சமூக நலனுக்காக மக்களை ஒழுங்குபடுத்தும் விதிகளையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதுதான் சட்டம். அச்சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால், நாட்டின் பல இடங்களில் வழக்கறிஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும், இந்தத் தொழிலில் உள்ள பாதுகாப்பற்ற சூழலால் தாக்கப்படுவது அதிகரித்து வர, வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர பார் கவுன்சில்கள் வலியுறுத்தின. அதன்படி, வழிக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதா வரைவை வகுக்க, ஏழு பேர் அடங்கிய குழுவை நியமித்தது இந்திய பார் கவுன்சில். அதில் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழு அளித்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதா (Advocates Protection Bill) வரைவுக்கான பரிந்துரையை ஜூலை 2-ம் தேதியன்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் வெறுப்புகளை கருத்தில்கொண்டு இந்த சட்ட வரைவுப் பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சட்டம் அமலுக்கு வந்தால் வழக்கறிஞர்களை அவர்களுடைய பணியைச் செய்யவிடாமல் தடுப்பது, மேலும் சமீப வருடங்களாக அதிகரித்து வரும் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல், கடத்தல், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றில் இருந்து வழக்கறிஞர்களுக்கு அது பாதுகாப்பு தரும் என்று நம்பப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவரைவுக்கான பரிந்துரையில் உள்ள சில முக்கிய அம்சங்கள் இங்கே...
* வழக்கறிஞர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது.
* வழக்கறிஞர்களைத் தாக்கினால் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், அதே நபர் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு மீண்டும் இதே பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அதிகபட்சமாக 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
* வழக்கறிஞர்கள் தாக்கப்படும்போது சிறைத்தண்டனையுடன், அபராதமாக ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரையிலும், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.
* தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட்டின் நேரடிக் கண்காணிப்பு இல்லாமல், காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்களைக் கைது செய்ய முடியாது.
* வழக்கறிஞர்களின் மீதான புகாரை டி.எஸ்.பி ரேங்க்குக்கு கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கக் கூடாது.
இச்சட்ட வரைவுக்கான பரிந்துரைகள் குறித்து சட்டக் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள், அரசு வழக்கறிஞர், காவலர், மற்றும் சட்டக் கல்லூரி பேராசிரியர் சிலரிடம் பேசினோம்.

நதியா, இளம் வழக்கறிஞர், வேதாரண்யம்:
``வழக்கறிஞர்கள் ஒரு வழக்கை நடத்துகையில், தீர்ப்பு அவர் கட்சிக்காரருக்கு சாதகமாக வரும்போது எதிர்தரப்பினரால் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒருவேளை அந்த வழக்கில் தீர்ப்பு அவர் கட்சிக்காரர்களுக்குச் சாதகமாக வராத சூழ்நிலையில், அவர்களின் இகழ்ச்சிக்கும் வன்சொற்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. இரண்டு பக்கமும் அவர்களுக்கு இப்படி ஏற்படும் பிரச்னைகளை, இனி வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும்போது குறைக்க முடியும்.''
மு. ப்ரீத்தி, சட்டக் கல்லூரி மாணவி, திருப்பூர்:

``சிலர், `அப்போ இனி வழக்கறிஞர்கள் என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க, அவங்களைத் தண்டிக்கக் கூடாதா?' என்கிறார்கள். ஜெய்ப்பூரில் தாக்கப்பட்ட வழக்கறிஞர் தம்பதி, தெலங்கானாவில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் தம்பதி என, வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.''
சிவரஞ்சனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி:
``வழக்கறிஞர்கள் மட்டுமல்ல... மருத்துவர்களும் இதுபோல தாக்கப்படுகிறார்கள். சில நாள்களுக்கு முன்பு அசாமில் ஒரு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து, அங்கிருந்த மருத்துவரை தாக்கிய சம்பவத்தைப் பார்த்தோம். மக்களின் பார்வைக்கு வராமால் இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன.

செவிலியர்களிடம் தகாத வார்த்தைகளைக் கூறுவது, மருத்துவரின் கவனமின்மையே நோயாளியின் நிலைக்குக் காரணம் எனப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்ற செயல்களும் நடக்கின்றன. இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர்களுக்கும் பாதுகாப்புச் சட்டம் அவசியமாகிறது.''
குணசேகரன், அரசு வழக்கறிஞர், திருச்சி:
``எங்கள் பணியை நாங்கள் செய்யத் தடையாக பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.

இனி இந்தச் சட்டத்தின் மூலம் நீங்கும் என்பதையே இதன் முக்கிய அம்சமாக நான் பார்க்கிறேன்.''
விஜயசித்ரா, ஆசிரியர், சேலம்:
``சமுதாயத்தில் உலவும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்பு நிறுத்தும் காவலர்கள், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள், நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் என்று பல சேவை துறைகள் நம் நாட்டில் இருக்கின்றன.

அந்தத் துறைகளில் உள்ளவர்களுக்கும் அந்தந்தத் துறை சார்ந்த பிரச்னைகள், அச்சுறுத்தல்கள் இருக்கும்போது, வழக்கறிஞர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சட்டம்? ஏற்கெனவே சட்ட நுணுக்கங்களை அறிந்திருக்கும் இவர்களின் பாதுகாப்புக்கு, எதற்கு பிரத்யேகச் சட்டம்?"
ஜெகன், காவலர்:
``வழக்கறிஞர்கள் என்றதும், அனைவருமே தங்களுடைய தொழில்ரீதியிலான பிரச்னைகளுக்காக மட்டுமே தாக்குதலுக்கு ஆளாவதில்லை. சொல்லப்போனால், வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாவது, கொல்லப்படுவது போன்ற சம்பவங்களை எடுத்து ஆராய்ந்தால், பெரும்பாலும் தனிப்பட்ட காரணங்கள், ரியல் எஸ்டேட் மோதல்கள், தாதாயிஸம் போன்றவைதான். வழக்கறிஞர் என்கிற போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களும் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய சூழலில், தனிப்பட்ட வகையில் இப்படியொரு சட்டம் உருவாக்கப்பட்டால், சட்டவிரோதமாக செயல்படும் வழக்கறிஞர்களுக்கும் அதன் பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
இந்த சட்ட முன்வரைவை பார் கவுன்சில்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மனது வைத்தால்தான் இது சட்டமாக்கப்படும். அதாவது, நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை வைத்திருக்கும் பி.ஜே.பி நினைத்தால், சட்டம் எளிதில் நிறைவேறிவிடக்கூடும். ஆனால், இந்த விஷயத்தில் பி.ஜே.பி-யின் நிலை என்னவென்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை, சட்டமாக்க பி.ஜே.பி அரசு முன்வந்தால், நிச்சயமாக அனைத்துவிதமான சாதக, பாதகங்களையும் அலசி ஆராய்ந்த பிறகே அது நிறைவேற்றப்பட வேண்டும்.

நீதித் துறையின் மேல் பற்றுக்கொண்டு சட்டம் பயில்பவர்கள் ஒருபுறம் என்றால், தங்களுக்கு வரும் தொழில் சார்ந்த இடையூறுகளுக்கு ஆயுதமாக சட்டம் பயில்பவர்களும் உள்ளனர். LLB கோர்ஸ் படிப்பதற்கு எந்த வயது வரம்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் என்ற போர்வையில் குற்றங்களைச் செய்யும் சமூக விரோதிகளுக்கும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் ஒரு கவசமாக அமைந்து விடும் ஆபத்து உள்ளது. எந்தத் தொழிலையும் நியாயமாகச் செய்யும்போது பிரச்னை வருவது அரிது. தாமே சண்டையையும் கலவரத்தையும் உருவாக்கி அதன் மூலம் லாபம் பார்க்க நினைக்கும் சில வழக்கறிஞர்களுக்கு இந்த வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் சாதகமாக அமைந்துவிடும் என்பதையும் கவனிக்க வேண்டும்.''
இந்தச் சட்ட முன்வரைவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
- வி.ஷாலினி