Published:Updated:

வி.ஐ.பி-கள் கைதானாலும் ஆச்சர்யமில்லை! - அனல் பறக்கும் கொடநாடு மறு விசாரணை

சயான்
பிரீமியம் ஸ்டோரி
சயான்

என் தம்பி கனகராஜுக்கு நடந்தது விபத்து இல்லை. அது திட்டமிட்ட படுகொலை. என் தம்பி சாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு

வி.ஐ.பி-கள் கைதானாலும் ஆச்சர்யமில்லை! - அனல் பறக்கும் கொடநாடு மறு விசாரணை

என் தம்பி கனகராஜுக்கு நடந்தது விபத்து இல்லை. அது திட்டமிட்ட படுகொலை. என் தம்பி சாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு

Published:Updated:
சயான்
பிரீமியம் ஸ்டோரி
சயான்

சாட்சி விசாரணைகள் அனைத்தும் முடிந்து, தீர்ப்பு மட்டும்தான் பாக்கி என்று இறுதிக்கட்டத்தை எட்டிய கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தலைகீழான காட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விசாரணை என்ற பெயரில் தற்போது மறு விசாரணையே நடத்திவருகிறது காவல்துறை!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக் குற்றம் சுமத்தியதை அடுத்து சயான், வாளையார் மனோஜ் இருவரின் ஜாமீனையும் ரத்துசெய்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது அப்போதைய அ.தி.மு.க அரசு. இரண்டு ஆண்டுகளாகச் சிறையிலிருந்த சயானுக்கு, தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த மாதத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் கிடைத்த ஒரு வாரத்திலேயே, ‘இந்த வழக்கில் என்னை மறு விசாரணை செய்ய வேண்டும்’ என்று சயான் தெரிவிக்க, ‘மறு விசாரணைக்கு அவசியம் இல்லை. கூடுதல் விசாரணை நடத்துகிறோம்’ என்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்துவிட்டு, கூடுதல் விசாரணையை சயானிடமிருந்தே தொடங்கியது காவல்துறை.

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

ஆகஸ்ட் 17-ம் தேதி கொட்டும் மழையில் சயானை ஊட்டியிலுள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தின் முதல் தளத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை டீம், நீலகிரி மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் இரண்டு மணி நேர ரகசிய வாக்குமூலம் பெற்றது. விசாரணை தொடங்கிய மறு நிமிடமே அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்கினார்கள். சயானிடம் பெறப்பட்ட ரகசிய வாக்குமூலம் அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றாலும், அந்த வாக்குமூலம் கிளப்பிய புயல் இன்னும் ஓயவில்லை.

சூட்டோடு சூடாக அடுத்தகட்ட விசாரணைக்கு நகர்ந்த விசாரணைக்குழு, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலை ஊட்டிக்கு அழைத்து சாட்சி விசாரணை நடத்தினர். ‘‘என் தம்பி கனகராஜுக்கு நடந்தது விபத்து இல்லை. அது திட்டமிட்ட படுகொலை. என் தம்பி சாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு. உண்மையான குற்றவாளி தண்டிக்கப்படணும். என்னை எப்போ விசாரணைக்குக் கூப்பிட்டாலும் ஒத்துழைப்பு கொடுக்க தயாரா இருக்கேன்’’ என்று விசாரணையில் தனபால் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறாராம்.

வி.ஐ.பி-கள் கைதானாலும் ஆச்சர்யமில்லை! - அனல் பறக்கும் கொடநாடு மறு விசாரணை

அடுத்தடுத்து நகர்ந்த தனிப்படையின் விசாரணையில், காவல்துறையில் சிலர் மீதே சந்தேகம் ஏற்பட்டதால், சம்பவம் நடந்த அன்று கொடநாடு முதல் கேரளா பார்டர் வரை நைட் டூட்டியிலிருந்த அத்தனை போலீஸாரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி அறிக்கை பெற்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தற்போதும் சில காக்கிகள் விசுவாசமாக இருப்பதைக் கண்டறிந்து, அவர்களின் மூவையும் ரகசியமாகக் கண்காணித்துவருகிறார்கள். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இந்த விசாரணையிலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறாராம். கொள்ளைக் கும்பலின் வாகனத்தை விடுவித்தவரான அவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரும் நேரில் வந்து ஊட்டியிலும் கொடநாட்டிலும் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கின் மிக முக்கியச் சாட்சியாகக் கருதப்படும் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனை விசாரணைக்கு அழைத்தது புலன் விசாரணைக்குழு. பதற்றத்தோடு தன் வழக்கறிஞருடன் வந்து ஆஜரான நடராஜனிடம், இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணையில் பிடிகொடுக்காமல் நடராஜன் நழுவியது, காவல்துறையைச் சற்று ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. ‘‘தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்’’ என்று சொல்லியே அவரை அனுப்பிவைத்திருக்கிறார்கள். இந்த விசாரணையின் அடுத்தகட்ட நகர்வாக கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைகள் செய்துகொடுத்த அ.தி.மு.க-வின் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜ்ஜீவன் எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கிட்டத்தட்ட தீர்ப்பை எட்டிய ஒரு வழக்கை மீண்டும் புலன் விசாரணை செய்யவேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்விக்கு சயான் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முனிரத்தினம் பதிலளிக்கிறார்... ‘‘நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கைக்கூட காவல்துறை நினைத்தால் கூடுதல் விசாரணை நடத்தலாம். அதற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்கவேண்டிய அவசியமில்லை. காவல்துறை தரப்பில் நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவித்தாலே போதும். இந்த வழக்கைப் பொறுத்தவரை அப்போதிருந்த அதிகாரிகள் முறையாகப் புலன் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் ஏற்பட்டதால், தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் தரப்பில் கூடுதல் விசாரணை நடத்திவருகிறார்கள். ஆதாயத்துக்காகவே இந்தக் கொலை நடந்திருக்கிறது என்று நாங்கள் அறிகிறோம். உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே இந்தக் கூடுதல் விசாரணையின் நோக்கம்’’ என்றார்.

முனிரத்தினம்
முனிரத்தினம்

காவல்துறையின் உயரதிகாரி ஒருவரோ, ‘‘அப்போதிருந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையும், இப்போது இந்த கேஸ் போகிற ரூட்டும் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கின்றன. அடுத்தடுத்த விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கின்றன. சாட்சிகளிடம் திட்டமிட்டே சில கேள்விகளைத் தவிர்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனாலேயே சாட்சிகள் தரப்பு பலவீனமாக இருந்தது. இப்போது ஒருவரைவிடாமல் தீவிரமாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம். சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு இருப்பதால், எப்போது யாரை விசாரிப்போம் என்று சொல்ல முடியாது. இந்த வழக்கில் புதிதாகப் பலரின் பெயர்களைச் சேர்க்கப்போகிறோம். ஒருசில வி.ஐ.பி-கள் கைதானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism