Published:Updated:

ரஞ்சன் கோகோய் என்றும் நம் நினைவில் நிற்பார்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, நவம்பர் 18-ம் தேதி பிறந்த நாள். 17-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து அவர் ஓய்வுபெறுகிறார்.

பிரீமியம் ஸ்டோரி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, நவம்பர் 18-ம் தேதி பிறந்த நாள். 17-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து அவர் ஓய்வுபெறுகிறார். அவருக்கு முன்பு 45 பேர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளனர். அவர்களின் பணி ஓய்வெல்லாம் நீதித்துறை வட்டாரத்துக்குள் மட்டுமே முடிந்துபோன செய்தி. ஆனால், ரஞ்சன் கோகோய் ஓய்வு, தேசத்தின் பேசுபொருளாகி யுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் பகுதிதான் ரஞ்சன் கோகோயின் பூர்வீகம். காங்கிரஸ் பாரம்பர்யத்தில் ஊறிய குடும்பம் அவருடையது. கோகோயின் தந்தை கேசாப் சந்திர கோகோய், அஸ்ஸாம் முதல்வராக இருந்தவர். நேர்மையான அரசியல்வாதி. ரஞ்சனின் அண்ணன் அஞ்சன் கோகோய் ஏர்மார்ஷலாக இருந்தவர்.

1978-ம் ஆண்டு கெளஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ரஞ்சன், அதே நீதிமன்றத்தின் நீதிபதி ஆனார். 2010-ல் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி என அடுத்தடுத்து உயர்ந்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம்மீதான வழக்கு, குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டார். கடந்த ஆண்டில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கொலீஜியத்தின் நான்கு நீதிபதிகளில் ரஞ்சனும் ஒருவர். நீதிபதி கர்ணன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையையும் அவர் விமர்சித்திருந்தார். இப்பேர்பட்டவர் தலைமை நீதிபதியாக வந்ததும் பல அதிரடிகள் அரங்கேறப்போகின்றன என இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் அவர்மீதே பாலியல் புகார் அதிரடியாகக் கிளம்பியது.

ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

ரஞ்சன் கோகோய் அலுவலகத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர்தான் புகார்தாரர். தன் புகாரை சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என அந்தப் பெண், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.பாப்டே (இவரைத்தான் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்தார்) உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. 14 நாள்களில் விசாரணையை முடித்து, ‘தலைமை நீதிபதிமீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று சொல்லி அந்தப் புகாரை தள்ளுபடி செய்தது. அந்த விசாரணை விவரங்களும் வெளியிடப்படவே இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபக் மிஸ்ராவின் பணி ஓய்வு விழாவில், ‘இந்த அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் ஏதேனும் தவறாக நடந்தால், நம்முடைய அரசியலமைப்பு மோசமானது என்று அர்த்தமாகாது. அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் மோசமானவர்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்’ என்று பேசிய ரஞ்சன் கோகோயின் நீதித்துறைப் பயணத்திலும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

ஓய்வுபெறுவதற்கு முன் அயோத்தி, ரஃபேல், சபரிமலை எனப் பல முக்கிய வழக்குகளில் வழங்கியுள்ள தீர்ப்புகள்மூலம் இந்தியர்கள் மனதில் ஏதோ ஒரு வகையில் நினைவில் நிற்பார் ரஞ்சன் கோகோய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு