`ஒரு லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒற்றை அதிகாரி!'- வக்ஃப் வாரிய விவகாரத்தில் என்ன நடக்கிறது?

வக்ஃப் வாரியம் என்றால் என்ன ? தற்போது ஆளுநர் வெளியிட்டுள்ள உத்தரவு சட்டபூர்வமானதா ?
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதும், சிறுபான்மையினர் நலன்கள் மறக்கப்படுவதும் இன்று தினசரி செய்தியாகிவிட்டது. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கான வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டு, அவ்விடத்தில் நிர்வாக இயக்குநராகச் செயல்பட சிறப்பு அதிகாரியாக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் வெளியிட்ட இந்த அறிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய வழக்கு, 20.09.2019 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதியரசர் கோவிந்தராஜ், அரசு வெளியிட்டிருக்கக்கூடிய அரசாணையை திங்கள்கிழமை (23.09.2019) வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
வக்ஃப் வாரியம் என்றால் என்ன, தற்போது ஆளுநர் வெளியிட்டுள்ள உத்தரவு சட்டபூர்வமானதா என்பன குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரனிடம் பேசினோம்.
"முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது.

இந்த வக்ஃப் வாரியத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக (elected) இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு முத்தவல்லிகள் (மசூதி மேற்பார்வைத் தலைவர்) இரண்டு முஸ்லிம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட (nominated) உறுப்பினர்கள் பலர் உள்ளனர். எந்தவொரு சமயத்திலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று வக்ஃப் வாரிய சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வக்ஃப் வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா போட்டியிடாததால், அவர் உறுப்பினரல்லாது போனார். உறுப்பினர் இடங்கள் பல காலியாக இருந்ததால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகப் புதியவர்களைத் தேர்வுசெய்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமலே சிறப்பு அதிகாரியை ஆளுநர் நியமித்திருக்கிறார்" என்றார்.
மேலும், வக்ஃப் வாரிய வழக்கு பற்றி அவர் பேசுகையில், "இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், வக்ஃப் வாரியத்தைத் தொடர்ந்து செயல்படவைக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தை கலைக்கக்கூடாது அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் சார்பிலும் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு,18.09.2019 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தற்போதையை நிலையே (status quo) தொடர வேண்டும், வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருந்தும் வாரியத்தைக் கலைத்திருப்பதால், ஆளுநர் ஆணையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்" என்றார்.

இதுகுறித்துப் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், "தமிழக அரசு, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களதிகாரத்தில் இருக்கும் ஒரு வாரியத்தை முறையின்றிக் கலைத்து, பல கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைப்பது, அரசுக்கு முஸ்லிம் மக்கள்மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம் மக்களின் நன்கொடையை நிர்வகிக்கும் அமைப்பைக் கலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாரியம் உறுப்பினர்களோடு செயல்படும்போது மட்டுமே, ஊழலற்ற நியாயமான தீர்வுகளை எட்ட முடியும். தமிழக அரசின் இந்த முடிவு, அவர்களின் விருப்பத்துக்கு உகந்தவர்களை வாரியத் தலைவர்களாக நியமிக்க முடியாத காரணத்தினால் நடக்கிறது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும், ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஜான் எம்.பி, வாரியத் தலைவராக இருந்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடரட்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அரசு எதற்குமே செவிசாய்க்காமல், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஒரு தனி நபரை வாரியத்தின் அதிகாரியாக நியமித்திருப்பது நிச்சயம் ஜனநாயகத்திற்கு, சிறுபான்மையினருக்கு எதிரானதே" என்றார்.
அரசுத் தரப்பில் ஆஜராகிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நீதிமன்றத்தில் நான் சொன்னதுதான் எங்கள் தரப்பு கருத்து எனக்கூறி, அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
"கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இடைக்காலத்துக்கு மட்டும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், வேறு எந்த நோக்கமும் இல்லை" என்றார்.
மேலும், 23.09.2019 நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு அதிகாரியாக சித்திக் தற்போதைக்கு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
