பிரபல இசையமைப்பாளர் டி.இமானுக்கும், மோனிகா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் சூழலில், இமான் தன் குழந்தைகளைச் சந்திக்க குடும்பநல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அந்த இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளும் இமானிடம்தான் இருந்துள்ளன. தன் முன்னாள் மனைவி மோனிகா, குழந்தைகளைத் தான் சந்திக்கக் கூடாது என்பதற்காக அவர்களை வெளிநாடு அனுப்பிவைக்க முயற்சி செய்வதாகவும், அதற்காக குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் தொலைந்ததாகக் கூறி, புதிய பாஸ்போர்ட் பெற்றதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கெனவே பாஸ்போர்ட் இருக்கும் தகவலை மறைந்து, புதிய பாஸ்போர்ட் வாங்கியிருப்பது சட்டவிரோதம் என்றும், புதிய பாஸ்போர்ட்டை நீக்க வேண்டும் என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பாஸ்போர்ட் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பதில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், தவறான தகவலைக் கூறி பாஸ்போர்ட் பெற்ற மோனிகா மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.