Published:Updated:

``என் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான நீதிபதியைப் பார்த்ததில்லை!’’- ரஞ்சன்கோகாயை சாடும் கட்ஜு

ரஞ்சன் கோகோய் மற்றும் கட்ஜூ
ரஞ்சன் கோகோய் மற்றும் கட்ஜூ

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, `ரஞ்சன் கோகோய் பாலியல் வக்கிரம் நிறைந்தவர்' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோயை, ராஜ்யசபா எம்.பி-யாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர், ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்கப்பட்டது இதுவே முதன்முறை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது, நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் தீர்ப்பளிக்கப்பட்டது. அயோத்தி விவகாரத்தில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. மசூதி இருந்த இடம் ராமஜென்மபூமி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது. ரஃபேல் விவகாரத்தில், `மத்திய அரசு எந்தத் தவறும் இழைக்கவில்லை' என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் என்.ஆர்.சி சட்டம் இயற்றப்பட, ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வுதான் முக்கியக் காரணம். `நாட்டின் முக்கிய விவகாரங்களில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால்தான் ரஞ்சன் கோகோய் எம்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன. இந்த நியமனத்தைக் கண்டித்து டெல்லி, மதுரை என நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ரஞ்சன் கோகோய்க்கு இந்தப்பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, `ரஞ்சன் கோகோய் பாலியல் வக்கிரம் நிறைந்தவர்' என்று கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில் , ``நான் 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்துள்ளேன். 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்துள்ளேன். என் வாழ்க்கையில் நல்ல நீதிபதிகளையும் மோசமான நீதிபதிகளையும் பார்த்துள்ளேன்.

தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பேட்டியளிக்கும் கோகோய்
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பேட்டியளிக்கும் கோகோய்

ஆனால், இப்படியொரு பாலியல் வக்கிரம் நிறைந்த வெட்கம் இல்லாத நீதிபதியை இந்திய நீதித்துறையில் நான் பார்த்ததே இல்லை'' என்று கடுமையாகச் சாடியுள்ளார். ரஞ்சன் கோகோய் மீது மார்க்கண்டேய கட்ஜூ பாய்வது இது முதன்முறை அல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது, அவர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போது, ரஞ்சன் கோகோவைப் பார்த்து மார்க்கண்டேய கட்ஜூ, தனிப்பட்ட முறையில் இன்னும் மோசமான வார்த்தைகளால் கோகோவை வசைபாடிய சம்பவமும் நிகழ்ந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் பிற சீனியர் நீதிபதிகளான செல்லமேஸ்வரர், குரியன் ஜோசப் , ரஞ்சன் கோகோய், மதன் பி. லோக்கூர் ஆகிய நான்கு பேரும் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டனர். இதில், ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிவிட, மற்றவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். ஓய்வு பெற்ற குரியன் ஜோசப்பும், ரஞ்சன் கோகோய் எம்.பி-யாக முடிவெடுத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் நீதி நிலவ தைரியத்துடன் பேட்டியளித்த ரஞ்சன் கோகோய் இப்போது சமரசம் செய்துகொண்டது ஏன் என்று தெரியவில்லை.
ஜோசப் குரியன்

`நீதித்துறையின் சுதந்திரம், எந்தப் பக்கமும் சாராத நேர்மை , புனிதமான கொள்கைகளை ரஞ்சன் கோகோய் அடமானம் வைத்துவிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேர் நீதித்துறைதான். ரஞ்சன் கோகோய்வின் முடிவு சாமானிய மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையைச் சிதைத்து விட்டது. நீதித்துறையில் நீதி நிலவ வேண்டுமென்பதற்காக தைரியத்துடன் முன்வந்து செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிட்ட ரஞ்சன் கோகோய், இப்போது தன் கொள்கைகளைச் சமரசம் செய்துகொண்டது ஏன் என்பது புரியவில்லை'' என்று குரியன் ஜோசப் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சோதி கூறுகையில், ``நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு எந்த ஒரு பணியையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நீதிபதிகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது' என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் விடுமுறை, ஏசி பயன்பாடு, தடுப்பூசி தாமதம்... விளக்கங்கள் தந்த கொரோனா கருத்தரங்கம்!

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றார். இந்தப் பதவியில் 13 மாதங்கள் இருந்த ரஞ்சன் கோகோய்க்கு, தற்போது மேலவை எம்.பி பதவி வழங்க மத்திய அரசு முடிவெடுத்து இரு நாள்களுக்கு முன், குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. ரஞ்சன் கோகோய் இன்று ராஜ்யசபா எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு