Published:Updated:

`முறையான சாலைகள் இல்லாவிட்டால் மாநகராட்சியிடம் நஷ்டஈடு கேளுங்கள்' - உயர் நீதிமன்றம்

ஜெனிஃபர்.ம.ஆ

பாதுகாப்பான சாலை வசதி என்பது ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை.

தரமற்ற சாலைகள்
தரமற்ற சாலைகள்

இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு ஒன்றில், அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது, நீதிபதிகள் அபய் ஓகா, முஹம்மத் நவாஸ் அடங்கிய பெஞ்ச்.

விபத்து
விபத்து

பெங்களூரு மாநகரின் பராமரிப்பற்ற சாலைகள் பற்றித் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஒழுங்கான, பாதுகாப்பான சாலை வசதி என்பது ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை என்று தெரிவித்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-இல் குறிப்பிடப்பட்டிருக்கும், ஒரு குடிமகனின் வாழ்வுரிமையையும், தனிமனிதச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற, பள்ளமான ரோடுகள், குழிகள் ஆகியவை மனித உயிருக்கு ஆபத்தாக இருக்கின்றன. அரசியலமைப்பு, வாழ்வதற்கான உரிமையை ஒரு குடிமகனுக்குக் கொடுத்திருக்கிறது. அதன்படி, தரமான சாலைகள் ஓர் இந்தியனின் நல்வாழ்விற்கு அத்தியாவசியத் தேவையாகிறது என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், அரசியலமைப்புச் சட்டப்படி சாலைகளை முறையாகப் பராமரிப்பது, மாநகராட்சியின் சட்டரீதியான கடமை என்றும், அந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறி, அதன் விளைவாக ஒருவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவர்கள் சட்டம் வழங்கியிருக்கும் உரிமையைக் கொண்டு தீர்வுகாண முடியும். அதாவது, பெங்களூரு மாநகராட்சியிடம் நஷ்ட ஈடு கோரமுடியும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தரமற்ற சாலைகள்
தரமற்ற சாலைகள்

மெட்ரோ பணிகள் நடந்துகொண்டிருப்பதால்தான் சாலைகளைப் பராமரிக்க முடியவில்லை என்று கூறிய மாநகராட்சி நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், பெங்களூரு நகரில் உள்ள 400 கிலோமீட்டர் அளவுள்ள சாலைகளின் நிலை பற்றிப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான புகாரளிக்க உகந்த ஓர் அமைப்பையும் இன்னும் ஆறு வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசமான சாலைகள் குறித்து போக்குவரத்துக் காவலர்கள் பெங்களூரு மாநகராட்சிக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ பணிகள் முடிந்தவுடன் அந்தச் சாலைகளை மறுசீரமைப்பது அரசின் கடமை எனவும், ஒவ்வொரு வார்டிலும் குழு அமைத்து சாலை மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்கவும், தரமான சாலையாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல தரமான சாலைகள் ஓர் இந்தியனின் அடிப்படை உரிமை என்றும், அதை அமைத்துத் தருவது அரசாங்கத்தின் கடமை என்றும் மும்பை உயர் நீதிமன்றம் 2015-ம் ஆண்டு ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது.

ஆனால், சாலை பராமரிக்கும் கடமையை மாநகராட்சி மீறி, அதனால் விபத்து ஏற்பட்டால், மாநகராட்சி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு பலரால் வரவேற்கப்படுகிறது.

சாலை மறுசீரமைப்பு
சாலை மறுசீரமைப்பு

பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, பேருந்துகள் தொடங்கி சாலைகள் வரை அனைத்து மாநில அரசுகளும் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பது அனைவரும் அறிந்ததே. தரமற்ற சாலைகள் என்பது இந்தியாவின் தலையாய பிரச்னையாகவேதான் எப்போதும் இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் பல ஆயிரம் சாலைகள் கேட்பாரற்றுக் கிடந்தாலும், அதற்கு ஒதுக்கப்படும் நிதி மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுகிறது. இந்நிலையில், ஹெல்மெட் போடுவதை மட்டும் வீதிக்குவீதி நின்று கண்காணிக்கும் அரசு இயந்திரம், விபத்துகளுக்கு முக்கியக் காரணமான பாதுகாப்பான சாலைகள் தருவதற்குப் பொறுப்பெடுத்துக்கொள்வது என்பது பெங்களூரு, மும்பையைத் தாண்டி இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.