Published:Updated:

மும்பை: `மத்திய அரசு, வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடத் தயாராக இல்லை!’ - உயர் நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்

`மத்திய அரசு உத்தரவு கொடுக்காவிட்டாலும் வயதானவர்கள், ஊனமுற்றோருக்கு வீட்டுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி போட நாங்கள் உத்தரவு தரத் தயார்’ என்று மும்பை மாநகராட்சிக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமுடக்கம் இருந்துகொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அனைத்து சென்டர்களிலும் தடுப்பூசி போடப்படுவதில்லை. பதிவு செய்து மக்கள் பல நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள்கூட தடுப்பூசி போடப்படும் சென்டருக்கு வந்து தடுப்பூசிபோட பல நாள்கள் அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

இதையடுத்து 75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத ஊனமுற்றவர்கள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு தலைமை நீதிபதி திபன்கர் தத்தா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, `வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போட முடியாது என்ற மத்திய அரசின் கொள்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?' என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் சிங், வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியதாகவும், அதில் நோயாளிகளைத் தடுப்பூசி போட ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் குறிப்பிட்டார். உடனே கருத்து தெரிவித்தனர் நீதிபதிகள். ``நிபுணர்குழுவில் இடம்பெற்று இருப்பவர்களுக்குக் கள நிலவரம் தெரியாது. நாட்டில் அதிகமான கட்டடங்கள் இருக்கும் தெருக்கள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வர முடியாது. நான் பிறந்து வளர்ந்த கொல்கத்தாவில்கூட குடியிருப்புக் கட்டடங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. அங்கெல்லாம் ஸ்ட்ரெச்சர் கொண்டு செல்ல முடியாது. அதிகமான முதியோர் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாத அளவுக்குக் குறுகலான தெருக்களில் வசிக்கின்றனர்’’ என்று தலைமை நீதிபதி திபன்கர் தெரிவித்தார்.

மும்பை உயர் நீதிமன்றம்
மும்பை உயர் நீதிமன்றம்

``வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தடுப்பூசி பெற உரிமை இல்லை என்று நீங்கள் (மத்திய அரசு) சொல்கிறீர்களா... அத்தகையவர்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வீர்கள் என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு வீட்டில் சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை என்று தெரிகிறது. மும்பை மாநகராட்சி, வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடத் தயாராக இருந்தால் மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். நீங்கள் பணியைத் தொடங்குங்கள். வயதானவர்கள், ஊனமுற்றோர், படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போட முடியுமா என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் பதிலளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு