`தோரணையில் மாற்றம்... முகத்தில் மிரட்சி?!' -பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்ன நடக்கிறது?

இதற்கு முன்பு இரண்டுமுறை ஆஜரானபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கெத்தான தோரணையில் நீதிமன்றத்துக்கு வந்தனர். ஆனால், நேற்று அவர்களது தோரணையில் சிறிது மாற்றத்தைக் காண முடிந்தது.
நாட்டையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஓராண்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல், குற்றம் சாட்டப்பவர்கள் மீது போடப்பட்டிருந்த குண்டாஸ் ரத்து, வழக்கு மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம் என இந்த ஓராண்டில் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது, பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

இந்நிலையில், இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கு முன்பு இரண்டுமுறை ஆஜரானபோது, ஐந்து பேரும் கெத்தான தோரணையில் நீதிமன்றத்துக்கு வந்தனர். ஆனால் நேற்று, அவர்களது தோரணையில் சிறிது மாற்றத்தைக் காண முடிந்தது. கடந்தமுறை டிப்டாப் உடையுடன் வந்த திருநாவுக்கரசு, நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சற்று மிரட்சியுடன் காணப்பட்டார்.

சபரிராஜன், சதீஸ், வசந்த், மணிவண்ணன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்துக்குள் சகஜமாக நுழைந்தாலும், உள்ளே வந்த பிறகு அவர்களும் சற்று மிரட்சியுடனே காணப்பட்டனர்.
இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுதான், அவர்களின் மிரட்சிக்குக் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ராதிகா, கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்பும், அவரது கண்டிப்பான நடவடிக்கைகளுமே மிரட்சிக்குக் காரணம் என்கிறார்கள்.

வழக்கு விசாரணைக்கு வரும்போது சாட்சிகள் வராவிடில், விசாரணை அதிகாரி அபராதம் விதிக்கிறார்.
கடந்த ஆண்டு, மாநிலம் முழுவதையும் சோகத்தில் உறைய வைத்த துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கில், குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஆயுள் மற்றும் தூக்குத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கீர்த்திராஜ் என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இப்படிப்பட்ட நீதிபதி, தங்கள் வழக்கையும் விசாரிக்க உள்ளதால், குற்றவாளிகள் தரப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐந்து குற்றவாளிகளும், நீதிபதி ராதிகா முன்பு நேற்று முதல்முறையாக நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து பேரின் நீதிமன்றக் காவலையும் வருகின்ற 24-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கும்போது, இந்த வழக்கில் பல்வேறு அதிரடிகளை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நீதிமன்ற வட்டாரங்களில்.