Published:Updated:

“விரைவாக விசாரித்தால்தான் நீதி கிடைக்கும்!” - சாத்தான்குளம் வழக்கு... ஓராண்டு அப்டேட்

குற்றம்சாட்டப்பட்டவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
குற்றம்சாட்டப்பட்டவர்கள்

இவர்களில் சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றம்சாட்டப்பட்டவர்களைச் சிக்கவைத்தது.

“விரைவாக விசாரித்தால்தான் நீதி கிடைக்கும்!” - சாத்தான்குளம் வழக்கு... ஓராண்டு அப்டேட்

இவர்களில் சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றம்சாட்டப்பட்டவர்களைச் சிக்கவைத்தது.

Published:Updated:
குற்றம்சாட்டப்பட்டவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
குற்றம்சாட்டப்பட்டவர்கள்

உலகின் மனசாட்சியையே உலுக்கிய கொடூரம் அது. காவல் நிலையங்களில் நிகழும் கொடூரங்களுக்கு உச்சபட்ச உதாரணமாகக் கருதப்படுகிறது அந்தச் சம்பவம். தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் காவல் அதிகாரிகளால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு, உயிரிழந்தனர். கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. ஓராண்டு நிறைவடையப் போகும் நிலையில், வழக்கின் தற்போதைய நிலை என்ன?

சம்பவத்தைப் பற்றிய சிறு நினைவுகூரல்... தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜும், மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தனர். 2020, ஜூன் 19-ம் தேதி கொரோனா ஊரடங்கு காலத்தில் குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விசாரணை என்கிற பெயரில் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் கொடூரமாகத் தாக்கினார்கள். இருவரின் உடல்நிலையும் கடுமையாக மோசமடைந்த நிலையிலும், அவர்களை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்கு ஜூன் 22-ம் தேதி இரவு பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலை ஜெயராஜும் மரணம் அடைந்தனர்.

 “விரைவாக விசாரித்தால்தான் நீதி கிடைக்கும்!” - சாத்தான்குளம் வழக்கு... ஓராண்டு அப்டேட்

நாடு முழுவதும் கொந்தளிப்பைக் கிளப்பிய இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அங்கு பணிபுரிந்த அனைத்துக் காவலர்களும் மாற்றப்பட்டனர். இவர்களில் சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றம்சாட்டப்பட்டவர்களைச் சிக்கவைத்தது.

சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், 10 போலீஸார் கைதுசெய்யப்பட்டனர். ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, கடந்த ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ‘தந்தை, மகன் உயிரிழந்ததற்கு போலீஸாரே காரணம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரும் குற்றவாளிகள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்காலும் வழக்கு விசாரணை மந்தமானது.

 “விரைவாக விசாரித்தால்தான் நீதி கிடைக்கும்!” - சாத்தான்குளம் வழக்கு... ஓராண்டு அப்டேட்

வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஜெயராஜ் குடும்பத்தினரின் வழக்கறிஞர் ராஜீவ் ரூபஸிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஒன்பது போலீஸாரும் ஜாமீன் கேட்டு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு இந்த வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

பென்னிக்ஸின் சகோதரி பியூலா, கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் ஆகிய இருவரிடம் மட்டுமே நீதிமன்ற விசாரணை நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் தனித்தனி வழக்கறிஞர்கள் இருப்பதால், ஒரு சாட்சியத்தை விசாரித்து முடிக்கவே நான்கைந்து நாள்கள் ஆகின. தற்போது கொரோனா ஊரடங்கால் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளதால், அந்த விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இன்னொரு புறம், ஆய்வாளர் ஸ்ரீதரும், உதவி ஆய்வாளர் ரகு கணேஷும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் இருக்கிறது. ‘தமிழக மக்கள் எங்களுக்கு எதிராக உள்ளனர். நீதித்துறை கண்டிப்புடன் நடந்துகொள்கிறது. எங்கள் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. அதனால், இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று ரகு கணேஷ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் நிலுவையில் உள்ளது. இதுதான் இந்த வழக்கின் இன்றைய நிலை... விசாரணை விரைவில் முடிவடைந்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கும். அப்படிக் கிடைத்தால், அந்தத் தீர்ப்பு மொத்த உலகத்துக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும்’’ என்றார்.

ராஜீவ் ரூபஸ் - பெர்சி
ராஜீவ் ரூபஸ் - பெர்சி

ஜெயராஜின் மூத்த மகளான பெர்சியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் மேல்நிலை காவல் அதிகாரிகள். சாட்சிகள் கீழ்நிலை காவலர்கள். அதிகார பலம், துறை சார்ந்த அழுத்தத்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. அதனால், ‘இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்தால்தான் நீதி கிடைக்கும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதையடுத்து, ‘இந்த வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என்று கடந்த மார்ச் 18-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் விசாரணை தள்ளிப்போகிறது. இப்போதும் நாங்கள் நீதிமன்றத்தை மட்டுமே முழுமையாக நம்புகிறோம்’’ என்றார்.

நீதி விரைவில் கிடைக்கும் என்றே நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism