`பெரிய மால்கள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு, பாதுகாப்பு தருவதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் நகர வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு சட்டப்படி, மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் கட்டடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு அதிகாரமில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு இடம் அளிப்பதும், பாதுகாப்பு தருவதும் அவர்களின் கடமை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத் நகரிலுள்ள மால் ஒன்றின் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2018 அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், `வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரம் வரை இலவச பார்க்கிங் வசதி தர வேண்டும், அதற்கு மேல் நிறுத்துவதற்கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு இரு சக்கர வாகனத்துக்கு 10 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு 30 ரூபாய் வசூலிக்க வேண்டும் ’ என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு எதிராக, அகமதாபாத்திலுள்ள ஒரு மால் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

இதற்குப் பதிலளித்த குஜராத் அரசு, `மால் நிர்வாகம் பார்க்கிங் ஏரியாவுக்கு கட்டணம் விதித்து அதை வியாபார ரீதியாகப் பயன்படுத்துகிறது. அதனால், வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் ஏரியாவுக்கு வெளியே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகிறது’ எனக் குற்றம்சாட்டியது.
இதையடுத்துதான் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களிலும் பார்க்கிங் கட்டணம்தான் வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. எனவே, குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கும் பார்க்கிங் கட்டணங்களை நீக்கினால் பெருமகிழ்ச்சி அடைவார்கள். நடைமுறைக்கு வருமா?