
- உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!
‘மக்கள் மதங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். மனிதர்கள் மத பேதங்களைப் பார்க்கலாம். ஆனால், தெருக்களுக்கு மத அடையாளம் பூச முடியுமா? இப்படியொரு கேள்வியை இந்த மேல் முறையீட்டு மனு எழுப்பியிருக்கிறது.’ - ஒரு கிராமத்தின் வழிபாட்டுப் பிரச்னை ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு, இந்தக் கேள்வியுடன் ஆரம்பித்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ளது வி.களத்தூர் கிராமம். இங்குதான் ‘இந்துமதக் கோயில் திருவிழா ஊர்வலம் எங்கள் தெருவின் வழியே வரக் கூடாது’ என்று முஸ்லிம்களும், ‘ஊர்வலம் அந்த வழியாகச் செல்லும் மரபு தொடர வேண்டும்’ என்று இந்துக்களும் கூற, பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கில்தான், ‘சாலைகள் எந்த மதத்தினருக்கும் சொந்தமில்லை. அனைத்துச் சாலைகளிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைத்து மத ஊர்வலங்களையும் நடத்தலாம். சகிப்புத்தன்மையை இழந்துவிட்டால், அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல’ என எச்சரித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் நீதிபதிகள்.
வி.களத்தூர் கிராமப் பெரியவர்களைச் சந்தித்துப் பேசினோம். “எங்க கிராமத்தோட கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களும், மேற்குப் பகுதியில இந்துக்களும் வசிக்கிறோம். இந்தக் கிராமத்துல லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில்னு நாலு கோயில்கள் இருக்கு. ஒவ்வொரு வருஷமும் ஆடி மாசத்துல மூணு நாள் திருவிழா நடக்கும். முதல் நாள் செல்லியம்மன், ராயப்பனை அழைச்சு வழிபடுவோம். ரெண்டாம் நாள்ல மாரியம்மன் புறப்பாடும், சகடை சுத்துறதும் நடக்கும். மூணாவது நாள் ஊர் முழுக்க மஞ்சத் தண்ணி தெளிச்சு திருவிழாவை முடிக்கிறது வழக்கம். மூணு நாள் திருவிழாவுல, முதல் ரெண்டு நாள் காலை, மாலை ரெண்டு வேளையும் கோயில்ல ஆரம்பிச்சு, ஊருல இருக்குற எல்லா தெருவுங்க வழியாவும் சகடை சுத்திவரும். இந்தத் திருவிழா நடத்துனா, ஊரு மக்க நோய் நொடி இல்லாம விவசாயம் செழிச்சு சிறப்பாக வாழ்வாங்கன்னு நம்பிக்கை. இது 70 வருஷமா நடக்கற பாரம்பர்யம். 2015-ம் வருஷம் வரை இதுல பிரச்னை இல்லை.


தேரோடுற வீதிக்கு அடுத்த தெருவுல மசூதி கட்டணும்னு முஸ்லிம்கள் கேட்டாங்க. ஊர்கூடிப் பேசி, எதையும் யோசிக்காம சம்மதிச்சோம். அதுதான் இந்தப் பிரச்னைக்குப் பிள்ளையார்சுழி போட்டுடுச்சு. ஊர்ல முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போச்சு. தேரோடுற வீதியிலும் முஸ்லிம்கள் வீடு வாங்கினாங்க. ஒருகட்டத்துல, அவங்க எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து, ‘எங்க தெருவுக்குள்ள சகடை ஊர்வலம் வரக் கூடாது; மேளம் அடிக்கக் கூடாது; தேரை இழுக்கக் கூடாது; மஞ்சத்தண்ணி எதுவும் தெளிக்கக் கூடாது’ன்னு சொல்லி திருவிழாவையே நிப்பாட்டுற அளவுக்குப் போயிட்டாங்க.
2015-ம் வருஷம், மூணு நாள் திருவிழாவை ரெண்டு நாளாகக் குறைச்சு நடத்தச் சொல்லி, காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எங்ககிட்ட கேட்டுக்கிட்டாங்க. இஸ்லாமிய இயக்கங்களை வெச்சும் சிலர் பிரச்னை பண்ணுனாங்க. ‘சரி, அனுசரிச்சுப் போவோம்’னு நாங்களும் ஏத்துக்கிட்டோம். அதுக்கப்புறம், ‘நீங்க திருவிழா நடத்தக் கூடாது; அப்படி நடத்துனா, எங்க தெருவுக்குள்ள வரக் கூடாது. வந்தா பிரச்னை பண்ணுவோம்’னு வெளிப்படையாவே சொன்னாங்க. 2016-ம் வருஷம் அவங்க தரப்புல உயர் நீதிமன்றத்துல, ‘எங்கள் தெருவில் மசூதி இருக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் இந்துக் கோயிலின் ஊர்வலம் வரக் கூடாது’னு மனுத்தாக்கல் செஞ்சாங்க. ஆனா, கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செஞ்சுது. திரும்பவும் 2017-ல தாக்கல் செஞ்ச மனுவும் தள்ளுபடியாச்சு.
2018-ல வருவாய்த்துறை அதிகாரி, ‘திருவிழாவை ரெண்டு நாள் மட்டும்தான் நடத்தணும். முஸ்லிம்கள் வசிக்கிற தெருவுல சாமி ஊர்வலம் போகக் கூடாது’னு உத்தரவு போட்டார். அதை எதிர்த்துத்தான் நாங்க நீதிமன்றத்துக்குப் போனோம். நீதிமன்ற உத்தரவுல அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துச்சு. அப்போதும் முஸ்லிம்கள் தரப்பில், ‘எங்க தெருவில் மசூதி இருக்கு. அங்க மஞ்சள் தண்ணி தெளிச்சா அது ‘ஹராம்’ ஆயிடும். எங்க நம்பிக்கைக்கு அது சரிப்பட்டு வராது’னு சொன்னாங்க. மத நல்லிணக்கம் கருதி நாங்களும், ‘முதல் நாளில் இரண்டு ஊர்வலமும், இரண்டாம் நாளில் இரண்டு ஊர்வலமும் நடத்திக்கொள்கிறோம். மூன்றாம் நாளில் மஞ்சள் தண்ணீர் விழா நடத்துவதில்லை’ என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனா, ஊர்லவம் போற பாதைகள்ல நிறைய கட்டுப்பாடுகளை விதிச்சதால, நாங்க மேல்முறையீடு செய்தோம். முஸ்லிம்கள் தரப்புலயும் மேல்முறையீடு செஞ்சாங்க. அதுலதான் இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கு’’ என்றனர்.
‘திருவிழா நடத்த வேண்டும்’ என்று நீதிமன்றப் படியேறிய ராமசாமியைச் சந்தித்துப் பேசினோம், “நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மத உரிமையைப் பாதுகாக்கும் விதத்திலும், மதச்சார்பற்ற தன்மைக்கும் ஏற்ற தீர்ப்பு இது. இதை முழு மனதோடு வரவேற்கிறோம்” என்றார்.
ஜமாத் தரப்பில் பொருளாளர் ஹாயத் பாட்ஷாவிடம் பேசினோம். “எந்த மதத்தினரையும் எதிர்க்கும் நோக்கில் நாங்கள் செயல்படவில்லை. சாமி ஊர்வலம் செல்வதை ஒருபோதும் தடுக்கவில்லை. அதற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். ஆனால், மஞ்சள் நீர் தெளிப்பு என்கிற பெயரில் சிலமுறை பெரிய கலவரமே வெடித்தது. அப்படியொரு சம்பவம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்றுதான் பயப்படுகிறோம். நீதிபதி கொடுத்திருக்கும் தீர்ப்பு, கூட்டாக வாழும் மக்களுக்குப் பொருந்தும். ஆனால், இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கிறோம். ஜமாத் தரப்பில் பேசி, அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதை முடிவு செய்யவிருக்கிறோம்” என்றார்.
இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள அம்சங்கள், பல்வேறு இடங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தெளிவான விளக்கம் தருபவையாக உள்ளன. ‘சட்டப்படி எல்லா தெருக்களும் அரசாங்கத்துக்குச் சொந்தம், மனிதர்களுக்கு வேண்டுமானால் மதம் இருக்கலாம். ஆனால், தெருக்கள் மதச்சார்பற்றவை. மத, சாதி, இன வேறுபாடு இன்றி எல்லோருக்கும் தெருக்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இன்று மத ஊர்வலத்துக்குத் தடை விதித்தால், நாளை திருமண ஊர்வலம், மரண ஊர்வலம் என எல்லாவற்றையும் தடுக்கக் கேட்பார்கள். பிற மதத்தினர் நடப்பதற்குக்கூட தடை கேட்கலாம். சமூகத்துக்கு அது ஆரோக்கியமானது அல்ல.

ஒரு குறிப்பிட்ட மதத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக மட்டுமே பிற மத ஊர்வலங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் இருக்கிறது என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட வீதி வழியாக ஊர்வலம் செல்வதைத் தடுக்கக் கூடாது. பாரம்பர்யமாகச் செய்துவரும் நடைமுறைகளுக்குத் தடை விதிப்பதையும் ஏற்க முடியாது. இது போன்ற ஊர்வலங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அரசின் பணியே தவிர, தடை செய்வது அல்ல. அப்படி ஊர்வலம் செல்பவர்கள், பிற மதத்தினரைப் புண்படுத்தும்படியாக எந்தவித கோஷமும் எழுப்பக் கூடாது. பிற செயல்களிலும் ஈடுபடக் கூடாது.
இது போன்ற வாதங்களை ஏற்றுக்கொண்டால், இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் பல பகுதிகளில் எந்தத் திருவிழாவையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மத சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சூழலை நாம் அனுமதித்தோம் என்றால், மதச்சார்பற்ற நாட்டுக்கு அது நல்லதல்ல. மத சகிப்பின்மை யாரிடமிருந்து வந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறியிருப்பது, மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்த முயலும் எல்லோருக்குமான எச்சரிக்கை.