Published:Updated:

6 மாதங்களாக கிடைக்காத சிறுவன்.. நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட திருப்பம்!

ராமசாமி மனைவியுடன்
ராமசாமி மனைவியுடன்

கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆன போதும் இவர்களின் மகன் கிடைக்கவில்லை. இதனால் பொறுமை இழந்த ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் மனு அளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காணாமல் போன சிறுவனை சி.பி.சி.ஐ.டி கண்டறிந்தது.

மதுரை மேலூர் கோட்டைக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய ஒரே மகன் 14 வயதுடைய சிவனேஷ், கடந்த ஏப்ரல் 28-ம் தேதி காணாமல் போக இது தொடர்பாக மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

hc madurai
hc madurai

கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆன போதும் இவர்களின் மகன் கிடைக்கவில்லை. இதனால் பொறுமை இழந்த ராமசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் மனு அளித்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மேலூர் போலீஸாரிடம் இருந்து ``வழக்கை மதுரை சி.பி.சி.ஐ.டி., (ஓசியூ) டி.எஸ்.பி விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக ராமசாமியை நேரில் சந்தித்து, ஜூனியர் விகடனில் விரிவான கட்டுரையும் வெளியிட்டோம். இந்த நிலையில், காணாமல் போன சிறுவன் சிவகங்கையில் உள்ள காப்பகம் ஒன்றில் இருப்பதை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொலைந்த சிறுவனின் தந்தை ராமசாமி நம்மிடம், ``எங்களுக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள பேராவூரணி. என் மகன் சிவனேஷ் சற்று மனநலம் குன்றியவன். இதனால் இவனை சிறப்புப் பள்ளியில் படிக்க வைக்க உறவினர் உதவியுடன் மேலூருக்கு 2014-ல் வந்து குடியேறினோம். தொடர்ந்து மனநல சிகிச்சை பெற்றுவந்த என் மகனை அழகர்கோயில் பகுதியில் உள்ள சிறப்புப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். தினமும் பள்ளிக்கு வேனில் சென்றுவிட்டு திரும்புவான்.

குடும்பத்துடன் சிறுவன் சிவனேஷ்
குடும்பத்துடன் சிறுவன் சிவனேஷ்

வீட்டின் அருகிலேயே வேன் வந்ததால் அவனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. நான் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றினேன். மனைவிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அந்த வேலையை விட்டுவிட்டுக் கிடைத்த கூலி வேலைகள் செய்துவருகிறேன். இந்த நிலையில், என் மகன் கடந்த ஏப்ரலில் வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது காணவில்லை. தொடர்ந்து தேடியும் கிடைக்கவில்லை.

காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்.. சூடுபிடிக்கும் கொடநாடு கொலை வழக்கு!

காணாமல் போனதில் இருந்து தூக்கம் இல்லாமல் அலைந்து தேடிவந்தோம். பேப்பர், போஸ்டர்களில் விளம்பரம் கொடுத்தும் பயனில்லை. காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.

சிவனேஷ் பெற்றோர்
சிவனேஷ் பெற்றோர்

அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸை விசாரணை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக விசாரணை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் சருகணியை அடுத்த அன்னை சாரதா பயிற்சிக்கூடத்தில் என் மகன் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் முறைப்படி எங்களிடம் என் மகனை ஒப்படைத்தனர். நாங்க நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை என்றால் எங்கள் மகன் கிடைத்திருக்க மாட்டான். தற்போது அவன் கிறங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டான். சில வருடங்கள் ஆகிருந்தால் கண்டிப்பாக கண்டுபிடித்திருக்க முடியாது" என ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

பள்ளியிலிருந்து வந்த போன் கால்; காணாமல் போன சிசிடிவி வீடியோ! - இறந்த மகளுக்கு நீதிகேட்டுப் போராடும் பெற்றோர்
அடுத்த கட்டுரைக்கு