Election bannerElection banner
Published:Updated:

மதுரை: சட்ட விரோதமாக ஆப் மூலம் கடன்! - ஆர்.பி.ஐ ஆளுநர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆன்லைன் லோன் ஆப்கள்
ஆன்லைன் லோன் ஆப்கள்

சட்ட விரோதமாக ஆப் மூலம் கடன் வழங்குவதைத் தடை செய்யக் கோரி மனுவில் ஆர்.பி.ஐ ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறைச் செயலர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``வளர்ந்துள்ள டிஜிட்டல் உலகில் செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காகப் பல புதிய ஆப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை ஆர்.பி.ஐ அனுமதி இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. இந்தியா முழுதும் செல்போன் மூலம் கடன் பெறுவதற்குப் பல ஆப்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. செல்போன் ஆப் மூலம் கடன் பெறுபவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் ஆப்களில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவது இல்லை. இவ்வாறு கடன் பெற்று, கடன்களைச் சரியாக செலுத்தாத நபர்களின் விவரங்கள், புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்களில் பகிர்வது, செல்போன் மூலம் தொடர்புகொண்டு தவறாகப் பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இதன் காரணமாக கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குச் செல்கின்றனர்.
இந்த கடன் ஆப்களில் கூகுள் செயலி மூலம் பஜாஜ்ஃபின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆப்கள் கடன்களை வழங்கிவருகின்றன. இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஆப் மூலம் கடன் பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துவருகிறது.

கடன் வழங்கும் பல ஆப் பின்னணியில் சீனா நாடு மறைமுகமாக செயல்படுவது தெரியவருகிறது. இவர்கள் இந்தியாவிலுள்ள சிலர் மூலம் வங்கிப் பரிவர்த்தனைகளிலும் மறைமுகமாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கடன் வழங்கும் ஆப் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஆர்.பி.ஐ இணையதளம் மற்றும் ஆப் மூலம் கடன் வழங்குபவர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், இது போன்ற சட்ட விரோதமாகச் செயல்படும் ஆப்களுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆன்லைன் லோன் ஆப்
ஆன்லைன் லோன் ஆப்

அப்போது நீதிபதிகள், ``தற்போது ஆப் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கியப் பிரச்னையாக இருந்துவருகிறது. இது வருத்தத்துக்கு உரியது. செயலி மூலம் கடன் பெறுவதில் இரண்டு முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன. செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். இது சட்ட விரோதம். கடன்களை வசூல் செய்வதில் அங்கீகரிக்க முடியாத முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுவது இல்லை” எனக் கூறிய நீதிபதிகள் மனு குறித்து ஆர்.பி.ஐ ஆளுநர், கூகுள் நிறுவனம், மத்திய நிதித்துறைச் செயலர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3.02.2021 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு