Published:Updated:

`வழக்கு முடியும்வரை மேலவளவு ஊருக்குள் வரக்கூடாது!’- முன் விடுதலை வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் கடந்த 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

மேலவளவு
மேலவளவு

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து 6 பேர் மற்றோர் இடத்தில் ஒரு நபர் என மொத்தம் 7 பேரையும் ஒரு கும்பல் படுகொலை செய்தது.

மேலவளவு நினைவிடம்
மேலவளவு நினைவிடம்

இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் கடந்த 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், விடுதலை செய்ததற்கான பிறப்பிக்கப்பட்ட அரசாணை தேவை என்பதால் அதன் நகலை வழங்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு தொடர்பாக வழக்கு தீவிரமடைந்துள்ளது.

எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், வழக்கறிஞர் ரத்தினம்.
எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், வழக்கறிஞர் ரத்தினம்.

இந்நிலையில் இன்றைய விசாரணையில், மேலவளவு கொலை வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும், எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். அதை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்தவும், வேலூர் எஸ்.பி முன்பாக முதல் மற்றும் 3 ஆவது ஞாயிறன்று ஆஜராக வேண்டும்.

முன்விடுதலை ஆனவர்கள் பாஸ்போர்ட்டை மதுரை எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதேபோல இது தொடர்பாக எவ்வித கூட்டம் நடைபெறவும் அனுமதிக்கக் கூடாது. அதை மதுரை எஸ்.பி உறுதி செய்ய வேண்டும். 2 மற்றும் 4 ஆம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் நன்னடத்தை அலுவலர் முன்பாக ஆஜராக வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை மேலவளவுக்குள் நுழையக்கூடாது" எனவும் உத்தரவிட்டனர்.

madurai hc
madurai hc

இது தொடர்பாக முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6 -ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் அமர்வு.