Published:Updated:

மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

மராத்தா
மராத்தா

மஹாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. 50 சதவிகித உச்ச வரம்பை மீறி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் மராத்தாக்கள், தங்களுக்கு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய அளவில் 2018-ம் ஆண்டு பெரும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது பலர் தற்கொலையும் செய்து கொண்டனர். இதனால் மராத்தாக்களுக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய பா.ஜ.க அரசு முடிவு செய்தது.

மாநில அரசு நியமித்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த இட ஒதுக்கீடு வழங்க 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மராத்தாக்களுக்கான இட ஒதுக்கீட்டை 12 முதல் 13 சதவிகிதமாக குறைத்து உத்தரவிட்டது. மாநில அரசும் மராத்தா அமைப்புக்களும் அதனை ஏற்றுக்கொண்டன.

இதையடுத்து பிற சமூகத்தினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அந்த மனு மீது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்திற்கு கொடுக்கபட்ட இட ஒதுக்கீட்டுக்கு தற்காலிகத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனுவும் ஏற்கப்படவில்லை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அசோக்பூசன் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. மராத்தாக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் ஒருமித்த அடிப்படையில் தீர்ப்பளித்தனர். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக மராத்தாக்களை கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்கள் என்று அறிவிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு வரம்பான 50 சதவிகிதத்தை அதிகரிக்க தற்போது விதிவிலக்கான சூழ்நிலை எதுவும் இல்லாததால், மண்டல் கமிஷன், இந்திரா சவ்னி தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய தீர்ப்புப்படி 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மீறுவது சட்டம் 14 மற்றும் 15வது பிரிவை மீறிய செயலாகும் என்றனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை: மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பாதித்த 1,000 பெண்களுக்கு பிரசவம்!

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மஹாராஷ்டிரா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும் போராட்டத்துக்கு பிறகு பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதால், மராத்தா மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு