Published:Updated:

பெஹ்லு கான் கொலை வழக்கு... விடுதலையான 6 பேர்... நடந்தது என்ன?

Lynching
Lynching ( Satish Acharya )

'பெஹ்லு கான் மரணத்திற்குக் காரணமானவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக, வலுவான ஆதாரங்கள் இல்லை' என்று காரணம் கூறி, அவர்களை விடுவித்திருக்கிறது நீதிமன்றம்.

பெஹ்லு கான் மரணம்... கும்பல் கொலைகள் என்ற மிருகத்தனத்தை தேசம் உற்றுநோக்கிய தருணம். 2017-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அல்வார் என்னும் இடத்தில், பசுக்காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டம், பெஹ்லு கான் என்ற நபரை மாடுகள் வைத்திருந்ததற்காக இரக்கமின்றி அடித்துக் காயப்படுத்திய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லு கான், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பெஹ்லு கான்
பெஹ்லு கான்

அவரது உயிருக்கும் இழப்பிற்கும் நியாயம் கேட்டு, நீதிமன்றத் தீர்ப்பிற்காகக் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது, அல்வார் நீதிமன்றம். 'பெஹ்லு கான் மரணத்திற்குக் காரணமானவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக, வலுவான ஆதாரங்கள் இல்லை' என்று காரணம் கூறி, அவர்களை விடுவித்திருக்கிறது அந்நீதிமன்றம். இந்தியாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில், பசுக்காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆக அதிகரித்திருப்பதாகச் சில தரவுகள் சொல்கின்றன. 2012-ல், ஒரே சம்பவம் பதிவாகியிருக்கும் பட்சத்தில், 2017-ல் 43 சம்பவங்களும், 2018-ல் 31 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனையும் வழங்கப்படாமல்போவது, மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், பெஹ்லு கான் வழக்கில் நடந்தது என்ன, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானது எப்படி? என்ற கேள்விகளுக்கான விடைகள், இவ்வழக்கின் தீர்ப்பு நகலில் இருந்து அறியப்பட்டதாக, ’எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. போலீஸார் இவ்வழக்கை மேம்போக்காகக் கையாண்டதையும் சட்டரீதியான மரபு வரிசை முறையை (PROTOCOL) பயன்படுத்தி இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்படாததையும் இந்தத் தீர்ப்பாணை விளக்குகிறது. வழக்கு விசராணைகுறித்த விவரம் பின்வருமாறு...

தீர்ப்பு
தீர்ப்பு

பெஹ்லு கான் கொலை வழக்கை, பெஹோரோர் காவல் நிலைய அதிகாரி ரமேஷ் சின்சினாவார் முதலில் விசாரித்திருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெஹ்லு கானிடம் வாக்குமூலம் பெற்று, இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததும் இவர்தான். அந்த வாக்குமூலத்தில் ஓம் யாதவ், ஹுக்கும்சந்த் யாதவ், நவீன் சர்மா, சுதிர் யாதவ், ராகுல் சைனி மற்றும் ஜாக்மால் ஆகிய அறுவர்தான் தன்னைத் தாக்கியதாக பெஹ்லு கான் கூறுவது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், 'வாக்குமூலம் பெறும்போது ஓர் அதிகாரி கடைப்பிடிக்க வேண்டிய எந்த விதிமுறைகளையும் சின்சினாவார் கடைப்பிடிக்கவில்லை' என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. பெஹ்லு கான் வாக்குமூலம் தரும் உடற்தகுதியில்தான் இருந்தார் என்பதற்கு மருத்துவர்களின் சான்றிதழ் வாங்கப்படவில்லை. அப்போது பணியிலிருந்த மருத்துவரிடத்தில் அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கப்படவில்லை. அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு 16 மணி நேரம் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதிலும், பெஹ்லு கான் குற்றம் சாட்டிய நபர்களைப் பிடித்து, அவர்முன் அடையாளம் காட்டுதலுக்காக அழைத்துச் செல்லப்படவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, இந்த இருவரையும் விடுத்து, சின்சினாவார் பெஹ்லு குறிப்பிடாத வேறு மூவரைக் கைதுசெய்து விசாரித்திருக்கிறார்.

போலீஸார் கைது நடவடிக்கை
போலீஸார் கைது நடவடிக்கை

கல்லுராம், விபின் யாதவ் மற்றும் ரவீந்திர குமார் ஆகிய மூவரையும் இந்தத் தாக்குதல் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை அடிப்படையாகக்கொண்டு கைதுசெய்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அந்த வீடியோ யாரால் தரப்பட்டது என்பதையும், எந்தப் புகைப்பட நிலையத்தில் அவர் அந்த வீடியோவைக் கொடுத்து புகைப்படங்களாக மாற்றினார் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை. தற்போது அந்த வீடியோ தன்னிடம் இல்லை எனவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார், சின்சினாவார். அவர் தரப்பில் கூறப்பட்ட எந்த விஷயத்துக்கும் முறையான சாட்சிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை இரண்டாவதாக, பெஹ்ரூர் எஸ்பி பார்மல் சிங் கையில் எடுத்துள்ளார். அவர், மற்றொரு வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, ஏற்கெனவே சின்சினாவார் கைதுசெய்த மூவரையும் சேர்த்து மொத்தம் ஏழுபேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். மூன்றாவதாக, அம்மாநில சிபிசிஐடி இந்த வழக்கைக் கையிலெடுத்து, அதன் சார்பில் கோவிந்த் தேத்தா விசாரித்துள்ளார். பெஹ்லு கான் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட இருவரின் செல்போன் நம்பர்களை ஆராய்ந்து, சம்பவம் நடந்தபோது அவர்கள் அந்த இடத்திலேயே இல்லை என்று அவர்கள் மீதான சந்தேகத்தைத் தீர்த்துவைத்துள்ளார். மேலும், அந்த இரு வீடியோக்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஏழு பேரின் மீதான விசாரணை மட்டும் தொடரப்படுகிறது.

மாடுகள்
மாடுகள்

அதேசமயம், ஒரு கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியங்களாகக் கருதப்படும் மருத்துவ ஆதாரங்களிலும், இந்த வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்திருக்கின்றன. பெஹ்லு கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ’அவர் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் இறக்கவில்லை எனவும், நீண்ட நாட்களாக அவருக்கு இருந்த இருதய நோயின் காரணமாக மாரடைப்பினால் மரணமடைந்தார்’ எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆனால், பெஹ்லு கானின் மரணத்திற்குப்பின் உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், ’அவர்மீதான தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால், உடலுக்குள் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டு, அதனால்தான் அவர் இறந்துள்ளார்’ என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னதாக இந்தக் கொலை வழக்கில் சாட்சியங்களாக இருந்த இரண்டு வீடியோக்களும் யாரிடம் பெறப்பட்டது, எந்தப் புகைப்பட நிலையத்தில் பிரின்ட் செய்யப்பட்டது, யார் முன்னிலையில் பெறப்பட்டது போன்ற எந்த விஷயதையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாததால், வழக்கு பொய்த்துப்போனது. எஸ்பி பார்மல் சிங், தன்பக்க சாட்சிகளாக அழைத்த மூவர், பொய் சாட்சிகள் என்று நிரூபிக்கப்பட்டனர். அதிலும் எஸ்பி பார்மல் சிங், தாம் வீடியோவை எடுத்தவரிடமிருந்து வாங்கியபோது உடனிருந்ததாக குறிப்பிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தயாராம், அப்போது தாம் அந்த இடத்திலேயே இல்லை என்று நீதிமன்றத்தில் சாட்சி கூறியுள்ளார்.

பசுக்காவலர்கள்
பசுக்காவலர்கள்

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது போதுமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை என்ற காரணத்தினாலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதில் தெளிவில்லை என்பதாலும், அந்த வீடியோவில் இருக்கும் நபர்களை ஐயமின்றி அடையாளம் காண முடியாத காரணத்தினாலும், நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்திருக்கிறது.

இப்படி மருத்துவத்துறை, காவல்துறை என அரசு அங்கங்கள்கூட இந்த வழக்கில் குழப்பத்தை மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதித்துறையும் இயந்திரத்தனமான தன் கடமையைச் செய்ததே தவிர, தார்மீக அடிப்படையில் செயல்படவில்லை என்ற குற்றசாட்டுகள் தேசம் முழுக்க எழுந்திருக்கின்றன. பெஹ்லு கானின் மரணம் அரசியலாக்கப்படும்போதே, அது ஒரு தனிநபர் குற்றச்செயல் அல்ல. மாறாக, அது சமூகம் பயணிக்கத் தொடங்கியிருக்கும் மிக ஆபத்தான பாதையின் மற்றோர் அழுத்தமான தடம் என்பது நிரூபணமாகிறது.

'ஜெய் ஶ்ரீராம்'  கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்!
'ஜெய் ஶ்ரீராம்' கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்!

பெஹ்லு கானைத் தொடர்ந்து , ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கும், பசுகாருண்யத்திற்கும் பல்வேறு மனித உயிர்களை நாம் பலிகொடுத்தாகிவிட்டது. கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகச் சுற்றுவதற்கு அரசியலும், அரசு இயந்திரமுமே ஒரு வழியில் காரணமாகிறது எனும்போது, தகர்க்கப்பட்ட சாட்சியும் அழிக்கப்பட்ட ஆதாரமுமே இனியும் நீதியைக் கொல்லும்.

பின் செல்ல