அலசல்
சமூகம்
Published:Updated:

விசாரணைக்கு அழைத்தால் அச்சம் வேண்டாம்! - இ.பி.கோ இங்கே ஈஸி!

நீதித்துறை
பிரீமியம் ஸ்டோரி
News
நீதித்துறை

- என்.ரமேஷ், வழக்கறிஞர்

காவல் நிலையம் என்றாலே மக்களுக்கு அச்சம். அதுவும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் படுகொலைக்குப் பிறகு இந்த அச்சம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தங்கள்மீது குற்றம் இல்லாதபட்சத்தில் எவரும் அச்சப்படத் தேவையில்லை. சட்ட விழிப்புணர்வுடன் சில விவரங்களைத் தெரிந்துகொண்டு கேள்விகளை எழுப்பும்பட்சத்தில் அத்துமீறும் காவலர்கள்கூடப் பின்வாங்குவார்கள். ஒரு நபர் புகாருக்கு உள்ளாகும்போதோ அல்லது புகார் கொடுக்கவோ காவல் நிலையம் செல்ல நேரிடலாம். இரு தரப்பினருக்குமே விசாரணையின்போது சில உரிமைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

* பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்ட, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது. அவர்கள் வசிப்பிடத்திலேயே விசாரிக்க வேண்டும். ஒரு பெண்ணை விசாரிக்கும்போது, பெண் போலீஸ் உடனிருக்க வேண்டும்.

* ஒருவர் எந்தக் காரணத்துக்காக விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. அடிக்கடி அழைப்பது மற்றும் நீண்டநேரம் காத்திருக்கவைப்பது இவற்றைத் தவிர்க்க, விசாரணைக்கான தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு சம்மன் அனுப்பச் சொல்லலாம்.

* வழக்கறிஞரை அழைத்துச் செல்லலாம். விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அவர் உடனிருக்கலாம்.

* விசாரணையில் கேட்கும் கேள்விக்கு பதில் கூறும்பட்சத்தில், தன்மீது ஏதேனும் குற்றம் இழைக்கப்படும் என்று கருதினால், அப்படியான கேள்விக்கு பதில் கூறத் தேவையில்லை.

* ஆட்சேபனைக்குரிய ஆவணங்களில் கையெழுத்திட மறுக்கலாம்.

* விசாரணையின்போது துன்புறுத்தப்பட்டால், உடனடியாக அரசு மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துகொண்டு, காவல் உயரதிகாரிகள், மனித உரிமை ஆணையம் அல்லது நீதிமன்றத்தில் புகாரளிக்கலாம். துன்புறுத்திய காவல் அதிகாரிமீது வழக்கு தொடரலாம்.

* கைதுசெய்யப்பட்டால், நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தும்போது, தான் துன்புறுத்தப்பட்ட விவரத்தையும் காயத்தையும் காண்பித்து பதிவுசெய்யச் சொல்லலாம்; மருத்துவ உதவி கேட்கலாம்.

சட்டப்படி காவல்துறை பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

* குற்றம் குறித்த தகவல் கிடைத்தவுடன் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்க வேண்டும். அறிவியல்பூர்வமாகச் சாட்சியங்களைச் சேகரித்து, குற்றத்தைக் கண்டுபிடிப்பதுதான் விசாரணை. ஒருவரைத் துன்புறுத்தி, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பது விசாரணை அல்ல. காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் நீதிமன்றத்தில் செல்லாது.

* ஒருவரைக் கைதுசெய்யும் காவல் அதிகாரி தனது பெயர், பதவி ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

* கைது செய்வதற்கு முன்பு, அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும், கைது விவரத்தை அவரின் உறவினர், நண்பர் அல்லது அவரது நலனில் அக்கறையுள்ள ஒருவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

* தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் தவிர, ஒரு பெண்ணை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும், சூரிய உதயத்துக்கு முன்பும் கைதுசெய்யக் கூடாது. ஒரு பெண்ணை பெண் போலீஸ்தான் கைதுசெய்ய முடியும். ஆண் போலீஸ் தொடக் கூடாது.

* கைதுசெய்யப்பட்டவரை உடல்ரீதியாக துன்புறுத்தக் கூடாது. 24 மணி நேரத்துக்குள் அருகிலுள்ள நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, சிறைக் காவலுக்கு அனுப்ப வேண்டும். கைதுசெய்தவரை 24 மணி நேரத்துக்கு மேல் வைத்திருப்பது சட்டப்படிக் குற்றமாகும்.

* ஒருவரை சிறைக் காவலுக்கு அனுப்பும் வரை அவரது உடல்நலத்துக்குக் காவல் அதிகாரிதான் பொறுப்பு.

* வரதட்சணை மற்றும் குடும்ப உறவு தொடர்பான புகார்களில், வழக்கு பதிவுசெய்யும் முன்னர் முதல்நிலை விசாரணை நடத்த வேண்டும். இரு குடும்பத்தினரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.

கைது சம்பவத்தின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான 11 அம்சங்கள் குறித்து டி.கே.பாசு என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இது காவல் நிலையத்தில் எழுதி வைத்திருப்பது, பார்வைக்காக மட்டுமல்ல; காவல்துறையினர் பின்பற்றவும்தான்.

அதேசமயம், இது தொடர்பாக மக்களிடையே சில தவறான கருத்துகளும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்.

வாரன்ட் இல்லாமல் கைதுசெய்ய முடியாது.

முடியும். வாரன்ட் இல்லாமல் கைதுசெய்யக்கூடிய குற்றங்களை, `Cognizable Offence’ என்கிறது சட்டம். கொலை, வன்புணர்ச்சி, வரதட்சணை மரணம், திருட்டு, நம்பிக்கை மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை வாரன்ட் இல்லாமல் கைதுசெய்யலாம். இவை தவிர, ஒருவர் மேன்மேலும் குற்றம் புரிவதைத் தடுக்கவும், சாட்சியங்களைக் கலைப்பதைத் தடுக்கவும் வாரன்ட் இல்லாமல் கைதுசெய்யலாம்.

சாதாரண காவலருக்குக்கூட அதிக அதிகாரம் உள்ளது.

பொதுவாக உதவி ஆய்வாளர் நிலைக்கு மேல் உள்ளவர்தான் காவல் நிலைய அதிகாரி என்ற வரையறைக்குள் வருவார். அவர்தான் வழக்கு பதிவு செய்யவும், விசாரணை மற்றும் கைது செய்யவும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.

சிறைக்குள்ளேயும் காவல் அதிகாரிகள் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

காவல் நிலைய அதிகாரிகள் சிறைக்குள் செல்ல முடியாது. அவர்கள் அதிகாரம் சிறைக்கு வெளியேதான்.

மொத்தத்தில், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.