Published:Updated:

நீதி கேட்கும் கேள்வி!

நீதி கேட்கும் கேள்வி!
பிரீமியம் ஸ்டோரி
News
நீதி கேட்கும் கேள்வி!

‘சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?’

பல்வேறு வழக்கு விசாரணைகளின்போது, சமீபத்தில் நீதிமன்றங்களிலிருந்து பல்வேறு துறைகளை நோக்கிப் பாய்ந்த கேள்விக்கணைகள் இவை:

`உங்கள் மகளாக இருந்தால், இப்படித்தான் நள்ளிரவில் கொளுத்தி, சாம்பலாக்கியிருப்பீர்களா?’

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் பங்கஜ் மிதல் ஆகியோர், `ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ஒரு பணக்காரப் பெண்ணுக்கோ, உங்கள் குடும்பத்துப் பெண்களுக்கோ நடந்திருந்தால் அப்போதும் இதேபோல்தான் நடவடிக்கை எடுத்திருப்பீர்களா... அந்தப் பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்ய அரை மணி நேரம்கூட உங்களிடம் இல்லையா?’ என மாவட்ட நிர்வாகத்தைச் சரமாரியாகக் கேள்வி கேட்டனர்.

‘தொல்லியல்துறை சார்ந்த படிப்பில் தமிழைப் புறக்கணித்தது ஏன்?’

மத்திய அரசின் `மத்திய தொல்லியல் துறை’ முதலில் வெளியிட்ட உத்தரவில் தொல்லியல் சார்ந்த படிப்புகளில் தமிழ் அனுமதிக்கப்படாமலிருந்தது. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ரமேஷ் குமார் என்பவர் தொடர்ந்த மனுமீது இந்தக் கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். தற்போது தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.

‘நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா?’

நடிகர் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு 6,50,000 ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைக் குறைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ரஜினி. இந்த மனுமீது தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் நீதிபதி அனிதா சுமந்த்.

‘சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?’

‘இந்தியாவிலுள்ள மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக வேலைவாய்ப்பு வழங்கவில்லை’ எனக் கூறி மதுரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கேள்வியெழுப்பினர்.

‘படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசு அறிவிப்பின் நிலை என்ன?’

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், புதுக்கோட்டை கருப்பையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், `தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன... எவ்வளவு வருவாய் வருகிறது... கடைகளை மூடுவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று கேள்வி எழுப்பினர்.

‘இலவச வேட்டி, சேலை நூலுக்குத் தரச் சோதனை உண்டா?’

அரசின் இலவச வேட்டி, சேலைத் திட்டத்துக்காக ரூ.250 கோடிக்கு நூல் வாங்கப்படுகிறது. ‘ஒப்பந்ததாரர்கள் மூலமாகத் தரமற்ற நூல் வாங்கப்படுகிறது’ எனக் கூறி கோவிந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுமீது, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் எழுப்பிய கேள்வி இது.

நீதி கேட்கும் கேள்வி!

‘அதிகாரிகளுக்கு கார் வாங்க கோயில் நிதியைப் பயன்படுத்துவது ஏன்?’

கிராமக் கோயில்களைச் சீரமைக்க, பெரிய கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி.

‘கொரோனாவுக்கு, கபசுரக் குடிநீர் மருந்து என ஏன் இதுவரை அறிவிக்க வில்லை?’

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போது, நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பினர். மேலும், ‘மத்திய, மாநில அரசுகள் சித்த மருத்துவப் பிரிவுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை ஒதுக்குகின்றன. அவற்றின் மூலம் ஏதேனும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?’ எனவும் கேள்வி எழுப்பினர்.

‘விவசாயிகளின் நெல்லைப் பாதுகாக்க என்ன வசதிகள் உள்ளன?’

சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில், `தமிழ்நாட்டில் நெல்லைக் கொள்முதல் செய்ய எத்தனை கொள்முதல் நிலையங்கள் உள்ளன... நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லைப் பாதுகாக்க என்னென்ன வசதிகள் உள்ளன?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

‘இந்தியர்கள் யாராவது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா?’

சித்த மருத்துவர் சுப்ரமணியன், கொரோனா சிகிச்சை தொடர்பான தன்னுடைய மருந்தை அங்கீகரிக்கக் கோரி தொடர்ந்த பொதுநல வழக்கின் மீதான விசாரணையில், ‘இந்தியாவில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை. இந்தியர்கள் யாராவது மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெறுகிறார்களா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.