Published:Updated:

நீதிமன்ற வளாகத்தில் ஒற்றை ஆளாக முழக்கமிட்ட மாவோயிஸ்ட்! - பரபரப்பான ஊட்டி கோர்ட்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட டேனிஷ் கிருஷ்ணன் என்ற மாவோயிஸ்ட் கோர்ட் வளாகத்தில் ஒற்றை ஆளாகக் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவோயிஸ்ட் டேனிஷ் என்கிற கிருஷ்ணன்
மாவோயிஸ்ட் டேனிஷ் என்கிற கிருஷ்ணன்

கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேனிஷ் என்கிற கிருஷ்ணன்(31). இவர் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவாக, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேருமாறு பழங்குடியின மக்களிடம் பேசியதாகக் கூறி கேரளா மாநிலம் அகலி என்ற பகுதியில் அம்மாநில போலீஸார் கைது செய்தனர். இவர் தற்போது கேரளா மாநிலம் திருச்சூர் சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி கொலக்கொம்பை அருகேயுள்ள நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமத்தில் 7 போ் கொண்ட மாவோயிஸ்டுகள் வந்து தோ்தல் புறக்கணிப்பு மற்றும் அரசுக்கு எதிராக சில துண்டு பிரசுரங்கள் ஒட்டியும், மாவோயிஸ்ட் அமைப்பில் சேருமாறு பழங்குடியின மக்களிடம் பேசிச் சென்றதாகவும் கூறப்படுகிறது

போலீஸ்
போலீஸ்

இதுதொடர்பாக கொலக்கம்பை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் டேனிஷ் என்கிற கிருஷ்ணனுக்கு தொடர்பு உள்ளதாகவும், எனவே அவரால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கொலக்கொம்பை காவல்துறையினர் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாரன்ட் பெறப்பட்டு கேரளா காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சூர் சிறையிலிருந்து கிருஷ்ணனை, கேரளா போலீஸார் மற்றும் கேரள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காலை 10 மணிக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். கிருஷ்ணன் போலீஸ் வேனிலேயே அமர வைக்கப்பட்டிருந்தார். வேனைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

கொலக்கொம்பை போலீஸார் தரப்பில் டேனிஸ் காவலில் 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பின் மதியம் 12.45 மணியளவில் டேனிஸ் கிருஷ்ணன், மாவட்ட நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அரசு தரப்பில் அரசு வக்கீல் பாலநந்தகுமாரும், டேனிஸ் கிருஷ்ணன் தரப்பில் வக்கீல்கள் ராஜா, ராஜா மற்றும் விஜயன் ஆகியோர் ஆஜராகினர். பின்னர், நெடுகல்கொம்பை கிராமத்திற்கு வந்தது தொடர்பான வழக்கில் டேனிஷ் கிருஷ்ணனை, கொலக்கொம்பை போலீஸார் கைது செய்யவும், வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை சிறையில் அடைக்கவும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

போலீஸ்
போலீஸ்

அப்போது நீதிபதியிடம் பேசிய டேனிஷ் கிருஷ்ணன், ``என்னை கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தனர். கொலக்கொம்பை காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. போலீஸார் பொய் வழக்கு போட்டுள்ளனர். என்மீது ஏற்கெனவே உள்ள வழக்குகளில் எனக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் வெளியில் வந்து விடுவேன். நான் வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காக பொய்யாக இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே என்னிடம் போலீஸார் விசாரித்த போது, இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்து விட்டேன். அதனால் காவல்துறையினரிடம் தெரிவிக்க ஒன்றும் இல்லை. அதனால் போலீஸ் காவலில் அனுப்பக்கூடாது," என்றார்.

தொடர்ந்து காவலில் எடுத்து விசாரித்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மாலை 3 மணிக்கு ஒத்தி வைத்தார்.

வழக்கு விசாரணை 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அறையிலிருந்து டேனிஷ் கிருஷ்ணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டார்.

போலீஸ்
போலீஸ்

வெளியே வந்த டேனிஷ் கிருஷ்ணன், `இன்குலாப் சிந்தாபாத், மாவோயிஸம் சிந்தாபாத், இந்துத்துவம், கார்ப்பரேட்டுக்கு எதிராக தொழிலாளர்களே போராடுக, ஆசாத் காஷ்மீர் சிந்தாபாத், சுதந்திர காஷ்மீர் வெல்லட்டும். தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும்' என கோஷம் எழுப்பினார். ஒற்றை ஆளாக கோஷமிட்டதால் போலீஸார் அவசரமாக அவரை அழைத்துச் சென்றனர். மாலை 3 மணியளவில் வழக்கை விசாரித்த நீதிபதி, டேனிஷ் என்கிற கிருஷ்ணனை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அவரை நீதிமன்றத்தில் நாளை மாலை ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.