அரசியல்
அலசல்
Published:Updated:

ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்... கவனம் ஈர்த்த நீதிமன்ற உத்தரவுகள்!

கவனம் ஈர்த்த நீதிமன்ற உத்தரவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கவனம் ஈர்த்த நீதிமன்ற உத்தரவுகள்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு மீது நீதிமன்ற ஆய்வுக்கான `லட்சுமண ரேகை' வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சமீபகாலமாக அதிரடி உத்தரவுகளையும், எச்சரிக்கைகளையும் தமிழக அரசுக்கும் அரசுத் துறைகளுக்கும் பிறப்பித்துவருகின்றன. அவ்வாறு நீதிமன்றங்கள் சாட்டையைச் சொடுக்கிய வழக்குகள், கவனம் ஈர்த்த உத்தரவுகள் சிலவற்றின் தொகுப்பு இங்கே...

* சீருடையில் பள்ளி மாணவர்கள் மது வாங்குவது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதே நிலைமை தொடர்ந்தால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடவேண்டிய நிலை ஏற்படும்.

* மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்... கவனம் ஈர்த்த நீதிமன்ற உத்தரவுகள்!

* ஒரு திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு முன்பு, அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டியது பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை. ஒருவேளை, எந்தத் திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்குத் திருமணப் பதிவுச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அந்தச் சான்றிதழ் போலி திருமணப் பதிவுச் சான்றிதழாகவே கருதப்படும்.

* அரசியலமைப்பு பிரதிநிதிகள், நீதிபதிகள், பொதுமக்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை வெளியிடக் கூடாது. எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, சமூக ஒழுங்கைப் பராமரிக்க நீதித்துறை அதிகாரத்தைக் கையிலெடுக்கவேண்டிய நேரம் இது.

* நவம்பர் 6-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும். ஒருவேளை அந்தத் தேதியில் காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணை முன்னெடுக்கப்படும்

* இழப்பீடு கோரிய வழக்குகளின் முடிவுக்காகக் காத்திருக்காமல், போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நீதியின் மீது நம்பிக்கைவைத்து, நாள் முழுவதும் சாமியானாவுக்குக் கீழ் அமர்ந்து சிரமப்படாமல் விவசாயிகள், விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

* உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம்.

* கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கும்போது கல்வித் தகுதி விவகாரத்தில் சமரசமோ, அனுதாபமோ காட்டக் கூடாது.

* தற்போது பள்ளித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்குப் பயனுள்ளதாக இல்லை. இதே நிலை நீடித்தால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் குழுவைக் கலைக்கவேண்டி வரும்.

* அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலையுயர்ந்த மருந்துகள், உண்மையில் ஏழை மக்களைச் சென்றடைவதில்லை. ஆனால், அந்த மருந்துகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்படுகிறது எனவும் தகவல் வருகிறது.

* பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளை ரத்துசெய்ய, பெற்றோருக்கு உரிமை இருக்கிறது.

* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியான நீதிமன்ற உத்தரவை 10 நாள்களில் அமல்படுத்தவில்லை யென்றால், தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.

* ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும், ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறைத் தலைவரிடமிருந்தோ வருவதில்லை. `ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது’ என்ற தமிழக உள்துறை முதன்மைச் செயலாளரின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட நேரிடும்.

* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை. அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக் கூடாது... அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எங்கு இருக்கின்றன... பதிவுசெய்யாமல் செயல்படும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

* 21-ம் நூற்றாண்டில் மதத்தின் பெயரால் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்... ஜனநாயகம், மதச்சார்பின்மை கொண்ட நாட்டில் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கின்றன. வெறுப்புப் பேச்சுகள் தொடர்பான புகார் வரும்வரை காத்திருக்காமல், காவல்துறை, மாநில அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேவையற்ற கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ஒரு பெண் திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்ற பாகுபாடு தேவையில்லை. கருக்கலைப்பு செய்துகொள்ளும் முடிவை எடுப்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமை.

* பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு மீது நீதிமன்ற ஆய்வுக்கான `லட்சுமண ரேகை' வரம்பை நீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது. இருந்தபோதும், அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இதற்கான ஆவணங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதோடு, அது மக்களைத் தாக்கினால், அந்தச் செலவையும் ஏற்க வேண்டும்.