Published:Updated:

`இருவேளை கையெழுத்து; ரூ.10,000 பிணைத்தொகை!' - நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் காலையிலும் மாலையிலும் கையெழுத்திட வேண்டும். இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன் ( எல்.ராஜேந்திரன் )

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாகக் கடந்த 29-ம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மருத்துவமனையில் நெல்லை கண்ணன் (பழைய படம்)
மருத்துவமனையில் நெல்லை கண்ணன் (பழைய படம்)

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், இரு சமூகத்தினரிடம் மோதல் ஏற்படுத்த முயலுதல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நெல்லை கண்ணன் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்ற நிலையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி பெரம்பலூரில் வைத்து கைது செய்யப்பட்டார். மறுநாள் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

`மோடி, அமித் ஷா மீது கடுமையான விமர்சனம்!’ -நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி நெல்லை 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் நெல்லை கண்ணன் வழக்கறிஞர்களான பிரம்மா, காமராஜ் ஆகியோர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை முதன்மை நீதிபதி நசீர் அகமது விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவலிங்கமுத்து, மீது வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராயக் கால அவகாசம் கேட்டதால் விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று (9-ம் தேதி) ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன்
மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன், தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருப்பதால் அதன் மீதான முடிவு தெரியும்வரை ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவித்தார். அதற்கு நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்குக்கும் ஜாமீன் மனு மீதான விசாரணைக்குத் தொடர்பில்லை என வாதிட்டனர்.

ஜாமீன் மனு மீது இரு தரப்பின் வழக்கறிஞர்களும் வாதிட்டு முடித்த நிலையில் நீதிபதி நசீர் அகமது இன்று நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் காலையிலும் மாலையிலும் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். 10,000 ரூபாய் பிணைத்தொகை கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

கடந்த 2-ம் தேதி சேலம் சிறையில் அடைக்கப்பட்ட நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் அதற்கான உத்தரவுடன் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக முயற்சியில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை நெல்லை கண்ணன் சேலம் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.