமைச்சர் ஈ.எம்.எஸ்ஸுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து, அதைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு வழங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஈ.எம்.எஸ். அவருக்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் வாதாடினார். “ஈ.எம்.எஸ் எந்தவிதத்திலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யவில்லை. ஒரு வர்க்க சமுதாயத்தில், நீதிபதிகள் வர்க்க நலனை மட்டுமே பிரதிபலிப்பார்கள். ‘அரசு என்பது ஓர் அடக்குமுறைக் கருவி. அதன் ஒரு பகுதிதான் நீதிமன்றம்’ - இத்தகைய மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் அவர் இவ்வாறு பேசினார்” என்று வாதாடினார். ஆனால், நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரித்தனர். ஈ.எம்.எஸ்ஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து அபராதத்தை மட்டும் 50 ரூபாயாகக் குறைத்தனர். கூடவே, ‘ஈ.எம்.எஸ் மார்க்சியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று ஒரு சான்றிதழையும் வழங்கினர் (1970).

 கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

எவை நீதிமன்ற அவமதிப்புகள்?

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 129 மற்றும் 215 ஆகியவை ‘உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் நீதிமன்ற அவமதிப்புக்கு தண்டனை வழங்கலாம்’ என்று அதிகாரம் வழங்கியுள்ளன. அதேசமயம், `பேச்சுரிமை’ என்ற அடிப்படை உரிமை, நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எனினும், நியாயமற்ற வகையில் பேசினால் அது, `நீதிமன்ற அவமதிப்பு’ என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னரே 1971-ல் நீதிமன்ற அவமதிப்பு சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் இரு வகையான அவமதிப்புகள் விளக்கப்பட்டுள்ளன. ஒன்று, சிவில் அவமதிப்பு. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பணிய மறுப்பது இதன்கீழ் வரும். இரண்டாவது, குற்றவியல் அவமதிப்பு. நீதிமன்றங்களை அசிங்கப்படுத்துதல், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுதல், நீதி பரிபாலனத்தை முடக்குதல், நீதி நிர்வாகத்தை எந்தவிதத்திலாவது தடுத்து நிறுத்துதல். இவையெல்லாம் குற்றவியல் அவமதிப்பில் அடங்கும்.

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

உச்ச நீதிமன்றமாக இருந்தால் அட்டர்னி ஜெனரல், உயர் நீதிமன்றங்களாக இருந்தால் மாநில அட்வகேட் ஜெனரல் ஆகியோரின் இசைவைப் பெற்றுத்தான் குற்றவியல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியும். நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தவரை தண்டிப்பதற்கும் இடம் உண்டு. தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதச் சிறை அல்லது 2,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை வழங்க முடியும்.

இதுவரை யார் யார்?

முதன்முறையாக தண்டிக்கப்பட்டவர் ஈ.எம்.எஸ். அவருக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த பி.சிவசங்கர்மீது ஹைதராபாத் பார் கவுன்சில் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக வழக்கு பாய்ந்தது. அவர், ‘நீதிபதிகள் வசதி படைத்த குடும்பங்களிலிருந்து நியமிக்கப்படுவதால், சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்கிறார்கள். ஜமீன்தார் குடும்பத்திலிருந்து வந்ததால் நிலச் சீர்திருத்தங்களை எதிர்க்கிறார்கள்’ என்று பேசினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சிவசங்கர் பேச்சில் நீதிமன்ற அவமதிப்பு ஏதுமில்லை; தனிப்பட்ட முறையில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. பேச்சுரிமையை நீதிமன்றம் மதிப்பதால், இது போன்ற விஷயங்களில் தலையிட விரும்பவில்லை’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

அதன் பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியவர், சிவசேனா கட்சியின் பால் தாக்கரே. அவர் தனது கட்சிப் பத்திரிகையான `சாமனா’வில், ‘நீதித்துறை ஊழலிலிருந்து விடுதலை பெறவில்லை’ என்று தலையங்கம் எழுதினார். அவர்மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு மகாராஷ்டிர மாநில அட்வகேட் ஜெனரலிடம் ஒப்புதல் பெறவில்லை. இந்த நடைமுறைக் கோளாறைக் காரணம் காட்டி, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளாவில் பொது இடங்களில் அரசியல் கூட்டம் நடத்துவதற்குத் தடைவிதித்த நீதிபதிகளை, ‘முட்டாள்கள்’ (சும்பமார்) என்றும், ‘அவர்களுக்கு சுயமரியாதை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறட்டும்’ என்றும் கூறியதற்காக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.வி.ஜெயராஜன் என்பவருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையுடன், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது கேரள உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனையை நான்கு வாரங்களாகக் குறைத்தது. அந்தத் தீர்ப்பில், ‘நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் நியாயமாக விமர்சனம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேசமயம் நீதிமன்றத் தீர்ப்புகள் திருப்தி தரவில்லையெனில், மேல்முறையீடு செய்ய வேண்டுமேயொழிய அவற்றைத் தெருக்களில் விமர்சனம் செய்து நீதிமன்றங்களை அசிங்கப்படுத்தக் கூடாது’ என்றும் எச்சரிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம், ‘நீதிபதிகளையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உட்படுத்த முடியுமா?’ என்ற கேள்விக்கும் ஒரு வழக்கில் விடை கிடைத்தது. சென்னையிலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட, உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனின் நீதிமன்ற அவமதிப்பு பேச்சுக்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார் (2017).

பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

உண்மையைப் பேசினால் அவமதிப்பா?

‘உண்மையைப் பேசினாலும் தண்டிக்க முடியுமா?’ என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் நாடாளுமன்றம், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை 2006-ம் வருடம் திருத்தி, ‘உண்மையைப் பேசியதற்காக தண்டிக்க முடியாது’ என்ற விதிவிலக்கைக் கொண்டுவந்தது.

ஆனாலும், நீதிபதிகள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் `நீதிமன்ற அவமதிப்பு’ என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றுவருவது அதிகரித்துவருகிறது. நீதிமன்றத்தை அசிங்கப் படுத்துவது அல்லது களங்கப்படுத்துவது என்பது எந்த விளக்கத்துக்கும் ஆட்படாத ஒரு பொருள். மேலும், இது போன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பாதிக்கப்பட்ட நீதிபதிகளே விசாரிப்பதற்குத் தடை ஏதுமில்லை என்பதும் இன்னும் ஆபத்தானது.

‘நீதிமன்ற குற்றவியல் அவதூறு வழக்குகளை நீதிமன்றம் கைவிட வேண்டும். அதற்காக அந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்தச் சட்டத்தால் நீதிமன்றங்களையும், நீதிபதிகளின் கௌரவங்களையும் பாதுகாத்துவிட முடியாது என்ற படிப்பினை பல மேலை நாடுகளைப் பார்க்கும்போது தெரியவருகிறது. இதே போன்ற சட்டப்பிரிவு ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யு.கே) கைவிடப்பட்டுள்ளது. அதற்கான ஒரு வாய்ப்பு இந்தியாவிலும் தற்போது உருவாகியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் எஸ்.ஏ.பாப்டே
ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் எஸ்.ஏ.பாப்டே

பிரசாந்த் பூஷண் மீது பாய்ந்த வழக்கு

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் எஸ்.ஏ.பாப்டே நாக்பூரைச் சேர்ந்தவர். அவருக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் விருப்பம் அதிகம். சமீபத்தில் அவர் நாக்பூரில், ஆளுநர் மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்தபோது, அவரின் நண்பர் (உள்ளூர் பா.ஜ.க தலைவரின் மகன்) ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளைக் கொண்டுவந்து காட்டினார். தலைமை நீதிபதி மகிழ்ச்சியுடன் அந்த வண்டியில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது பத்திரிகை செய்தியாயிற்று. இதைப் பார்த்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உள்ளுர் பா.ஜ.க தலைவரின் விலையுயர்ந்த பைக் ஒன்றில் முக, தலைக்கவசம் இன்றி தொற்றுநோய் காலத்தில் பயணம் செய்யும் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தைப் பூட்டி வைத்துள்ளார்’ என்று பதிவிட்டார்.

இந்தத் தகவல் சில நிமிடங்களில் வைரல் ஆனது. இதைப் பார்த்த நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாமாகவே முன்வந்து பதிவு செய்தது. இதுபோல அவர் ஏற்கெனவே பதிவு செய்த ஒரு கருத்துக்கும் நீதிமன்றத்தை அவதூறு செய்ததற்காக அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் மூவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளனர். அதில், ‘1971-ம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்திலுள்ள பிரிவு 2(1)(c), அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பவர்களை தண்டிப்பதற்காக சிவில் அவமதிப்பு வழக்குகளுக்கு மட்டும் சட்டத்தில் இடமளிக்கலாம். ஆனால், `குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு’ என்ற பெயரில் நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாது என்று கூறுவது அடிப்படை உரிமையான பேச்சுரிமைக்கு எதிரானது. அடுத்தது, `நீதிமன்றத்தைக் களங்கப்படுத்துவது’ என்ற குற்றச்சாட்டு, நீதிபதிகளின் அகவியல் சார்ந்த உணர்வுகளைப் பொறுத்தது; ஒவ்வொரு நீதிபதியின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. அதில் பொதுவான அளவுகோல் இருக்க முடியாது. பல மேலைநாடுகளில் இப்படிப்பட்ட அதிகாரங்கள் நீதிமன்றங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால், நாம் இன்னும் அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

பிரசாந்த் பூஷண் பதிவிட்டுள்ள பதிவைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகலாமேயொழிய, அதற்காக அவரைச் சிறையில் பூட்டி அழகு பார்க்கலாமா என்ற கேள்விதான் இன்று விஞ்சி நிற்கிறது.

மாபெரும் அதிகாரம் படைத்த இந்திய உச்ச நீதிமன்றம் இத்தகைய பதிவுகளுக்கு முகம் சுளிப்பது நியாயம் இல்லை!