Published:Updated:

தி.மு.க ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா? - பொள்ளாச்சி பாலியல் வழக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹெரோன் பால், வசந்த், சபரிராஜன், சதீஸ்
ஹெரோன் பால், வசந்த், சபரிராஜன், சதீஸ்

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி வழங்குவோம்’ என்று பிரசாரம் செய்துதான் தி.மு.க வெற்றிபெற்றது.

பிரீமியம் ஸ்டோரி

‘‘ ‘பெண்கள் எந்த பயமும் இல்லாமல் இரவில் வெளியில் செல்லக்கூடிய நாள் வரும்போதுதான், இந்த நாடு முழு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாகியும், சமூக விரோத சக்திகளின் கைகளில் பெண்களின் பாதுகாப்பு சிக்கியுள்ளது. பகலில்கூட பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியவில்லை’’ - நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அருளானந்தம் ஜாமீன் கேட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கூறிய கருத்து இது. அத்துடன், ‘‘வழக்கு விசாரணையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என்று கறார் காட்டியவர், சி.பி.ஐ விசாரணைக்கு உதவுதற்காக தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசியை இந்த வழக்கில் நியமித்து உத்தரவிட்டிருக்கிறார்.

அருளானந்தம், பைக் பாபு, திருநாவுக்கரசு, மணிவண்ணன்
அருளானந்தம், பைக் பாபு, திருநாவுக்கரசு, மணிவண்ணன்

கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ‘‘அண்ணா விட்ருங்கண்ணா...’’ என்று இளம்பெண்களின் கதறல் குரல்களுடன் வீடியோக்கள் வெளியாகி பதைபதைக்கவைத்தன. அந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்த், மணிவண்ணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள். உள்ளூர் போலீஸார் விசாரித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாறி, பிறகு சி.பி.ஐ கைகளுக்குச் சென்றது. இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க பிரமுகர் அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதும் மீண்டும் சூடுபிடித்தது வழக்கு. ஆனால் சட்டசபைத் தேர்தல், கொரோனா இரண்டாம் அலை போன்றவற்றால் வழக்கு மீண்டும் அமைதியானது.

ஹெரோன் பால், வசந்த், சபரிராஜன், சதீஸ்
ஹெரோன் பால், வசந்த், சபரிராஜன், சதீஸ்

இந்த இடைப்பட்ட நாள்களில் வழக்கின் நகர்வுகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் உள்ளுர் மக்கள் சிலர்... ‘‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி வழங்குவோம்’ என்று பிரசாரம் செய்துதான் தி.மு.க வெற்றிபெற்றது. அதனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அருளானந்தத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கரைவேட்டிகள் கலக்கம் அடைந்திருக்கிறார்கள். சிலர் கட்சி மேலிடம் உள்ளிட்ட அதிகார மையங்களைத் தொடர்புகொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். முன்னாள் கவுன்சிலரான ‘ராஜ’ நபர் ஒருவர் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிவிட்டாலும், தனது சாதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார். கட்சி கைவிட்டாலும், சாதி காப்பாற்றும் என்று அவர் கணக்கு போடுகிறார்.

பொள்ளாச்சியில் இவர்கள் அடிக்கடி சந்திக்கும் கிளப், பங்களாக்கள் இருக்கின்றன. ஆனால், சி.பி.ஐ அங்கெல்லாம் சென்று ஆழமாக விசாரிக்கவில்லை. அதனால்தான், சி.பி.ஐ-க்கு உதவத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்திருந்தது. இந்தநிலையில், ஒரே மாதத்தில் இரண்டு முறை அருளானந்தம் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். அவர் நினைத்தது நடக்கவில்லை’’ என்றார்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராதிகாவோ, ‘‘பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பிறகுகூட பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களில், கோவை காவல்துறை உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும்” என்றார்.

‘‘இந்த வழக்கில் கடந்த மூன்று மாதங்களில் புதிதாக மூன்று பெண்கள் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான், ஆகஸ்ட் 13-ம் தேதி 9-வது நபராக அருண்குமார் என்பவனை சி.பி.ஐ கைதுசெய்துள்ளது. அ.தி.மு.க பிரமுகரான முருகனாந்தம் என்பவரின் மூத்த மகன்தான் அருண்குமார். இவருடைய சகோதரர், இந்த வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ள சதீஷ்குமார் ஆகியோர் பிசினஸ் பார்ட்னர்கள். உயர் நீதிமன்றமும், ‘சாட்சி அளித்துள்ள பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கவிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புவோம்’’ என்கிறார்கள் இந்த வழக்கு விவரங்களை நன்கறிந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் சில மாதங்கள் காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்ட பாண்டியராஜன், பின்னர் கரூர், நீலகிரி மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். நீதிமன்ற உத்தரவையடுத்து, இவர்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அருண் குமார்
அருண் குமார்

சி.பி.ஐ அதிகாரிகளிடம் வழக்கு தாமதத்துக்கான காரணத்தைக் கேட்டோம். ‘‘எங்கள் துறையில் ஆள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கிறது. தவிர கொரோனா அலைகளாலும் தாமதத்தைத் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. தடயவியல் ஆய்விலும் சில முடிவுகள் வரவேண்டியிருக்கின்றன. இனி விசாரணை வேகமெடுக்கும்.

“விட்ருங்கண்ணா!” என்று அந்த இளம்பெண்கள் கதறிய அழுகுரல் இன்னமும் நீங்காத அவலமாகக் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி மட்டுமல்ல... நாடு முழுவதும் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எச்சரிக்கை மணி அடித்ததுபோலவும் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு