Published:Updated:

ஹோட்டல் சர்ச்சை - சோனு சூட் மனுவைத் தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்!

சோனு சூட்

நடிகர் சோனு சூட் அனுமதி இல்லாமல் குடியிருப்புக் கட்டடத்தை ஹோட்டலாக மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக சோனு சூட் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹோட்டல் சர்ச்சை - சோனு சூட் மனுவைத் தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்!

நடிகர் சோனு சூட் அனுமதி இல்லாமல் குடியிருப்புக் கட்டடத்தை ஹோட்டலாக மாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக சோனு சூட் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Published:Updated:
சோனு சூட்

நடிகர் சிம்பு நடித்த `ஒஸ்தி’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்தவர். ஆனால், தற்போது சோனு சூட் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மும்பை ஜுகுவிலுள்ள தனது ஆறு மாடிகொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தை, அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றியிருக்கிறார்.

சோனுசூட்டின் ஆறு மாடிக் கட்டடம்
சோனுசூட்டின் ஆறு மாடிக் கட்டடம்

இது தொடர்பாக சோனுசூட்டுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அப்படியிருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் குடியிருப்புக் கட்டடத்தில் ஹோட்டலுக்குத் தேவையான மாற்றங்களை அவர் செய்துவந்தார். இதையடுத்து, கடந்த மாதம் மாநகராட்சி நிர்வாகம் சோனு சூட்டுக்கு எதிராக ஜுகு போலீஸில் புகார் செய்தது. போலீஸார் இந்தப் புகார் குறித்து விசாரித்துவருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சோனு சூட், தான் எந்தவித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்றும், குடியிருப்புக் கட்டடத்தை வர்த்தகப் பயன்பாட்டுக் கட்டடமாக மாற்றுவதற்காக மகாராஷ்டிரா கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே இன்னும் அனுமதி பெற வேண்டியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதோடு விடாமல் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சோனு சூட் அடிக்கடி தவறு செய்யக்கூடியவர் என்றும், மாநகராட்சியின் லைசென்ஸ் துறையின் அனுமதி பெறாமல் குடியிருப்புக் கட்டத்தை ஹோட்டலாக நடத்த விரும்புகிறார் என்றும் தெரிவித்தார். இதில் நேற்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி பிரித்விராஜ், நடிகர் சோனுசூட் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சோனு சூட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமோஹ் சிங்கிடம், `உங்களுடைய மனுதாரர் கட்டடத்தை இடிக்காமலிருக்க மாநகராட்சியை அணுகலாம். நீங்கள் மிகவும் தாமதமாக நீதிமன்றத்தை அணுகியிருக்கிறீர்கள்’ என்றும், `இதற்கு முன்பு அதிகமான வாய்ப்புகள் இருந்தன’ என்று தெரிவித்த நீதிபதி, மாநகராட்சிதான் இனி முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சோனு சூட்டுக்குச் சொந்தமான கட்டடம் இடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாநகராட்சி ஒப்புதல் கொடுக்காவிட்டால், தனது கட்டடத்தை மீண்டும் குடியிருப்புக் கட்டடமாகவே மாற்றிவிடுவேன் என்று ஏற்கெனவே சோனு சூட் தெரிவித்திருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் கட்டடத்தைக் குடியிருப்புக் கட்டடமாக மாற்றுவாரா அல்லது உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism