Published:Updated:

26- ந் தேதி என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ஆசை... பிரிவு உபசார விழாவில் டெல்லி நீதிபதி முரளிதர்!

நீதிபதி முரளிதர் பேச்சை கேட்கும் வழக்கறிஞர்கள்
நீதிபதி முரளிதர் பேச்சை கேட்கும் வழக்கறிஞர்கள்

`26-ம் தேதியன்று நடந்த சம்பவங்கள் குறித்து நான் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்நாளில் அன்றைய தினத்தில்தான் நீண்ட நேரம் வேலை பார்த்தேன்’

தலைநகர் டெல்லியில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் மிகக்கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

'வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேசிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்' என்றும் கோபமாக கேட்டார். இதையடுத்து, அன்றைய தினம் இரவே நீதிபதி முரளிதர், டெல்லி உயர்நீதிமன்றத்தில், இருந்து பஞ்சாப்- ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது பல சந்தேகங்களையும் பலத்த சர்ச்சைகளையும் கிளப்பியது. கலவரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரைக் காப்பாற்றவே , நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

இதற்கிடையே, இடமாறுதலாகிச் செல்லும் நீதிபதி முரளிதருக்கு டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் சார்பாக, பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முன்னாள் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். டெல்லி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாடிப்படிகளில் கூட வழக்கறிஞர்கள் வரிசையாக நின்று நீதிபதி முரளிதரின் பேச்சைக் கேட்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி முரளிதரர், ‘‘நீதிபதிகள் இடமாற்றம் செய்வது குறித்து பிப்ரவரி 12-ம் தேதி கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது . அப்போது என்னை பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொலிஜியத்தின் தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான எஸ். ஏ. போப்டேவிடம் இருந்து கடிதம் வந்தது.

நானும் என்னுடைய பணி மாறுதலுக்கு ஒப்புக் கொண்டு . 'ஆட்சேபனை இல்லை' என பதில் அளித்தேன். தலைமை நீதிபதி பிப்ரவரி 14-ம் தேதி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அது எனக்கு 17-ம் தேதி கிடைத்தது. 20-ம் தேதி இந்தத் தகவல் மீடியாக்களை எட்டியது. 'நீதிபதி முரளிதர் இடமாற்றம்' என்று சோர்ஸஸ் கூறுவதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், 26-ம் தேதியன்று நடந்த சம்பவங்கள் குறித்து நான் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்நாளில் அன்றைய தினத்தில்தான் நீண்ட நேரம் வேலை பார்த்தேன்'' என்று தெரிவித்தார்.

``நடனத்துக்குச் சம்பந்தமில்லாத வெளிமாநில பெண்கள்; கலாசார சீரழிவு!'- கொந்தளிக்கும் மேடைக் கலைஞர்கள்

பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தில் இரண்டாவது சீனியர் நீதிபதியாக இன்று முரளிதர் பதவியேற்றுக் கொண்டார். நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதில், பல உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நீதிபதி முரளிதர் கூறுகையில், ‘‘பிப்ரவரி 26-ம் தேதி என் வீட்டில் நானும் மற்றொரு நீதிபதி அனுப் பாம்பானியும் வழக்கறிஞர் ராகுல் ராய் , 'டெல்லி கலரவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்ட மனு ' குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம். டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், 24-ம் தேதியில் இருந்து விடுமுறையில் இருந்ததால் இரண்டாவது சீனியர் நீதிபதியான சிஸ்தானியிடத்தில் ராகுல் ராய் மனு மீதான விசாரணை குறித்துப் பேசினேன்.

உண்மையுடன் இணைந்திருங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும்
நீதிபதி முரளிதர்

இதையடுத்து, சிஸ்தானி என்னிடத்தில் டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். பிப்ரவரி 26-ம் தேதி இந்த வழக்கை நானும் நீதிபதி, தல்வீந்த் சிங்கும் விசாரித்தோம். பின்னர் அன்றைய தினம் நள்ளிரவே உடனடியாக நான் மாற்றப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது. என்னைப் பொறுத்தவரை, நாட்டிலேயே சிறந்த உயர்நீதிமன்றமாக டெல்லி உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. 14 ஆண்டுகளாக இங்கு பணி புரிந்துள்ளேன். நீதி வெற்றி பெறுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெறும். உண்மையுடன் இணைந்திருங்கள் நீதி கிடைக்கும்'' என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய டெல்லி தலைமை நீதிபதி சி.ஜே பட்டேல், ''நீதிபதி முரளிதர் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மிகத்தீர்க்கமான உறுதியான எண்ணம் கொண்ட நீதிபதியை டெல்லி நீதிமன்றம் இழந்துள்ளது . சட்டம் குறித்து எத்தகைய நுணுக்கங்களையும் அவரிடத்தில் விவாதிக்கலாம்'' என்று புகழாரம் சூட்டினார்.

கடந்த 1984- ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய அமர்விலும் நீதிபதி முரளிதர் இடம் பெற்றிருந்தார்.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

'ஹோமோசெக்ஸ் குற்றமாகாது' என்று தீர்ப்பு அறிவித்த அமர்விலும் இவர் இருந்தார். சென்னையில் கடந்த 1984- ம் ஆண்டு நீதிபதி முரளிதர் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 14 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு முரளிதர் 2006-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது, 58 வயதான அவருக்கு 2023- ம் ஆண்டுடன் பதவிக்காலம் முடிவடைகிறது.

அடுத்த கட்டுரைக்கு