`எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்?!' -மேலவளவு விவகாரத்தில் அரசாணை கோரும் வழக்கறிஞர்
`எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட மேலவளவு சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள், தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து 6 பேரையும் மற்றொரு இடத்தில் ஒரு நபர் என மொத்த 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.
இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, கடந்த 9-ம் தேதி மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், ``வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில் 13 பேரையும் விடுதலை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நவம்பர் 18-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கறிஞர் ரத்தினவேலிடம் பேசினோம். ``மேலவளவு கொலை வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றி யோசிக்காமல் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர். இதுபோன்ற வேறு ஒரு வழக்கில் குற்றவாளி 25 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தபோதும்கூட, அந்த நபருக்கு பரோல்கூட வழங்கவில்லை. ஆனால், மேலவளவு படுகொலையில் ஆயுள்தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகளில் விடுதலை வழங்கியுள்ளனர்” என்றார்.