Published:Updated:

`அதிகாலை 3.30 மணி வரை நீடித்த வாதங்கள்!’ - நிர்பயா வழக்கில் நள்ளிரவில் நடந்தது என்ன?

திகார் சிறை
திகார் சிறை

`நீங்கள் மனுத்தாக்கல் செய்யும்போதே அதில் உண்மையான விஷயங்களை இணைத்திருக்க வேண்டும்'

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். குற்றவாளிகள் தங்களின் இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த வேளையில் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான ஏ.பி.சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க வாதாடிக்கொண்டிருந்தார்.

ஏ.பி.சிங்
ஏ.பி.சிங்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கலான மனு மீதான விசாரணை நேற்று இரவு 10 மணிக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளிகள் மீதுள்ள நிலுவை வழக்குகளையும் அக்‌ஷய் சிங் மனைவி தாக்கல் செய்த விவகாரத்து மனு குறித்தும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தில் கூறினார்.

இதைக்கேட்ட நீதிபதி, `இரவு 10 மணிக்கு நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு இறுதி நிலையை அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை நாங்கள் உட்கார்ந்து மறுபரிசீலனை செய்ய முடியாது. மரண தண்டனை இருக்காது அல்லது நடக்காது என்று நாங்கள் கூற முடியாது.

நிர்பயா
நிர்பயா

இரவு 11 மணிக்கு நீங்கள் தேவையில்லாத பாயின்ட்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படி நீங்கள் பேசினால் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது. குற்றவாளிகள் நான்கு பேரும் கடவுளைச் சந்திக்கும் நேரத்துக்கும் மிக நெருக்கமான மணித்துளிகளில் நாம் இருக்கிறோம். உங்களுக்கு இன்னும் 4 முதல் 5 மணிநேரம்தான் இருக்கிறது. உங்களிடம் முக்கியமான பாயின்ட்கள் இருந்தால் கூறுங்கள்” என நீதிபதி கூறினார்.

`தாமதம் செய்ய வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர்களின் குடும்பச் சூழலையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். எனக்கு இரண்டு நாள்கள் அவகாசம் கொடுத்தால் சரியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்' என்றார் ஏ.பி.சிங்.

 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

`உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்த ஒன்றை நாங்கள் மீண்டும் கேட்க மாட்டோம். நீங்கள் மனுத்தாக்கல் செய்யும்போதே அதில் உண்மையான விஷயங்களை இணைத்திருக்க வேண்டும்' என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பு நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடியது. தூக்குத் தண்டனையை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படும் சூழலில், அதிகாலை 2.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகளின் உறவினர்கள், நிர்பயாவின் தாய், தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் சிறை தரப்பு அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகினர்.

இறுதியாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங், ``குற்றவாளிகள் தூக்கிலிடும் முன்பு அவர்களது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். சிறை நிர்வாகம் அதற்கு வாய்ப்பில்லை என மறுப்பு தெரிவித்தது. அப்படி சந்திக்க அனுமதித்தால், அது இரு தரப்புக்கும் அதிக வலிகளைக் கொடுக்கும் என்றது.

அதிகாலை 3.30 மணி வரை நீடித்த வாதத்தின் முடிவில் இந்த விவகாரத்தில் புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது என்றது உச்ச நீதிமன்றம். மேலும், குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததும், நிர்பயாவின் தாய் உச்சநீதிமன்றத்திலிருந்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் திகார் சிறைக்குப் புறப்பட்டார். புறப்படும் முன்பு அவர், ``என் மகளுக்கு நீதி கிடைக்கவுள்ளது.. இன்று நான் திருப்திகரமாக உணர்கிறேன். இந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.. குறிப்பாக பெண்களுக்கு நன்றி” என்றார்

`அதிகாலை 3.30 மணி வரை நீடித்த வாதங்கள்!’ - நிர்பயா வழக்கில் நள்ளிரவில் நடந்தது என்ன?

நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்த நிலையில், இன்று அதிகாலை குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 5 மணி அளவில் தூக்குமேடைக்குக் கொண்டு வரப்பட்டனர். 5.30 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு