Published:Updated:

`டோல்கேட்டில் நடந்தது நேர்மையற்ற வணிகம்!'- 5 ரூபாய்க்காக ரூ.20,000 அபராதம் விதித்த நெல்லை நீதிமன்றம்

டோல்கேட்
டோல்கேட் ( மாதிரி படம் )

தூத்துக்குடி டோல்கேட்டில் அறிவிப்புப் பலகையில் இருந்ததைவிடவும் கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதுபற்றி சுங்கச்சாவடி மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டபோது அவதூறாகப் பேசினர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர், பிரபாகரன். வழக்கறிஞரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 4-ம் தேதி சொந்த வேலைக்காக காரில் தூத்துக்குடிக்குச் சென்றார். நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகைகுளத்தில் உள்ள டோல்கேட்டில் திரும்பிச் செல்வதற்கான கட்டணத்தையும் சேர்த்து (ரிட்டர்ன் பாஸ்) பணம் செலுத்தியிருக்கிறார்.

tollgate receipt
tollgate receipt

அவரிடம் இருந்து ரூ.90 கட்டணத்தை எடுத்த டோல்கேட் ஊழியர், அதற்கான ஒப்புதல் சீட்டைக் கொடுத்திருக்கிறார். வேலையை முடித்த பின்னர் திரும்பி வரும்போது அங்கிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தபோது அதில், திரும்பிச் செல்வதற்கான பயணத்துக்கும் சேர்த்து ரூ.85 என எழுதி வைக்கப்பட்டிருந்தது.

டோல்கேட் பணியாளரிடம் இதுபற்றி முறையிட்டதற்கு, `வாங்கிய பணத்துக்கு ரசீது கொடுத்திருக்கிறோம். அதனால் பேசாமல் போங்க. இதுபற்றி எங்கே வேண்டுமானாலும் சொல்லுங்க’ எனப் பலர் முன்னிலையில் பேசியிருக்கிறார். 

`வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள்

இது பற்றி டோல்கேட் மேலாளரிடம் புகார் செய்தபோது, `அறிவிப்பு பலகையில் எழுதியிருப்பதை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாங்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டுப் போங்க’ என்று பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தை டோல்கேட் ஒப்பந்ததாரரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரபாகரன், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் நீதிமன்றம்

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகி, `டோல்கேட் நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். தனக்கு சேவைக் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக டோல்கேட்டில் குறிப்பிட்டுள்ள டோல்ஃப்ரீ நம்பரில் பேசியிருக்கிறார். அதில் பேசிய சூப்பர்வைசர், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும் மேலாளரிடம் பேசச் சொல்லியுள்ளார்.

ஆனால், மனுதாருக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைத் தீர்க்காமல் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர். மனுதாரருக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டுக்கு டோல்கேட் நிர்வாகத்தினரே பொறுப்பு என்பதால் அவருக்கு இழப்பீடாக ரூ.95,000 வழங்க வேண்டும்’ என வாதாடினார்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களான  சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர், `டோல்கேட் நிர்வாகம் மனுதாரரிடம் கூடுதலாக ரூ.5 வசூல் செய்திருப்பது நேர்மையற்ற வணிகம்' எனத் தீர்ப்பளித்தனர்.

``டோல்கேட் நிர்வாகத்தால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவருக்கு ரூ.15,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5000, மனுதாரரிடம் கூடுதலாக வசூல் செய்த ஐந்து ரூபாய் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக ரூ.20,005 வழங்க வேண்டும். 

`மதுபானத்துக்கு அதிக விலை; காலி பாட்டிலையும் தரவில்லை!'- அதிரடி காட்டிய நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

இந்தத் தொகையை மனுதாரருக்கு ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தனர்.

பின் செல்ல