Published:Updated:

நிறம் பார்க்குமா நீதி?

செபோல்டு
பிரீமியம் ஸ்டோரி
News
செபோல்டு

1998-ம் ஆண்டு பிராட்வாட்டர் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்படுகிறார். ஆனாலும், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்தது அமெரிக்கக் காவல்துறை.

நியூ யார்க்கின் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த அலைஸ் செபோல்டுக்கு அப்போது 18 வயது. மாலை வேளை ஒன்றில், பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்த செபோல்டு பலவந்தமாக வன்புணர்வு செய்யப்படுகிறார். “அந்த நபர் என்னைத் தகாத வார்த்தையில் திட்டினார். அங்கிருந்த ஒரு கல்லில் என் தலையைக் காயப்படுத்தினார். நான் வலிதாங்க முடியாமல், பேச வார்த்தைகளற்று என்னை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, என்னிடமிருந்த பொருள்களைத் திருடிச் சென்றார்” என்று பதிவு செய்கிறார் செபோல்டு. 1981-ம் ஆண்டு இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. ஓராண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, ஆந்தணி பிராட்வாட்டர் என்பவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

நிறம் பார்க்குமா நீதி?

தன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்தும் அந்த வலிகளிலிருந்து அவர் மீள எடுத்துக்கொண்ட வழிகள் குறித்தும் 1999-ம் ஆண்டு Lucky என்கிற சுயசரிதை நூலை எழுதுகிறார் செபோல்டு. ஒரு பெண் தனக்கு நேர்ந்த ஒரு துன்பத்தைப் புனைபெயர் இல்லாமல், தன் பெயரிலேயே வெளியிடுவதென்பது அந்தக் காலத்தில் துணிச்சல் மிகு சம்பவமாகப் பார்க்கப்பட்டது. 10 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையான அந்தப் புத்தகத்தில் தனக்கு நேர்ந்த அந்தக் கோர சம்பவத்தை முதல் பத்துப் பக்கங்களில் வலியுடன் விவரித்திருப்பார் செபோல்டு. நீதித்துறை எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக Lucky புத்தகம் அப்போது உதாரணமாகப் பேசப்பட்டது.

1998-ம் ஆண்டு பிராட்வாட்டர் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்படுகிறார். ஆனாலும், பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்தது அமெரிக்கக் காவல்துறை. தண்டனைக் காலத்தின் போது ஐந்துமுறை அவருக்கு பரோல் மறுக்கப்பட்டது. புத்தகம் வெளியாகி இருபதாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது பிராட்வாட்டர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது நியூயார்க் மாகாண நீதிமன்றம். கிட்டத்தட்ட இதைத்தான் இத்தனை ஆண்டுகளாக பிராட்வாட்டரும் சொல்லிக்கொண்டிருந்தார்.

நிறம் பார்க்குமா நீதி?

செபோல்டு ஒரு வெள்ளை நிறப்பெண். பிராட்வாட்டர் ஒரு ஆப்ரோ அமெரிக்கர். குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வந்த எட்டாவது நாள், பிராட் வாட்டருக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் செபோல்டு. “நாற்பதாண்டுகளுக்கு முன்னர், 18 வயதான நான் அமெரிக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்தேன். தவறான குற்றச்சாட்டால், 16 ஆண்டுகள் மட்டுமல்லாது வாழ்நாள் முழுக்க இந்த அழுக்கை பிராட்வாட்டர் சுமந்திருக்கக்கூடும். நீதித்துறை கறுப்பு உடல் கொண்ட ஒருவரை நாற்பதாண்டுகள் குற்றவாளியாக்கிவிட்டது என்பதை என்னால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே சமயம், என்னை வன்புணர்வு செய்தவன் இன்னொரு பெண்ணை அதன்பின்னர் வன்புணர்வு செய்திருக்கலாம். சிறைத் தண்டனை பெறாமல் தன் வாழ்நாளைக் கழித்திருக்கலாம். இதையும் நான் சகித்துக்கொள்ள வேண்டும்’’ என நீள்கிறது அந்த மன்னிப்புக் கடிதம்.

61 வயதில், பிராட்வாட்டரைப் பாலியல் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து நீக்கியி ருக்கிறார்கள். Lucky புத்தகத்தைத் திரைப்படமாக எடுக்க ஆயத்தமான தயாரிப்புக் குழு, அதில் இருக்கும் சில சந்தேகங்களைக் களைய மீண்டும் இவ்வழக்கைத் தூசி தட்டி யிருக்கிறது. படத்துக்கான வேலைகளில் இருந்த திமோதி, தனியார் புலனாய்வு அதிகாரி ஒருவரை நியமித்து பிராட் வாட்டரை பேட்டி கண்டிருக் கிறார். அதன் மூலம்தான் அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். Lucky புத்தகத்தின் பிரதிகளை இனி விற்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறது பதிப்பகம். தற்போது Unlucky என்னும் தலைப்பில், பிராட்வாட்டரின் பார்வையில் ஆவணப்படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார்கள்.

கன்சாஸ் நகரத்தில் 1978-ம் ஆண்டு மூன்று கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டு 43 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கெவின் ஸ்டிரிக்லாண்டை தற்போது குற்றமற்றவர் என அறிவித்திருக்கிறது அமெரிக்காவின் மிஸௌரி நீதிமன்றம். விடுதலையானவுடன் அவர் முதலில் சென்று பார்த்தது அவர் அம்மாவின் கல்லறையைத்தான். கடந்த ஆகஸ்டு மாதம், அவர் இறந்தபோது, அவரைப் பார்க்க கெவினுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 1949-ம் ஆண்டு வெள்ளைநிறப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நான்கு நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். குற்றவாளிக் குடும்பங்களின் தொடர் நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பின்னர் 72 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த நான்கு நபர்களையும் குற்றமற்றவர்கள் என அறிவித்திருக்கிறார்கள். அந்த நால்வரும் தற்போது உயிருடன் இல்லை. ஆப்ரோ அமெரிக்கர்களின் தலைவரான மால்கம் எக்ஸ் கொலை செய்யப்பட்ட போது கைதான மொஹம்மது அசிஸ் என்பவரை 55 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

நிறம் பார்க்குமா நீதி?

“இந்த நீதிமன்றமோ நீதிபதிகளோ இந்த வெற்றுத்தாள்களோ என்னைக் குற்றமற்றவன் எனச் சொல்ல வேண்டியதில்லை. இந்த கிரிமினலான நீதித்துறையால் பாதிக்கப்பட்ட 83 வயதான முதியவர் நான்” தீர்ப்பு வெளியான நாளில் அசிஸ் உச்சரித்த வார்த்தைகள் இவை. 2004-ம் ஆண்டு மூன்று காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார் நதானியல் வுட்ஸ். 2020-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. “நதானியல் வுட்ஸ் 100% குற்றமற்றவர். ஏனெனில், அந்த மூன்று நபர்களையும் சுட்டுக்கொன்றது நான்தான்’’ என நதானியலுக்கு ஆதரவாகக் கடிதம் எழுதினார் கெர்ரி ஸ்பென்சர். “தந்தையே நீங்கள் இந்த சிறைக் கதவுகளைத் தாண்டும்பொழுது, நானும் உங்களுடன் வந்திருப்பேன். ஆனால், அதை உங்களால் அறிய இயலாது.” மரண தண்டனைக்கு முன்னர் வுட்ஸ் தன் தந்தையிடம் சொன்ன வார்த்தைகள் இவை. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பிராட்வாட்டருக்கும், இந்தப் பத்தி முழுக்கக் குற்றம் சாட்டப்பட்டு தங்கள் ஆயுளின் பல ஆண்டுகளைக் கழித்த முகமிலிகளுக்கும் ஒரேவொரு ஒற்றுமைதான். அது, அனைவருமே ஆப்ரோ அமெரிக்கர்கள் என்னும் நிறவேற்றுமைதான்.