Election bannerElection banner
Published:Updated:

மும்பை: தந்தையுடன் வசிக்கும் மகள் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்த தாய்... ஏன்?

மும்பை ஐகோர்ட்
மும்பை ஐகோர்ட்

கணவன், மனைவி இடையேயான குடும்பச் சண்டையில் அவர்கள் மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 23 வயது ஜெஸ்ஸிகா என்ற பெண் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால், அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், ஜெஸ்ஸிகாவின் அம்மா அவர் மீது காவல்துறையில் கொடுத்த புகார்.

ஜெஸ்ஸிகாவின் பெற்றோர் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்து வாழ்கின்றனர். அதோடு ஜெஸ்ஸிகாவின் அம்மா, தன் கணவர் மீதும், மகள் மீதும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸில் புகாரும் செய்திருக்கிறார். பெற்ற மகள் மீதே போலீஸ் புகார் கொடுக்க என்ன காரணம்?

ஜெஸ்ஸிகா தனது பெற்றோரின் பிரிவுக்குப் பின், தன் அப்பாவுடன் வாழ்ந்து வந்தார்.

Couple
Couple
Pixabay

அவரின் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை. இதனால் தன் மகள் ஆஸ்திரேலியா செல்வது பிடிக்காமல் அவர் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெஸ்ஸிகா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனீஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைகு வந்தது.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது, தன் மகள் வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், சட்ட நடைமுறைகளைத் தவிர்க்க வெளிநாடு போக வேண்டும் என்று காரணம் கூறுகிறார் என்றும் தெரிவித்தார் ஜெஸ்ஸிகாவின் அம்மா. மேலும், தன் மகளுக்கு பல ஆண் நண்பர்கள் உண்டு என்றும் தெரிவித்து ஜெஸ்ஸிகாவின் அம்மா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், `தன் மகள் தொடர்ந்து தன் தந்தையுடன் தங்கி இருக்கிறார் என்ற கோபத்தில், சொந்த மகள் மீது அம்மாவால் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மனுதாரர் இப்போதுதான் இளங்கலை பட்டம் பெற்று இருக்கிறார். தனது கல்வியை மேம்படுத்திக்கொள்ள வெளிநாடு செல்ல விரும்புகிறார். ஆனால், அதற்கு அவரின் சொந்த தாயே இடையூராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மும்பை ஐகோர்ட்
மும்பை ஐகோர்ட்

ஜெஸ்ஸிகாவின் தாயார் தாக்கல் செய்துள்ள புகைப்படங்கள்கூட உண்மையானதாக இருக்கும் என்று தெரியவில்லை. கணவன், மனைவி சண்டையில் மனுதாரர் சிக்கிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது' என்று தெரிவித்த நீதிபதிகள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் இருந்து ஜெஸ்ஸிகாவை விடுவிடுத்து உத்தரவிட்டனர். ஜெஸ்ஸிகா அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார்.

கணவன், மனைவி இடையே சண்டை வரும்போது அவர்களின் குழந்தையை யார் பொறுப்பில் வைத்திருப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த போட்டாபோட்டி, குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு முடிவுகள் எடுக்க வைப்பது துயரம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு