Published:Updated:

`எந்த முன்னேற்றமும் இல்லை!'- புதுக்கோட்டை மாணவன் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய நீதிபதிகள்

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு

மாணவன் காணாமல் போன வழக்கு தொடர்பாக, புதுக்கோட்டை போலீஸாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன், காணாமல் போன தனது 17 வயது மகனைக் கண்டுபிடித்து தரக் கோரி உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``நான் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது 17 வயது மகன் சண்முகப்பிரியன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த செப்டம்பர் மாதம் 2019 அன்று இருசக்கரத்தில் பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் தேடியும் எவ்வித பயனும் இல்லை. இதையடுத்து நான் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`எந்த முன்னேற்றமும் இல்லை!'- புதுக்கோட்டை மாணவன் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய நீதிபதிகள்

எனது மகனை கோவையில் சிலர் பார்த்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று என் மகனின் போட்டோவைக் காண்பித்து விசாரித்தோம். அங்குள்ள சில ஓட்டல்களில் சென்று என் மகன் வேலை கேட்டதாகவும் அவர்கள் வேலை தரவில்லை என்பதும் தெரிந்தது. அங்கு பல இடங்களில் தேடியும், எனது மகனைக் கண்டு பிடிக்க இயலவில்லை. நகர போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, எனது மகனை மீட்டுத்தர போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் டி.ராஜா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள், புதுக்கோட்டை போலீஸாரின் விசாரணையில் மாணவர் பற்றிய எந்தத் தகவலும் இதுவரையிலும் இல்லை. தொடர்ந்து கால அவகாசம் மட்டுமே கேட்டு வருகின்றனர் என்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு