Published:Updated:

லதா ரஜினிகாந்த்: வாடகை பணம் செலுத்தப்பட்டதா.. இல்லையா? - பள்ளி விவகாரத்தில் நடந்தது என்ன?

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி
லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி

கொரோனா பேரிடர் காரணமாக தற்போது பள்ளியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இடத்தை காலி செய்ய மேலும் ஓராண்டுக் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளராக லதா ரஜினிகாந்த் பதவி வகித்துவருகிறார். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளி அமைத்துள்ள இடம் வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் ஆகியோருக்குச் சொந்தமானது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை இந்த இடத்தின் வாடகை பாக்கியான 1.99 கோடி ரூபாயை, ராகவேந்திரா கல்வி சங்கம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள், வாடகை பாக்கியைப் பெற்றுத்தருமாறு 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி
லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி

நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு இடத்தின் உரிமையாளர்கள் பள்ளியைப் பூட்டினர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டது. தொடர்ந்து நீடித்துவந்த வாடகை பிரச்னை, கடந்த 2018-ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக தற்போது பள்ளியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இடத்தை காலி செய்ய மேலும் ஓராண்டுக் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மாத வாடகையாக ரூபாய் எட்டு லட்சம் மற்றும் டி.டி.எஸ் தொகையோடு செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வு, இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் பள்ளி இடத்தை காலி செய்ய, வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த காலகட்டத்திற்குள் இடத்தை காலி செய்யவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடும். மேலும், கிண்டியில் குறிப்பிட்ட முகவரியில் ஆஸ்ரம் பள்ளிக்கு 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Vikatan

இந்த உத்தரவு வெளிவந்ததும், சமூகவலைத்தளங்களில் #வாடகைஎங்கேரஜினி என்ற ஹேஸ்டேக் வைரல் ஆனது. இந்நிலையில், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் நீதிமன்ற அவமதிப்பு செய்யவிட்டதாகச் செய்திகள் வெளியாவதையடுத்து, அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். கொரோனா காலத்தில் பள்ளியை மாற்ற இயலாது என்று கால அவகாசம் கோரியிருந்தோம். அதன்படி, வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் வாடகை பாக்கி எதுவும் கிடையாது, அனைத்து தொகையும் முறையாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

விளக்க அறிக்கை
விளக்க அறிக்கை

லதா ரஜினிகாந்த் எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை. அப்படி வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. எங்கள் சங்கம் மற்றும் லதா ரஜினிகாந்த்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கான இடத்தை தேடிவருகிறோம். நாங்கள் நீதிமன்றத்தில் கூறியது போலவே செயல்படுவோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் வெளியானதும், #வாடகைஇங்கே_மூலபத்திரம் எங்கே என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரண்ட் ஆனது.

அடுத்த கட்டுரைக்கு