Published:Updated:

ராமநாதபுரம்: `மோதிரம், டூவீலருக்காக எஸ்.ஐ கொலை!' - 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு ஆயுள்

பரமக்குடி நீதிமன்றம்
பரமக்குடி நீதிமன்றம் ( உ.பாண்டி )

போலீஸ் எஸ்.ஐ கொலையில் சப்பாணி என்ற முருகேசன், துரைப்பாண்டி, ஞானவேல் பாண்டியன், ரவிசண்முகம், திருமூர்த்தி, முத்துராமலிங்கம், குரங்கு முத்துராமலிங்கம், முனியசாமி உள்ளிட்ட எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர்.

14 ஆண்டுகளுக்கு முன்னர் கமுதி அருகே நடந்த போலீஸ் எஸ்.ஐ கொலை வழக்கில், குற்றவாளிகளான ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தண்டனை
தண்டனை
Representational Image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது அபிராமம். இங்குள்ள காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28-ம் தேதி இரவு நந்திசேரி விலக்கு ரோட்டில் டூவீலரில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் மறைந்திருந்த கும்பல் ஒன்று சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியனை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியிருக்கிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுப்பிரமணியனிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன் மற்றும் டூவீலரைச் பறித்துச் சென்றது.

குமரி: நடத்தையில் சந்தேகம்...  மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்!

இந்தநிலையில் அந்தவழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து சுப்பிரமணியன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில், இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக நந்திசேரி வழியாக சென்ற போஸ் என்ற தலைமைக் காவலரையும் அந்தக் கும்பல் தாக்கி மோதிரம் மற்றும் டூவீலரைக் கொள்ளையடித்துச் சென்றதுடன், காயமடைந்த ஏட்டு போஸை கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டும் சென்றிருக்கிறது.

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அபிராமம் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், போலீஸ் எஸ்.ஐ-யைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சப்பாணி என்ற முருகேசன், துரைப்பாண்டி, ஞானவேல் பாண்டியன், ரவிசண்முகம், திருமூர்த்தி, முத்துராமலிங்கம், குரங்கு முத்துராமலிங்கம், முனியசாமி உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பரமக்குடி நீதிமன்றம்
பரமக்குடி நீதிமன்றம்
உ.பாண்டி

இது தொடர்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய துரைப்பாண்டி, முனியசாமி ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. எஸ்.ஐ சுப்பிரமணி கொலை வழக்கில், குரங்கு முத்துராமலிங்கம் தவிர எஞ்சிய ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.2,000 அபராதம் விதித்தும், தலைமைக் காவலரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஏழு வருடச் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி மலர்மன்னன் தீர்ப்பளித்தார். இதையடுத்து சப்பாணி என்ற முருகேசன் கோவை மத்தியச் சிறையிலும், மற்றவர்கள் மதுரை மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு