Published:Updated:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... காணாமல்போன முக்கிய சாட்சி...

கொடநாடு எஸ்டேட்
பிரீமியம் ஸ்டோரி
News
கொடநாடு எஸ்டேட்

ஆள்மாறாட்டம் செய்ய திட்டமா?

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் உள்ள பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழாத நிலையில், வழக்கின் முதல் சாட்சியான கொடநாடு எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாப்பா காணாமல்போன விவகாரம், பரபரப்புகளைப் பற்றவைத்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கும் அவரின் தோழி சசிகலாவுக்கும் கொடநாட்டில் 900 ஏக்கரில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் சொந்தமாக உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் அமைந்துள்ளது, கொடநாடு ஆடம்பர பங்களா. ஜெயலலிதாவின் விருப்பத்துக்குரிய இந்த பங்களா, அவர் இருக்கும் வரை இரும்புக் கோட்டையாகவே இருந்தது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... காணாமல்போன முக்கிய சாட்சி...

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் கொடநாடு எஸ்டேட்டுக்குள் 11 பேர்கொண்ட கும்பல் புகுந்தது. காவலாளி ஓம் பகதூரைக் கொலைசெய்த அந்தக் கும்பல், மற்றொரு காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண தாப்பாவை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதன் பிறகு பங்களாவுக்குள் நுழைந்த அந்தக் கும்பல், அங்கு இருந்த சில பொருள்களைத் திருடிச் சென்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் 10 பேரை, காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்தக் கொள்ளையில் தொடர் புடைய முக்கிய நபரான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மரண மடைந்தார். அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானுக்குச் சொந்தமான கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவியும் மகனும் உயிரிழந்தனர்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சயான் மற்றும் இதே வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் ஆகியோர், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியே இந்தக் கொலையைச் செய்தோம்’ என்று திகில் கிளப்பினார்கள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 300 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 27 நபர்கள் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

முதல் சாட்சி, கூலிப்படையினரால் தாக்குதலுக் குள்ளாகி உயிர் தப்பிய கிருஷ்ண தாப்பா. ஜனவரி 28-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு அவர் வராத நிலையில், இரண்டு மற்றும் மூன்றாவது சாட்சிகளான பஞ்சம் விஸ்வகர்மா, சுனில் தாப்பா ஆகியோரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு எதிர் தரப்பினர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான், ‘கிருஷ்ண தாப்பா காணாமல்போய்விட்டார். அவரை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்’ என்ற தகவல் வெளியாகி, பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ‘‘கொடநாடு கொள்ளையின்போது, பலத்த காயமடைந்த கிருஷ்ண தாப்பா, சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் எஸ்டேட்டில் வேலை செய்துவந்தார். திடீரென ஒருநாள், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலேயே சொந்த நாடான நேபாளத்துக்குச் சென்றுவிட்டார். அவரின் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அங்கிருந்தும் கிளம்பிவிட்டார் என்கிறார்கள். அவரிடம் அலைபேசி எதுவும் கிடையாது. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறிவது பெரும்சவாலாக உள்ளது. அவரின் உறவினர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வடகிழக்கு மாநிலம் எங்கேயாவது சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கிருஷ்ண தாப்பாவைத் தேடிப் பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 15 நாள்களாக அவரைத் தேடிவருகிறோம்’’ என்றார்.

சயான்
சயான்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு... காணாமல்போன முக்கிய சாட்சி...

குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் நம்மிடம், ‘‘கொடநாடு கொலை வழக்கில் முக்கிய மற்றும் நேரில் பார்த்த ஒரே சாட்சியான கிருஷ்ண தாப்பா, ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் வந்து சாட்சி கூறினால் மட்டுமே இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய முடியும். முதல் சாட்சி இல்லாத நிலையில், இரண்டு மற்றும் மூன்றாவது சாட்சியை வைத்துச் சமாளிக்கும் முடிவில் போலீஸார் உள்ளனர். முதல் சாட்சியை அழைத்து வர வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டோம். ஆனால், ‘இவர்தான் கிருஷ்ண தாப்பா’ என யாரோ ஒருவரை அழைத்துவந்து ஆள்மாறாட்டம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கிருஷ்ண தாப்பாவை போலீஸார் அழைத்து வந்தாலும், மரபணு சோதனைக்குப் பிறகே சாட்சிக் கூண்டில் ஏற அனுமதிப்போம்’’ என்றார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் இன்னும் எத்தனை திருப்பங்களைச் சந்திக்கப்போகிறதோ?!