Published:Updated:

சாதியரசர்களா... நீதியரசர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாதியரசர்களா... நீதியரசர்களா?
சாதியரசர்களா... நீதியரசர்களா?

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

பிரீமியம் ஸ்டோரி

சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலக மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கலந்துகொண்டு உரையாற்றினர். அதில் ஒருவர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ். மற்றொருவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த். இவர் சென்னையில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பினும் இவருடைய பூர்வீகம் கேரளம். `இப்படி அப்பட்டமாக ஒரு சாதி மாநாட்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்ளலாமா?’ என்ற கேள்விக்கணைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதிலும், நீதிபதி சிதம்பரேஷ் தன்னுடைய உரையில் கூறியது மிகவும் சர்ச்சைக்குரியது. ‘பிராமணர்கள், இரு பிறப்புக்கு (துவிஜா) உட்பட்டவர்கள். அவர்கள் என்றைக்கும் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, தற்போதுள்ள சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்ததுடன், பிராமணர்கள் பொருளாதார ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

கேரளத்தில் இப்படிப்பட்ட மாநாடுகள் நடத்தப்படுவதுடன், அதில் உயர் நீதிமன்ற நீதிபதிகளே தங்களின் சாதியினரை ஊக்குவிக்கும்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கேரளத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அதற்கு அவர் செய்த எதிர்வினையும் நினைவுக்கு வருகின்றன. அவர் அங்கிருந்த சாதிவெறியைக் கண்டு வெறுப்புற்று, ‘கேரளம், ஒரு ப்ராந்தாலயம்’ (மனநிலை பிறழ்ந்தவர்களின் புகலிடம்) என்று சாடினார். சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ள பல நிலவுடைமையாளர்கள் நிதி அளித்தனர். அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, அவர் தன் சீடரான அளசிங்கப் பெருமாளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தென் மாவட்டத்தில் இருந்த ஜமீன்தார் ஒருவரைக் குறிப்பிட்டு, ‘பொருளுதவி அளித்தால் மட்டும் போதாது. அவர்களிடம் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். பொருளுதவி அளித்தவரிடமும் தன் மனிதாபிமான கோரிக்கையை விடுப்பதற்கு அவர் தயங்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சாதி மாநாட்டுக்கு நீதிபதிகள் போகலாமா?’ என்ற கேள்விக்கு, ஒரு சிலர் `சாதி எதில்தான் இல்லை?’ என்று எதிர்வினையாற்றுகிறார்கள். சாதிக் கட்டுமானம் என்பது, இந்த நாட்டின் சாபக்கேடு. வர்க்க ஒற்றுமையையே குலைத்துவிடும் அளவுக்குச் சாதிப்பிரிவினை இங்கு தாண்டவமாடுகிறது. ‘சாதி அடிப்படையில் அரசு வேறுபாடு காட்டக் கூடாது’ என்று அரசமைப்புச் சட்டம் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலிருந்து சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை (கம்யூனல் ஜி.ஓ) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது (1951). அதையொட்டி நடந்த போராட்டத்துக்குப் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, ‘சமூக மற்றும் கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கலாம்’ என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியமைப் பற்றிக் கண்டுபிடிப்பதற்கு, குறிப்பிட்ட ஒட்டுமொத்த சாதிகளை அந்தப் பட்டியலில் சேர்க்க முடியும் என்பதும் உறுதி செய்யப் பட்டது. இதையொட்டி தயாரிக்கப்பட்ட பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் சாதிப் பட்டியலில், 1000-த்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன.

எந்தச் சாதி மாநாடாக இருப்பினும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்போர் மட்டுமல்ல, எந்த ஒரு நீதிபதியுமே கலந்து கொள்ளக் கூடாது; இந்த நாட்டை நடத்திச் செல்வது அரசமைப்புச் சட்டம் மட்டுமே. அதில் மனுதர்மத்துக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதிலிருந்து அரசு வேலைகளுக்கு மனு போடுவது வரை சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதனால், சமூகத்தில் கண்கூடாக நடைபெறும் சாதிப் பிரிவினைகள், நாம் கண்களை மூடிக் கொண்டால் மறைந்துவிடாது. தமிழ்நாட்டில் ஒருவருடைய பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டம் போட்டுக்கொள்வது, கடந்த 75 ஆண்டுகளில் மிகவும் குறைந்துவிட்டது. அதே சமயத்தில் கேரளத்தில் பெயருக்குப் பின்னால் சாதியையும் சுமந்துகொண்டு செல்பவர்கள் மிகவும் அதிகம். சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதனாலேயே அங்கு சாதி வெறி அதிகம் என்றும் தமிழகத்தில் சாதிப் பட்டத்தைக் கை விட்டதால் இங்கு சாதி வெறி இல்லை என்றும் கூற முடியாது.

ஆனால், சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் நீதிபதிகளும் செய்யலாம் என்று நினைப்பதும், அதில் தவறு இல்லை என்று நீதிபதிகள் சாதி மாநாடுகளுக்குச் செல்ல முற்படுவதும் முறையாகாது. இதனால், நீதிமன்றங்கள் சாதிக்கேற்ப நீதியளிக்கும் மன்றங்களாக மாறக்கூடிய ஆபத்துள்ளது. ‘நீதிபதி கிருஷ்ணய்யர் பெயரில் சாதி இருக்கிறதே?’ என்று என்னிடம் சிலர் வினவுவர். அந்தப் பெயர் அவரின் முன்னோர்கள் சூட்டிய பெயர். ஆனால், அவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகச் செலவிட்டார் என்பதை வரலாறு அறியும். ஒவ்வொரு முறையும் பொதுவெளியில் உரையாற்றும்போது ‘பிராமணர் களுக்குச் செலவழித்தது போதும். பட்டியலின மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் இளைஞர்களின் கடமையாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன சுவாமி விவேகானந்தரின் உரையைச் சுட்டிக்காட்டுவார்.

சாதியரசர்களா... நீதியரசர்களா?

நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள் முன்னால், பலதரப்பட்ட வழக்குகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் சமயத்தையும் வீட்டில் வைத்துவிட்டு நீதி பரிபாலனம் செய்பவர்கள், ‘இந்திய அரசியல் சட்டத்தை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுக் காப்பாற்றுவோம்’ என்று எடுத்துக்கொண்ட அரசமைப்புச் சட்ட உறுதிமொழியின் படி செயல்பட வேண்டும். முக்கியமாக, அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரிகளிலுள்ள, ‘மதசார்பற்ற சோஷலிச ஜனநாயகக் குடியரசாகிய இந்தியாவைக் காப்பதுடன், அனைவரின் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தையும் காப்பாற்றுவோம்’ என்ற சிந்தனை யிலிருந்து விலகக் கூடாது. சாதிப்பற்றை வெளியே காட்டிக்கொள்ளாமல் உள்மனதுக்குள் வைத்துச் செயல் படுபவர்களுக்கும், இப்படி நேரடியாகச் சாதிப் பாசத்தைக் காட்டிக் கொள்பவர்களுக்கும் வேறுபாடு ஏதுமில்லை.

நீதிபதிகள் நீதி அளித்தால் மட்டும் போதாது, நீதி அளிப்பதற்கான தோற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நியதி. 1999-ம் வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதி வாழ்க்கையில் கூறப்பட்ட விழுமியங்கள் பற்றி ஓர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதில் 16-வது உறுதிமொழி, ‘ஒரு நீதிபதி, தான் எப்போதும் பொதுமக்கள் பார்வையில் இருக்கிறேன் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். தன்னுடைய நடவடிக்கைகள் எக்காரணத்தாலும் தான் வகித்துவரும் பதவிக்கு இழுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விழுமியங்களை அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தங்களின் கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எந்தச் சாதி மாநாடாக இருப்பினும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்போர் மட்டுமல்ல, எந்த ஒரு நீதிபதியுமே கலந்துகொள்ளக் கூடாது; இந்த நாட்டை நடத்திச்

செல்வது அரசமைப்புச் சட்டம் மட்டுமே. அதில் மனுதர்மத்துக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

குஜராத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவரும் படீதார் என்கிற நீதிபதி தன் தீர்ப்பு ஒன்றில், ‘பொருத்தமற்ற இடஒதுக்கீடுதான் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது. அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்று முத்து உதிர்த்திருந்தார். அவர்மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்ட அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும்’ என்று கண்டனத் தீர்மானம் ஒன்றை அவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர். அதைப் பார்த்தவுடன் ஆட்சேபனைக்குரிய தன் கருத்துகளைத் தீர்ப்பிலிருந்து படீதார் நீக்கினார்.

நீதிபதிகள் அனிதா சுமந்துக்கும் சிதம்பரேஷுக்கும் அப்படிப்பட்ட நிலைமை ஏற்படக் கூடாது என்று நம்புவோமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு