Published:Updated:

நீதி மொழிகள்

நீதி மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நீதி மொழிகள்

மேஜைக்குக் கீழேதான் வேலைகள் நடக்கின்றன!

சமீபத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்திலிருந்து ஒலித்த குரல்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நேரும் அவலம் குறித்து, சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்வைத்த கருத்து இது... ‘‘உற்பத்திப் பொருள்களைச் சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாத காரணத்தால், சாலைகளில் இரவு பகலாக விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வேதனையானது. ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பிச்சைக்காரர்களுக்குச் சமமானவர்கள்!’’

மேஜைக்குக் கீழேதான் வேலைகள் நடக்கின்றன!

கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவர், ‘தனது நிலத்தின் சர்வே எண்ணிலுள்ள தவறைச் சரிசெய்யுமாறு’ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ‘‘வருவாய்த்துறையிலிருந்துதான் லஞ்சம் தொடங்குகிறது. இதேபோலத்தான் பதிவுத் துறை அதிகாரிகளும் செயல்படுகின்றனர். லஞ்சம் வாங்கித்தரும் ஏஜென்ட்டுகளாகப் பத்திரப்பதிவு எழுத்தர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான வேலைகள் மேஜைக்குக் கீழேதான் நடைபெறுகின்றன’’ என்றார்.

நீதி மொழிகள்

அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்!

நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவத்தில்’ பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கஃபூர், 1997-ம் ஆண்டு தியாகிகள் பென்ஷன் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். பல ஆண்டுகளாகியும் கோரிக்கை ஏற்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ‘‘தனது இறுதி மூச்சுக்கு முன், சுதந்திரப் போராட்ட வீரர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 99 வயதில் சுதந்திரப் போராட்ட வீரர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். தியாகிகள் பென்ஷன் கோரிய 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’’ என்றார்.

நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும்!

`மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் 500 ரூபாய் வழங்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, மீனவர் சங்கம் சார்பாக பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வு, ``சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீதிபதிகளும் நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும்’’ என்று குறிப்பிட்டது.

பிள்ளைகளோடு பெற்றோர் பேச வேண்டும்!

பத்தாம் வகுப்பு படித்துவந்த தன் மகள், திருமணமான நபருடன் ஓடிப்போனதாகக் கூறி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் அவரின் தாயார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, ``பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவதில்லை. பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போதிய அன்பும் அரவணைப்பும் இல்லை. பிள்ளைகளோடு பெற்றோர் பேச வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்னை என்று கண்டறிய வேண்டும். இதைச் செய்யாததால்தான், திருமணமான ஆண்களுடன் சிறுமிகளும் இளம்பெண்களும் ஓடிச்செல்லும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இது மனவேதனையளிக்கிறது” என்றது.

ஒரு இந்திய பிராண்டைக்கூடப் பார்க்க முடியவில்லை!

‘‘நமது சந்தைகள் சீனப் பொருள்களால் மூழ்கிக்கிடக்கின்றன. நான் மொபைல்போன் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு ஒரு இந்திய பிராண்டைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. எனவே, சீனப் பொருள்களை வாங்க வேண்டாம் என்று மக்களுக்குச் சொல்வதில் எந்தப் பயனுமில்லை. இந்தியத் தொழிலதிபர்கள் சீனப் பொருள்களுக்கு மாற்றாக இந்தியப் பொருள்களைச் சந்தைப்படுத்த முன்வர வேண்டும்’’ - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.எஸ்.டி தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறிய கருத்து இது.