Published:Updated:

`மதுபானத்துக்கு அதிக விலை; காலி பாட்டிலையும் தரவில்லை!'- அதிரடி காட்டிய நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் நீதிமன்றம்

மதுகுடிக்கச் சென்றவரிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் கூடுதலாக வசூலித்த தனியார் மதுக்கூடம் (பார்), காலியான மது பாட்டிலை எடுத்துச் செல்ல அனுமதிக்காதது தவறு.

சட்ட உதவியாளராகப் பணியாற்றும் வெங்கடேஷ் என்பவர் நெல்லை-மதுரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் நிறுவனத்தின் சார்பாக நடத்தப்படும் குளிர்சாதன வசதி கொண்ட மதுக்கூடத்தில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி மதுபானம் வாங்கிக் குடித்துள்ளார். இரண்டு பாட்டில் மதுபானம் குடித்த அவரிடம் ஹோட்டல் நிர்வாகத்தினர் ரூ.481 வசூல் செய்திருக்கிறார்கள்.

`மதுபானத்துக்கு அதிக விலை; காலி பாட்டிலையும் தரவில்லை!'- அதிரடி காட்டிய நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

அந்த பீர் பாட்டிலில், அதிகபட்ச விலையாக ரூ.120 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஹோட்டலின் `பார்' நிர்வாகத்தினர் வெங்கடேஷிடம் கூடுதலாக ரூ.241 அதிகமாக வசூல் செய்துள்ளது. பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மதுக்கூடத்தின் மேலாளரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். ஆனால், மேலாளர் பில் தொகையைச் செலுத்துமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இரு பீர்களுக்கும் கூடுதலாக ரூ.241 சேர்த்து ரூ.481 செலுத்திய வெங்கடேஷ், தான் குடித்த காலி மது பாட்டிலைத் தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அந்த மதுக்கூடத்தின் மேலாளர், காலி பீர் பாட்டிலையும் தர மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த வெங்கடேஷ், இது தொடர்பாக வழக்கறிஞர் பிரம்மா மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

அதில், பீர் பாட்டிலுக்கான அதிகபட்ச விலையை விடவும் கூடுதலாகத் தன்னிடம் வசூலித்த மதுக்கூட நிர்வாகம், காலி பாட்டிலையும் கொடுக்க மறுத்து விட்டது. இது நேர்மையற்ற வணிகம். இது குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்தபோது அவரும் பலர் முன்னிலையில் அவமானமாகப் பேசினார். கலால்துறை உதவி ஆணையரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்ததற்கு, அவரும் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்து விட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

பார் மேலாளர், உரிமையாளர், கலால்துறை உதவி ஆணையர் ஆகியோரின் செயல்களால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் நுட்பமான தனது பணிகளைச் செய்ய முடியாத அளவுக்கு மனச்சுமை ஏற்பட்டதாகவும் மனுதாரர் வெங்கடேஷ் குறிப்பிட்டிருந்தார். அதனால் எதிர்மனுதாரர்கள் மூவரும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.95,000 வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் தேவதாஸ் மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், ``மனுதாரர் வெங்கடேஷிடம் ரூ.241 கூடுதலாக வசூல் செய்திருப்பது நேர்மையற்ற வணிகம். அதனால், மனுதாரரிடம் கூடுதலாக வசூல் செய்த தொகையை பார் உரிமையாளர் மற்றும் மேலாளர் திரும்பக் கொடுக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்

மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5000 ஆகியவற்றைச் சேர்த்து பார் உரிமையாளர், மேலாளர் மற்றும் கலால்துறை உதவி ஆணையர் ஆகிய மூவரும் சேர்ந்து மொத்தம் ரூ.15,000 கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

மனுதாரருக்கு மொத்தமாகக் கிடைக்க வேண்டிய ரூ.15,241 ஒரு மாத காலத்துக்குள் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின் செல்ல