Published:Updated:

`குல்தீப் சிங் குற்றவாளியே’- உன்னாவ் வழக்கின் வாதங்களும் இறுதித் தீர்ப்பும்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு!

தொடர் கொடுமைகளுக்கு உள்ளான உன்னாவ் சிறுமிக்கும், மனசாட்சி உள்ள இந்தியக் குடிமக்களுக்கும் சிறு ஆசுவாசமாக, இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது.

இந்தியாவில், பாலியல் வன்கொடுமைகள் தினசரி நிகழ்வாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழும் அந்த கொடூரச் சம்பவத்தின் தருணத்தைக் கடந்தும், காவல் நிலையம், மருத்துவமனை, குற்றவாளிகளின் அச்சுறுத்தல்கள், சமூகத்தின் புறக்கணிப்புகள் எனப் பாதிக்கப்படும் பெண் அடுக்கடுக்காகக் கொடுமைகளைச் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார். அப்படிப் பல கொடுமைகளுக்கு உள்ளானவர்தான், உன்னாவ் சிறுமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேலை வாங்கித்தருவதாகக் கூறப்பட்டு ஏமாற்றப்பட்ட இந்தச் சிறுமி, உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்டார்.

உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்
உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்

நீதி வேண்டித் தொடங்கிய பயணத்தில், காவல் நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டு, தந்தையை இழந்து, உறவுகளை இழந்து, கிட்டத்தட்ட உயிரை இழந்து, தொடர் கொடுமைகளுக்கு உள்ளான உன்னாவ் சிறுமிக்கும், மனசாட்சி உள்ள இந்தியக் குடிமக்களுக்கும் சிறு ஆசுவாசமாக, இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. முன்னாள் பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர், இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது டெல்லி நீதிமன்றம்.

2017 முதல் இன்று வரை உன்னாவ் வழக்கில் நடந்த எல்லா சம்பவங்களின் விவரங்களையும் நாம் முன்கூட்டியே பதிவு செய்திருந்தோம். அவற்றை இங்கே படிக்கவும்...

இவ்வழக்கு விசாரணையின்போது, சம்பவம் நடந்த அன்று, குல்தீப் சிங் சம்பவ இடத்தில் இல்லவே இல்லை என்று குல்தீப் சிங் தரப்பில் கூறி, அவர் நிரபராதி என்று வாதம் செய்யப்பட்டது. இந்த வாதத்தைப் புறந்தள்ளிய நீதிபதி தர்மேஷ் சர்மா, "சம்பவம் நடந்த அன்று சம்பவ இடத்திற்கு அருகில்தான் குல்தீப் சிங்கினுடைய அலைபேசி சிக்னல் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, அவரது அயலிட சான்றை (Alibi) ஏற்றுக்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, சம்பவம் நடந்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு அவதூறாகப் புனையப்பட்டது என்று சொல்லப்பட்ட குற்றவாளிகளின் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ஆனால் அதேசமயம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபரான சஷி சிங் என்பவரை, சந்தேகத்தின் பலனாக (Benefit of doubt) விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். அவருக்கெதிராக ஆதாரங்கள் ஐயமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமி, அவரது வழக்கறிஞர், அவரது சித்திகள் சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்திலிருந்து இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் பிரிவுகள் 120 B, 363, 366, 376 ஆகியவற்றின் கீழ் அவர்கள்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு தொடர்ந்தது.

நீதிபதியின் தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண் வலிமையான ஒரு நபருக்கு எதிராகத் தைரியமாகப் போராடியதற்காக பாராட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு எதிராக பொய்யான வழக்குகள் போடப்பட்டதை சுட்டிக்காட்டி, அதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை முழுவதும் ஓர் ஆணாதிக்க மனோபாவத்துடனே நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இந்த வழக்கில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, முறையான கவனத்துடன், மனித நேயத்துடன் கையாளாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காகப் பலமுறை அலுவலகத்திற்கு வரவழைத்து அலைக்கழித்ததையும் இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டு நீதிமன்றம் கண்டித்துள்ளது. அதுமட்டுமின்றி, போக்ஸோ சட்டத்தின்படி, இந்த வழக்கு விசாரணையை ஒரு பெண் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாமல், ஏற்கெனவே ஒருமுறை பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் மீண்டும் பாதிக்கும் விதமாக, ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலை குறித்து புரிதலின்றி இந்த வழக்கு கையாளப்பட்டிருக்கிறது என்றும் நீதிமன்றம் பதிவுசெய்திருக்கிறது. உன்னாவ் சிறுமியின் வாக்குமூலம், கறைபடியாத, உண்மையான, தெளிவான வாக்குமூலம் என்றும், எந்தத் தயக்கமும் சந்தேகமும் இன்றி , அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வந்ததாகவும், நீதிபதி அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

`Holy Land' சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

உன்னாவ் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, சிறுமியின் தந்தை ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அவர் இறந்த வழக்கு, சிறுமியின் கார் விபத்து சதி என்ற சந்தேகத்தில் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக வேறு மூவர்மீது தொடரப்பட்ட வழக்கு ஆகிய நான்கு வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நான்கு வழக்குகளையும் தினமும் விசாரித்து, 45 நாள்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தனி விமானத்தில் வரவழைத்து, மிகத் துரிதமாக இந்த வழக்கை விசாரித்தது டெல்லி நீதிமன்றம்.

Unnao victim accident - truck
Unnao victim accident - truck
NDTV

கேமரா முன்பாகத் தனி விசாரணை (in-camera) நடத்தப்பட்ட இந்த வழக்கில், குல்தீப் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். தண்டனை விவரங்களை வரும் 20-ம் தேதி வழங்க இருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் மிக அதிகமாக நடக்கும் உத்தரப்பிரதேசத்திலுள்ள உன்னாவ் மாவட்டம், கொடூரங்களின் கூடாரமாக மாறிவரும் இக்காலகட்டத்தில், அதிகார போதையில், அரசியல் செல்வாக்கில் அடுத்தடுத்து தவறிழைத்த குல்தீப் சிங் சிங்கார் எனும் ஒரு மனித மிருகத்திற்கு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு